மலையக மக்கள் முதலாளிகளின் அடிமைகளா? இயந்திர மனிதர்களா?

sl_malaiyakam_001மலையகம் என்றவுடன் எங்களுக்கு, பச்சை பசேலென காட்சி தரும் செடிகளையும், அதன் அழகையும் தான் நாம் ரசிப்போம். அந்தப் பச்சை நிறத்துக்கள் எத்தனையாயிரம் தொழிலாளர்களின் இரத்தமும், வேர்வையும், பொதிந்து போய் கிடக்கின்றன என்பதை கவனிப்பதில்லை.

பொதுவில் நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருந்து விடுவோம். எம் சமூகத்தில் வாழும் மற்றையவர்கள் பற்றிய சிந்தனைகள் நமக்கு அறவே கிடையாது.

இலங்கைத் திருநாட்டின் பொருளாதாரத்தினை தீர்மானிக்கும் சக்தியாக மலையக தொழிலாளர்களும், தேயிலை கொழுந்துகளுமே முதன்மை பெறுகின்றன.

இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் மலையகத்தினை கைப்பற்ற படாதபாடு பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் முதல் வந்த போர்த்துக்கேயர்களும், பின்னர் வந்த ஒல்லாந்தர்களாலும் மலையகத்தை கைப்பற்ற முடியாமல் போனது.

ஆனால் பிரித்தானியர்களால் 1815ம் ஆண்டு மலையகம் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களே இந்த தோட்டத் தொழிலாளர்கள்.

தமது சொந்த நாட்டை விட்டு இங்கு வந்த அவர்கள் வந்த நாளில் இருந்து நொந்த நாட்களே அதிகம். அவர்களுக்கு குந்தியிருந்து அழவே ஓரிடம் இல்லாத நிலையை அவதானிக்க முடியும்.

மலையக மக்கள் படும் அவலங்கள் யாதென அறிய வேண்டுமாயின் சுற்றுலா செல்லும் உறவுகளே அவர்களின் லயன் குடியிருப்புக்களுக்கு சற்று சென்று பாருங்கள்.

தந்தை தொழில் செய்த அதே இடத்தில் தான்  மகனும் தொழில் செய்வான். ஒரு கவிஞர் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“ முந்தி ஒரு நாள் அவன் அப்பன் அங்கே தொழில் செய்தான். அவன் சிதை மேட்டில் நின்று இவன் மகன் தொழில் செய்கின்றான்.

தோட்டத் தொழிலாளர்களை இறந்தால் புதைக்க வேறொரு இடமில்லை. தேயிலைக் கொழுந்துகளுக்கே அவர்கள் உரமாகின்றார்கள்”.

உடல் பொருள் ஆவி என அத்தனையையும் கொடுத்து இலங்கையின் பொருளாதாரத்தினை நிலைத்து நிற்கச் செய்யும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க முடியவில்லை இவர்களால்.

கடந்த சில நாட்களாக 1000 ரூபா சம்பளம்உயர்வை கோரி இவர்கள் தொடர் மெதுவாக வேலை செய்யும் போராட்டம் நடத்துகின்றனர்கள்.

ஆனால் 1000 ரூபா பெற்றுக் கொடுப்பதற்கு மலையகத்தில் உள்ள அரசியல் வாதிகள் பின்னிக்கின்றனர். தங்கள் உயிரை குளிரில் அட்டைகள் மற்றும் குளவிகளிடம் இருந்து காப்பாற்றி தமது வாழ்விற்காக தேயிலை கொழுந்துகளை பறிக்கும் மக்களுக்கு ஒருநாள் வழங்கப்படும் சம்பளம்  450 ரூபா. போதுமா இது?

மலையக மக்களின் போராட்டக் கோரிக்கையை எமது அரசாங்கம் அன்றில் இருந்து இன்று வரை நிறைவேற்றவில்லை.

மக்களின் சம்பள உயர்வுக்காக மக்களுடன் போராடி சம்பளம் உரிய ஊதியத்தை பெற்றுக்கொடுக்க அன்றில் இருந்து மலையக அரசியல் வாதிகளும் உண்மையுடன் செயற்படவும் இல்லை 1973ம் ஆண்டில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக கூறி 10 நாட்களில் மலையக மக்களின் ஏகோபித்த தெரிவு நாங்களே என்று கூறிக்கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு தலைபட்சமாக போராட்டத்தில் இருந்து பின்வாங்கியது.

அவ்வாறான செயற்பாடே இன்றும் மலையக அரசியல் வாதிகளிடம் உள்ளன. இலங்கைக்கு பல கோடி வருமானம் கிடைக்கும் தேயிலை உற்பத்தியில் கொழுந்து பறிக்கும் மக்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் குடுப்பதற்கு கம்பனிகள் முதலாளிமார்கள் தொழிற் சங்கங்கள் மறுப்பது ஏன்?

மலையக மக்கள் முதலாளிகளின் அடிமைகளா? அல்லது வேலை செய்யும் இயந்திர மனிதர்களா? அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது போன்றும் எம் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்நாட்டின் அரசாங்கம் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.

அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் வெற்றிகளுக்கு மட்டுமே மக்களை தேடி செல்கின்றனர்.

அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என மக்கள் வாழ்வில் அரசியல் விளையாட்டு நடத்த முற்படுகின்றனர். அப்படியான அரசியல் வாதிகளை மக்கள் ஒழித்து நல்ல அரசியல் வாதிகளை உருவாக்கும் போது மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

மலையக மக்களை வேறு தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்வது இல்லை. அவர்களை கீழ்த்தர மக்கள் என நினைக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களை பார்ப்பதும் இல்லை.

இப்படியான நிலையில் தோட்டக் கம்பனிகள் மக்களின் போராட்டத்தை ஏற்று அவர்களுக்கு 1000 ரூபா சம்பளம் அதிகரிக்க வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தியிலும், பொருளாதாரத்திலும் நாட்டை தூக்கி நிறுத்தும் இம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும்.

வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தும் இம்மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு ஏனையவர்களும் குரல்கொடுக்க வேண்டும்.

-ஞா.பிரகாஸ்

-http://www.tamilwin.com

TAGS: