இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக நாங்கள் வாழத் தயாரில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,
எமது போராட்டம் ஒரு நீண்ட போராட்டம். நாம் நினைக்கிறோம் எமது போராட்டம் ஒரு முடிவுக்கட்டத்தை அடைவதாக. ஆனால் எந்தவொரு போராட்டமும் முடிவுக்கு வருவதற்கு அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும்.
அவ்வாறில்லை எனில் அந்தப் போராட்டம் வெற்றிபெற முடியாது. நாங்கள் மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் சிந்தித்து நடக்கவேண்டிய கால கட்டத்தில் நிற்கிறோம். கடந்த 10 வருடங்கள் மகிந்த ராஜபக்சவின் கொடுரமான ஆட்சி நடந்தது.
அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சற்றேனும் விசுவாசம் உள்ளவராக இருந்திருக்கவில்லை. அவருடைய முழுமையான நோக்கமும், தமிழ் மக்களை அடக்குவதிலும், தமிழர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதிலுமே இருந்தது.
இதனால் 10 லட்சம் மக்கள் நாட்டைவிட்டே வெளியேறினார்கள். திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், படை நிர்வாகம், மற்றும் பொருளாதார முடக்கல், கலாச்சார சீரழிவு போன்றவற்றினால், தமிழர்களை பலவீனப்படுத்தவே நினைத்தார்.
ஆனால் மக்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தங்கள் வாக்குகளால் மாற்றத்தை உருவாக்கினார்கள். இதனால் பெரும்பான்மையின மக்கள் மத்தியிலும் ஒரு மனமாற்றம் உருவாகியிருப்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
ஆனால் அந்த மாற்றத்தின் மீது நாம் முழுமையான நம்பிக்கையினை வைக்க முடியாது. நாம் தொடர்ந்தும் எங்கள் கருமங்களை செய்ய வேண்டும். 2011ம் ஆண்டு நாங்கள் அமெரிக்காவுக்கு சென்று பேசியிருந்தோம்.
இதனடிப்படையில் 2012ம் ஆண்டு அமெரிக்கா ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது. அதனை தொடர்ந்து 2013ம், 2014ம் ஆண்டுகளிலும்,
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் இவ்வருடம் சித்திரை மாதம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் ஒரு தீர்மானம் வரவிருந்த நிலையில் அது காலம் தாழ்த்தப்பட்டு செப்ரெம்பர் மாதத்தில் அந்த தீர்மானம் வெளிவரவுள்ளது.
அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள்,
முழுமையாக அமுல்ப்படுத்தப்படவேண்டும். சர்வதேச சமூகம் இன்றைக்கு இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவேண்டும். என்பதில் உறுதியாக இருக்கின்றது. காரணம் என்னவென்றால் அந்தளவுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற ஒரு இனம் அழிக்கப்பட்டிருக்கின்றது. அடக்கப்பட்டிருக்கின்றது. லட்சக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இறுதிப்போரில் 70 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலைகள், நலன்புரி முகாம்கள், மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. மருந்து மற்றும் உணவு வருவதை தடுத்திருக்கின்றார்கள் சர்வதேச மனிதவுரிமை சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன.
அதனை நாங்கள் நாடாளுமன்றத்திலும் பதிவு செய்திருக்கின்றோம். நாங்கள் அவ்வாறு பதிவு செய்யும் போது அங்கிருந்த எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த இழப்புக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.
இந்த நிலமை மேலும் தொடரக்கூடாது. இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டும். முல்லைத்தீவிலும், மன்னாரிலும், சம்பூர் மற்றும் வலி, வடக்கிலும் சிறியளவில் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். மக்களுக்கு வீட்டுவசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் முழுமையாக கிடைக்கவேண்டும். ஆட்சிமாற்றத்தின் பின்னர் பிரதமர் தலமையிலான
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிக பலம் இருந்திருக்கவில்லை.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரும் இந்த நிலமை நீடிக்க முடியாது. நாம் சரித்திரரீதியாக வாழ்ந்த தாயகத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும்
வகையிலான ஒரு தீர்வு கிடைக்கவேண்டும். அதனையே நாம் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கின்றோம்.
நாம் ஒரு தனித்துவமாக மக்கள் கூட்டம். ஐ.நா ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ள அந்த ஒப்பந்தத்தில் நாம் கலை, கலாச்சாரம், பண்பாடு, மற்றும் மொழி மற்றும் தனித்துவமான வாழ் விடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு இனம் எமக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதை அதன் ஊடாக ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதன் ஊடாக சகல வழிகளிலும் எம்மை நாமே ஆழக்கூடிய அதிகாரம் கொண்ட எமது இறமை அடிப்படையில் சமஸ்டி முறையிலான சுயாட்சி அதிகாரம் வேண்டும். அது தமிழர்களின் உரிமை அதனை யாரும் மறுக்க முடியாது.
நேற்றய தினம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கும் ஒரு பெரும்பான்மையின கட்சி கூறியிருக்கின்றது. அதிகூடிய அதிகாரப் பகிர்வு ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் என ஒற்றையாட்சி என்பது என்ன? பெரும்பான்மை ஆட்சி. நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக வாழவேண்டுமா?
அவ் விதமான ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பகிர்வு எப்படி? ஒருமித்த நாட்டுக்குள் நாங்கள் சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் எங்கள் நியாயமான அரசியல் அபிலாசைகள், நிறைவேற்றிக்
கொள்ளும் அரசியல் வல்லமை எமக்கு இருக்கவேண்டும்.
இந்நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகூடிய அதிகார பகிர்வு என கூறுபவர்களை தமிழ் மக்கள் நாங்கள் நிராகரிக்கவேண்டும். அது உங்கள் கடமை. இதேபோன்று மற்றொரு கட்சி போட்டியிடுகின்றது.
அவர்கள் வெற்றிலையை விட்டுவிட்டு இப்போது வீணைக்கு வந்துவிட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோது மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வாக்கு கேட்கிறார்கள்.
இதேபோன்று இன்னொரு கட்சியும் கேட்கிறது. ஒரு இடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எனவும் இன்னொரு இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
உன்மையில் கட்சியின் பெயர் என்ன? அவர்களுடைய கட்சி ஆரம்பத்தில் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டது. டீ.எம்.சேனநாயக்கா காலத்தில் அமைச்சுப் பதவி வகித்தவர்கள். அவர்கள்
இப்போது ஒருதேசம் இரு நாடு என கூறுகிறார்கள்.
நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் அதில் சந்தேகம் இல்லை. ஒரு நாட்டுக்குள் நாம் தீர்வை காண விரும்புகிறோம். ஆதனை விட நாமே சர்வதேசத்திலும், உள்நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட
ஒரு அரசியல் கட்சி உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் இருந்து வருபவர்கள் எங்களையே சந்திக்கின்றார்கள்.
மற்றவர்களை சந்திக்கவில்லை. எனவே 7 ஆசனங்களையும் எமக்கு கொடுங்கள் ஏனைய கட்சிகளை உதறி தள்ளுங்கள்.
அதன் ஊடாகவே அரசியல் தீர்வை அடைய முடியும். நாம் இந்தநாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ தயார் இல்லை என்றார்.
-http://www.tamilwin.com