அடுத்தமாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்ற அனுமானம் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தக் கணிப்பு சரியாக அமைந்தால், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான ஒரு நிலையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு, கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
கொழும்பின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டே, இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது என்று கூறுவது கூட தவறல்ல.
கொழும்பின் தற்போதைய அரசியல் போக்கு இரு பிரதான கட்சிகளுக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்காது என்றும், அத்தகைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்றும் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேரம் பேசும் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கு, தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு உறுதியான ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இம்முறை 20 ஆசனங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற இலக்கை இரா.சம்பந்தன் முன்வைத்திருக்கிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், 30 ஆசனங்களை வெற்றி கொள்வோம் என்று தான் கூறிய போது, அதனை பலரும் எள்ளி நகையாடியதாகவும், ஆனால், 30 ஆசனங்களை கூட்டமைப்பு வெற்றி கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதுபோலவே, இம்முறை 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
கூட்டமைப்பு அதிகபட்ச இலக்கை எட்ட வேண்டுமானால், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 4 ஆசனங்களில் இரண்டை கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும்.
அதற்கு, 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இருக்கிறது.
2010ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், 33,268 வாக்குகளைத் தான் கூட்டமைப்பு பெற்றிருந்தது. எனவே, இம்முறை அதனைவிட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றால் தான் இரண்டு உறுப்பினர்களைப் பெறுவது குறித்துச் சிந்திக்க முடியும்.
இது கூட்டமைப்புக்கு உள்ள முக்கிய சவால்.
அங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இம்முறை பலவீனப்பட்டுப் போயிருந்தாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஐ.தே.க. இணைந்திருப்பது கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
இது, முதலிடத்தை பெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கிற்கு கடுமையான சவாலாக இருக்கும்.
மட்டக்களப்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி என்பன தனித்தனியாகப் போட்டியிடுவதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, கூட்டமைப்புக்கு சாதகமாக அமையலாம்.
அதேவேளை, வன்னி மாவட்டத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது, கூட்டமைப்புக்கு கூடுதல் வாய்ப்பை அளிக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, ஐ.தே.க., ஜனநாயக போராளிகளின் சுயேச்சைக் குழு என்று பல போட்டியாளர்கள் இருந்தாலும், கூட்டமைப்பே முன்னணியில் நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இங்கு கூட்டமைப்புக்குப் பிரதான சவாலாக இருப்பது எந்தக் கட்சி என்ற கேள்விக்கே சரியான பதிலைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது.
முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அரசியல் போட்டியாளராக ஈ.பி.டி.பி.யை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இருந்தது.
ஆனால், இப்போது ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிடுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகாரத்தை இழந்து விட்டது.
இதனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே கூட்டமைப்பின் பிரதான போட்டியாளராக இருக்கும் என்பது சிலரது கணிப்பாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியோ தமக்கு 3 ஆசனங்கள் கிடைக்கும், தாமே பிரதான போட்டியாளர் என்கிறது. இன்னொரு பக்கத்தில் சுயேச்சைக்குழுவாக களமிறங்கிய ஜனநாயகப் போராளிகளும் இருக்கின்றனர்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான பலமுள்ள போட்டியாளராக இந்தமுறை எந்தக் கட்சியும் இல்லை என்பதே உண்மை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை உடைக்கின்ற வேலையைத் தான் பெரும்பாலான கட்சிகள் செய்யப் போகின்றன.
பெரும்பாலான கட்சிகளினதும், சுயேச் சைக் குழுக்களினதும் நோக்கமும் அது தான்.
எவ்வாறாயினும் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தால் அதற்காக நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும்
ஒட்டுமொத்தமாக 20 ஆசனங்கள் என்பதை விட, 18 ஆசனங்களைப் பெறுவது கூட கடினமான இலக்குத் தான் என்றாலும், கூட்டமைப்புத் தலைமையிடம் கொஞ்சம் அபரிமிதமான நம்பிக்கை காணப்படுவது ஆச்சரியம் தான்.
அதேவேளை, 18 தொடக்கம் 19 வரையான ஆசனங்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆக, கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையில், தமது இலக்கு என்ன என்பது குறித்த முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது.
கூட்டமைப்பின் இலக்கு என்னவாக இருந்தாலும், மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்புத் தான் முதன்மையானது முக்கியமானது.
இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தையும், ஆதரவையும் பெறுவதில் சவாலான சில விடயங்கள் இருக்கின்றன.
அந்தச் சாவால்களை வெற்றி கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, முக்கியமான ஒரு துரும்பாக மகிந்த ராஜபக்ச வாய்த்திருக்கிறார் என்றே கூறலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கப் போகும் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் தீர்வு தொடர்பான யோசனை என்பனவற்றுக்கு அப்பால், பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடிய முக்கிய வாய்ப்பாக மஹிந்த மாறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷவின் மீள் அரசியல் பிரவேசம் என்பது தமிழ்மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்கும் ஒன்றாக இருப்பதால், அவரைத் தோற்கடிப்பதற்காக தமிழ்மக்களை இலகுவாக அணிதிரளச் செய்யும் வாய்ப்பு கூட்டமைப்புக்கு இருக்கிறது.
அதாவது மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை தடுக்கும் சக்தி தமக்கே இருக்கிறது என்று கூட்டமைப்பினால் இலகுவாக எடுத்துக் கூறவும், நம்பவைக்கவும் முடியும்.
ஏனைய கட்சிகளால் அத்தகைய ஒரு இணக்க நிலைக்குத் தயாராகவோ பேரம்பேசும் சக்தியாகவோ உருவெடுக்க முடியாது.
இந்த வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொண்டால், மஹந்த ராஜபக் ஷ மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு, தமிழ் வாக்காளர்கள் இந்த தேர்தலை மற்றொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கப் போகும் பிரச்சார உத்திகள் மட்டும் தான் அதன் பலத்தை உறுதிப்படுத்தப் போகிறது.
இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போதிய ஆதரவு மற்றும் அதிகாரத் தளம் இருப்பதுடன், கூட்டமைப்புக்கு எதிரான சக்திகளின் ஆதரவு மற்றும் அதிகாரத் தளம் பலவீனமடைந்திருக்கிறது.
இதுவும் கூட கூட்டமைப்புக்குச் சாதகமான ஒரு விடயம் தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறக்கூடிய ஆசனங்கள் என்பது, கொழும்பு அரசியலின் தலைவிதியை மட்டுமன்றி தமிழ்மக்களின் தலைவிதியையும் தீர்மானிக்கும் ஒன்றாக மாறக் கூடும்.
– கபில் –
-http://www.tamilwin.com