ஒரு உறுப்பினரைக்கூட தெரிவு செய்யமுடியாத கட்சிகளும் களத்தில்: இரா.சம்பந்தன்

r_sambanthan_001தேர்தலுக்கு பின்னர் தாமதமில்லாமல் மிகவிரைவாக ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதற்காக மிக நீண்டகாலமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

லங்கசிறியின் 24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நடைபெறவிருக்கும் தேர்தல் மிகமுக்கியமான தேர்தல். இந்த தேர்தலுக்கு பிற்பாடு தாமதமில்லாமல் மிக விரைவில் ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்காக நாங்கள் நீண்ட காலமாக உழைத்திருக்கின்றோம். தற்பொழுது அந்த தீர்வு ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

ஆனபடியால் தமிழ் மக்கள் விசுவாசம் வைக்ககூடிய ஒரு கட்சியைப் பலப்படுத்தவேண்டியது அத்தியாவசியமாகும்.

இன்றைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான் தமிழ் மக்களை இந்த நாட்டில் விசுவாசமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இது இந்த நாட்டிலுள்ள சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.

ஆகையால் வாக்காளர்கள் தங்களின் வாக்குளை வீணாக்காமல் இம்முறை அதிகளவில் தேர்தலில் களமிறங்கியிருக்கும் சுயேட்சைக்குழுக்களையும் மற்றும் ஒரு உறுப்பினர்களைக்கூட தெரிவு செய்யமுடியாத சிறு சிறு கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிக்காமல் நாடாளுமன்றத்தில் ஒரு பலம்வாய்ந்த ஒரு கட்சியாக தங்களுடைய பணிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே ஒரு கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டியது அத்தியாவசியம்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் வேறுபல விடயங்கள் சம்பந்தமாகவும் எமது கருத்தை நாங்கள் தெரிவிப்போம்.

தமிழ் மக்கள் ஆகிய நீங்கள் அளிக்கபோகுகின்ற ஒவ்வொரு வாக்கும் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை பலப்படுத்துகின்ற வாக்குகளாக அமையவேண்டும்.

விசேடமாக சுயேட்சைக் குழுக்கள் மற்றும் சிறிய கட்சிகளை நிராகரித்து தமிழ் மக்கள் முழுமையாக பரிபூரணமாக தங்களுடைய வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளிக்கவேண்டும்.

அதன் மூலமாக ஒரு நியாமான நிரந்தரமான நடைமுறைப்படுத்தக்கூடிய நிர்ணயிக்ககூடிய ஒரு அரசியல் தீர்வைப்பெறுவதற்கு எங்களுடைய கரங்களை பலப்படுத்தவேண்டும். அந்த விதமாக நீங்கள் செயற்பட வேண்டுமென நான் மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர்  குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: