ஈழத்தீவின் அரசியலில் என்றுமே நிகழ்ந்திருக்காத பல நூதனமான சம்பவங்கள் கடந்த இரண்டு வார காலப்பகுதியில் அரங்கேறியிருக்கின்றன.
ஒருபுறத்தில் சிங்கள தேசத்தின் பக்கம் எமது கவனத்தை நாம் திருப்பினால், அங்கு அதியுச்ச அதிகாரத்தைக் கொண்டவராகத் திகழும் அரசுத் தலைவர் மைத்திரிபால சிறீசேன, தான் தலைமை வகிக்கும் கட்சியைக்கூட கையாள முடியாத கையாலாகாத நிலையில் உள்ளார்.
எந்த மகிந்த ராஜபக்சவை எதிர்த்துக் களமிறங்கிச் சிங்கள தேசத்தின் அதிபராக மைத்திரிபால சிம்மாசனமேறினாரா, அதே மகிந்தருக்கு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தலைமை வகித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இடமளிப்பதை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மகிந்தருக்குப் பெரும் சவாலாகத் திகழ்பவர் என்று வர்ணிக்கப்பட்ட சந்திரிகா அம்மையாரால்கூட இதுவிடயத்தில் எதனையும் செய்ய முடியவில்லை.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகிந்தர் களமிறங்கினால், தானும் தேர்தல் களத்தில் குதிக்க நேரிடும் என்று கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் அறிக்கை வெளியிட்ட அதே சந்திரிகா அம்மையார், இப்பொழுது வாய்மூடி மௌனியாகி, இலண்டனில் அஞ்ஞாதவாசம் புரிகின்றார். ஒரு வகையில் சந்திரிகா அம்மையாரின் கதையும், அவர் அடிக்கடி நினைவூட்ட முற்படும் பண்டாரநாயக்கா வம்சத்தின் அரசியல் பாரம்பரியம் பற்றிய புராணமும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் அவருக்கிருந்த செல்வாக்கும், 2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்ட பொழுதே முடிவுக்கு வந்தவைதான். எனவே அம்மையாரின் இப்போதைய அஞ்ஞாதவாசத்தையிட்டு நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் அவர் களமிறங்கியிருந்தால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.
ஆனாலும் இவ்விடத்தில் மைத்திரிபாலவின் நேர்மையை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என்பதைக் கடந்த 14.07.2015 அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மைத்திரிபால ஒப்புக் கொண்டிருப்பதோடு, நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தர் தோல்வியடைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் இந்த அறிவிப்பு ‘எல்லாம் இனிதே நடக்கின்றது’ என்று பரப்புரை செய்து வந்த மகிந்தரினதும், அவரது பரிவாரங்களினதும் வாக்கு வங்கியில் ஓரளவு பாதிப்பையாவது ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தவிர, ‘அரசுத் தலைவர் எங்களின் பக்கம்தான் நிற்கின்றார்’ என்று ரணிலும், அவரது அணியினரும் இனிப் பரப்புரை செய்வதற்கும் மைத்திரிபால வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு வழிவகை செய்துள்ளது.
கடந்த அதிபர் தேர்தலில் சிங்கள தேசத்தின் சிம்மாசனத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட மகிந்தர், நாடாளுமன்றம் என்ற பின்கதவின் வழியாகப் பிரதம மந்திரியாகி மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவாரா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுபற்றிக் கடந்த 14.07.2015 அன்று செய்தியாளர்களிடையே கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, கடந்த அதிபர் தேர்தலில் அண்ணளவாக ஐம்பத்தெட்டு இலட்சம் வாக்குகளைப் பெற்றவர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவிற்கே இம்முறை நிகழும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாக ஆரூடம் கூறியிருக்கின்றார்.
கடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை விட அண்ணளவாக நான்கு இலட்சம் அதிக வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறீசேன வெற்றியீட்டியிருந்தாலும், இவற்றில் தமிழ் மக்களின் ஆறு இலட்சம் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் செல்லக்கூடும் என்பதாலும், அண்ணளவாக ஏழு இலட்சம் வாக்காளர்களின் ஆதரவைக் கொண்ட ஜே.வி.பி தனித்துப் போட்டியிடுவதாலும், மகிந்த ராஜபக்சவிற்கே வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாக சுசில் பிரேமஜெயந்த விளக்கமளித்திருக்கின்றார்.
சுசில் பிரேமஜெயந்தவின் கணிப்பு சரியானதா? அல்லது அவர் தப்புக் கணக்குப் போடுகின்றாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் பல நூதனங்கள் நடைபெறும் இன்றைய அரசியல் சூழமைவில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புக்களையோ அன்றி ரணிலின் தலைமையில் அமையக்கூடிய அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து அவை ஆதரவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையோ நாம் புறந்தள்ளிவிட முடியாது.
சிங்கள தேசத்தின் அரசியல் நிலவரம் இவ்வாறு என்றால், தமிழர் தேசத்தின் அரசியல் நிலவரமும் இதனையொத்த வகையிலேயே உள்ளது.
‘தேர்தல்களில்தான் தமிழர்களுக்கு விடிவு இருக்கின்றது’ என்று காலம்காலமாகப் புளித்துப் போன அதே மாவை அரைத்து வரும் தமிழரசுக் கட்சியின் இக்காலப் பிதாமகரான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள், இம்முறையும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளை வழங்குவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் ஆறு இலட்சம் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே கிடைக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கூறிய ஆரூடத்துடன் ஒத்துப் போகும் வகையில் சம்பந்தரின் கருத்து அமைந்திருந்தாலும் யதார்த்தம் இவ்விதமாக இல்லை என்பதே உண்மை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ தாயகத்தில் அதிக அளவிலான ஆசனங்களைப் பெற்ற ஒரேயொரு கூட்டணி அமைப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் திகழ்ந்தாலும், அம்முறை அண்ணளவாக இரண்டு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் வாக்குகளை மட்டுமே அதனால் பெற முடிந்தது. ஆனால் அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குதித்த பொழுது அண்ணளவாக ஆறு இலட்சத்து முப்பத்து நான்காயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் இருந்த பொழுது தமிழீழ தாயகத்தில் கொடிகட்டிப் பறந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டிய பொழுது அதேயளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்ந்த மாற்றங்களை நாம் மறுக்க முடியாது.
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அண்ணளவாக ஒரு இலட்சத்துத் தொண்ணூற்று நான்காயிரம் வாக்குகளும், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அண்ணளவாக மூன்று இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம் வாக்குகளுமாகத் தமிழீழ தாயகத்தில் மொத்தம் ஐந்து இலட்சத்து நாற்பத்தெட்டாயிரம் வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் இருந்த பொழுது பெற்றுக் கொண்டதை விட அண்ணளவாக எண்பத்து நான்காயிரத்திற்குக் குறைவான வாக்குகளை வடக்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டது.
இதன் அடிப்படையிலேயே இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு இலட்சம் வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் என்று சுசில் பிரேமஜெயந்தவும், அதே பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது வாக்குகளைத் தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று சம்பந்தரும் கணிப்பிட்டிருக்கின்றார்கள் என்று நாம் கருதலாம்.
ஆனாலும் இவர்களின் கணிப்புக்கள் எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனனெ;றால் வடக்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்காக மட்டுமன்றி அதில் போட்டியிட்ட தண்டாயுதபாணி, விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் (எழிலன்), ரவிகரன் போன்ற வேட்பாளர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கைகள், அபிமானங்கள், அவர்களின் கடந்த கால வாழ்க்கைப் பின்னணி போன்றவற்றின் அடிப்படையிலும் தமது வாக்குகளை மக்கள் அளித்திருந்தார்கள். இதுதான் 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதை விட 2012ஆம், 2013ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த மாகாண சபைத் தேர்தல்களில் ஏறத்தாள இரட்டிப்பான அளவு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்வதற்கு வழிகோலியது எனலாம்.
தவிர இம்முறை நடைபெறும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் போட்டியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமன்றி, நடேசபிள்ளை வித்தியாதரனின் தலைமையில் ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற புதிய கட்சியும் களமிறங்கியிருக்கின்றது. இவ்விரு கட்சிகளின் களமிறக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதலாம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெறாத பொழுதும், இம்முறை நடைபெறும் தேர்தலில் அதற்குக் கணிசமான அளவு வெற்றிவாய்ப்புக்கள் இருப்பதாகவே கருதப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு பலர் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.
ஒரு நாடு – இரு தேசம் என்ற கோசத்துடன் உதித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய திம்புக் கோட்பாடுகளை முன்னிறுத்தியும், இறுதிப் போரில் நிகழ்ந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிகோரியும் செயற்பட்டு வருகின்றது. மிதவாத அரசியல் தளத்தில் தமிழ்;த் தேசிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2001ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத் தவறியவற்றை இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே செய்து வருகின்றது. இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தேர்தலில் வெற்றியடைய வைப்பதே தமிழீழ தாயக மக்களுக்கு நன்மை பயக்கும்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடுபிடித்திருந்த பொழுது சம்பந்தரை மையப்படுத்தித் தமிழ் இணையம் ஒன்றில் கேலிச்சித்திரம் ஒன்று வெளியாகியிருந்தது. ‘இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், நாடாளுமன்றம் சென்று எமது மக்களின் உரிமைக்காகப் போராடுவோம். எமது கோரிக்கைகளை சிறீலங்கா அரசு ஏற்க மறுத்தால் நாம் மீண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றிபெற்று, நாடாளுமன்றம் சென்று மீண்டும் போராடும்’ என்று சம்பந்தர் அவர்கள் முழக்கமிடுவது போன்ற தொனியில் அது அமைந்திருந்தது.
உண்மையில் இதனைத்தான் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்திருக்கின்றது. இதனைத்தான் இனி வரும் காலங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப் போகின்றது.
தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்றைய சூழமைவில் ஒரு உண்மையான தமிழ்த் தேசிய அமைப்பாக நாம் கருத முடியாது. ஏனென்றால் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்ட புளொட் ஒட்டுக்குழுவும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் ஆகியோரைப் போன்று இறுதிப் போரில் சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கியவர் புளொட் ஒட்டுக்குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்.
அத்தோடு, சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தோடு ஒட்டியுறவாடிக் கதிர்காமரின் வாரிசாக அழைக்கப்படுவதற்கு சகல தகுதியையும் கொண்ட மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனின் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அமைப்பு என்ற நிலையிலேயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
தவிர, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியைக் காரணம் காட்டி, வாளேந்திய சிங்கக் கொடியைக் கையிலேந்தி உவகையோடு அசைத்தும், சிங்களத்தின் சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் சுமந்திரனோடு கலந்து கொண்டவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள். இப்படிப்பட்ட சம்பந்தரும், சுமந்திரனும் இம்முறை நடைபெறும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகபோக வெற்றியைப் பெறும் பட்சத்தில், அதனைச் சிங்களத்துடன் அடித்தொண்டு அரசியலில் தாம் ஈடுபடுவதற்குத் மக்களிடமிருந்து கிடைத்த ஆணையாகவே கற்பிதம் செய்துகொள்வார்கள்.
எனவே, சம்பந்தன்-சுமந்திரன் குழுவின் ஏகபோக அரசியலுக்கு சவால் விடுக்கக்கூடிய சக்தியாகப் பரிணமிக்கக்கூடிய வகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு உறுதுணையாக நிற்கக்கூடிய விதத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இம்முறை நடைபெறும் தேர்தலில் வெற்றியீட்ட வைக்க வேண்டியது தமிழீழ தாயக மக்களின் கடப்பாடாகும்.
இதில் நூதனம் என்னவென்றால், சம்பந்தன்-சுமந்திரன் குழுவிற்கு சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட அனந்தி சசிதரன் (எழிலன்), திடீரெனத் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டதுதான். இதிலும் இன்னும் நூதனமானது, யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மற்றுமொரு தமிழ்த் தேசிய உணர்வாளரான ம.க.சிவாஜிலிங்கம் அவர்கள், அங்கு களமிறங்காது குருநாகல் மாவட்டத்தில் மகிந்தருக்கு எதிராகப் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருப்பதுதான்.
இவர்கள் இருவரின் நூதனமான முடிவுகளுக்கான உண்மையான காரணங்கள் இவர்களுக்குத்தான் வெளிச்சம். எது எவ்வாறாயினும் இவர்கள் எடுத்திருக்கும் நூதனமான முடிவுகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதற்கான உடனடித் தேவையையே இன்று தமிழீழ தாயக மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றன.
இவ்விடத்தில் வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் கட்சி பற்றிய கருத்தையும் பதிவு செய்வது அவசியமானது.
இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து, தடுப்புக் காவலில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளைக் கொண்டது இக்கட்சி. எதிரியிடம் சரணடைவது என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுக்குட்பட்ட ஒன்றல்ல. பொதுவாக எதிரியிடம் உயிருடன் பிடிபடுவது உறுதியாகும் பொழுது சயனைட் உட்கொண்டு அல்லது தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டு, அல்லது வேறு வழிகளைக் கையாண்டு தமது உயிரை மாய்த்துக் கொள்வதே தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கான மரபாகக் காலம் காலமாக இருந்து வந்துள்ளது. அதேநேரத்தில் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுப் பின்னர் எதிரியின் சிறையில் இருந்து மீண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மீளவும் இணைந்து கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய போராளிகளும் இருந்திருக்கின்றார்கள். எனவே இறுதிப் போரில் போராளிகள் சரணடைந்தது சரியா? தவறா? என்பது பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதை இவ்விடத்தில் தவிர்த்துக் கொள்கின்றோம்.
அதேநேரத்தில் இக் கட்சிக்கு தலைமை தாங்கும் வித்தியாதரன் அவர்கள் ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவூட்டியாக வேண்டும். உதயன், சுடரொளி நாளிதழ்களின் ஆசிரியராக விளங்கிய மூத்த ஊடகவியலாளர் என்ற வகையில் வித்தியாதரன் அவர்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்களான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், பா.நடேசன் ஆகியோர் உட்பட பல முக்கிய பொறுப்பாளர்கள், தளபதிகள் நேரடித் தொடர்பைப் பேணி வந்தனர். அத்தோடு தமிழீழ தேசியத் தலைவரை நேரில் சந்தித்து அவருடன் உரையாடும் வாய்ப்பும் வித்தியாதரன் அவர்களுக்குக் கிடைத்திருந்தது.
இதே மூத்த ஊடகவியலாளர் என்ற கோதாவில் ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருடனும் நேரடித் தொடர்பைப் பேணிய ஒருவராகவே வித்தியாதரன் விளங்கினார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தோடு மட்டுமன்றி, சிங்களத்தின் தலைமைப்பீடத்தோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டவராகவும் வித்தியாதரன் திகழ்ந்துள்ளார்.
அதேநேரத்தில் 2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தார் என்பதையும், கடந்த ஆண்டு தனது இணைய ஊடகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விற்கு ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கௌரவ அதிதியாக அவர் அழைத்ததையும் வைத்தே வித்தியாதரன் அவர்கள் சிங்களத்திற்கா? அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளிற்கா? உண்மையில் விசுவாசமாக விளங்கினார் என்பதையும் நாம் ஐயம்திரிபு இன்றிப் புரிந்து கொள்ளலாம்.
எனவே, ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் கீழ்த்தரமாக விமர்சிப்பவராகவும் விளங்கி வரும் வித்தியாதரனாலோ, அன்றி இன்று அவரது தலைமையை ஏற்றிருக்கும் சிங்கள அரசிடம் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளாலோ தமிழர் தேசத்திற்கு நன்மை கிட்டும் என்று நாம் எண்ணுவோமாக இருந்தால் அதனைவிட அபத்தம் எதுவுமே இருக்காது.
இவ்வாறு சிங்கள தேசத்திலும், தமிழர் தேசத்திலும் நிகழும் தேர்தல் நூதனங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தேவையையே தமிழீழ மக்களுக்கு உணர்த்துகின்றது.
-http://www.pathivu.com