கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து இந்த முன்னேற்றம் காணப்படுவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொது நலவாய விவகார அமைச்சின் 2015ம் ஆண்டின் நடுப்பகுதிக்கான மனித உரிமை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதிய நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது என பிரித்தானியா கூறியுள்ளது.
நாட்டிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை முடக்கப்பட்ட இணையத்தளங்கள் மீண்டும் செயற்பட இடமளிக்கப்பட்டமை ஆகியவற்றையும் பிரித்தானிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் ஜனநாயகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் தெளிவாவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com