கூட்டமைப்பின் வெற்றிக்கான மந்திரம்!

3tnaஇருபது ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம், உயர்ந்தபட்ச பேரம் பேசும் பலம் ஒன்றைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரிதும் நம்பியிருப்பது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தான்.

காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலக்கு வைத்திருக்கும் 20 ஆசனங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்களைக் கொண்டுள்ளது இந்த யாழ்ப்பாண மாவட்டம்.

வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று.

இங்கிருந்து 7 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்படவுள்ளனர். அதுபோலவே, கிழக்கில் அம்பாறையில் இருந்தும் 7 பேர் தெரிவாகவுள்ளனர்.

இருந்தாலும், அம்பாறையிலிருந்து ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு உறுப்பினர்களைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெற முடியும்.

காரணம், அங்கு சிங்களவர்கள் தான் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அதற்கடுத்து முஸ்லிம்கள் உள்ளனர். மூன்றாவது நிலையில் தான் தமிழ் வாக்காளர்களின் பலம் உள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. மொத்தமுள்ள 7 ஆசனங்களுமே, தமிழ் வேட்பாளர்களால் தான் நிரப்பப்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதில் தான் சிக்கலே தவிர, தமிழர்கள் தான் தெரிவு செய்யப்படுவர் என்பதில் சந்தேகமில்லை.

சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களும் இங்கு போட்டியிடுகின்றனரேயானாலும், ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குரிய வாக்குகளைக் கூட அவர்களால் பெறமுடியாது.

தமிழ் வேட்பாளர்களால் மட்டுமே வெற்றிபெறும் வாய்ப்புள்ள ஒரே மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே இருக்கின்ற நிலையில், இங்கு தமிழ்க் கட்சிகள் மாத்திரமன்றி தேசியக் கட்சிகளும் கடுமையான போட்டியில் இறங்கியிருக்கின்றன.

கடந்த தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 9 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால், இம்முறை இந்த எண்ணிக்கை 7 ஆக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பகிர்வு மோதல் இன்னும் தீவிரம் பெற்றிருக்கிறது. அதிகபட்ச வாக்குகளைப் பெறுவதன் மூலம்தான், ஆசனங்களை உறுதி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் சவால் மிக்கதாகவே உள்ளது.

கடந்த காலங்களில் எதிர்கொண்ட சவால்களை விட, இந்தமுறை கூட்டமைப்புக்கு வேறு வகையான சவால்கள் காணப்படுகின்றன. இம்முறை கூடுதலான போட்டியாளர்களுக்கிடையில், குறைந்தளவு ஆசனங்களைப் பங்கிட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என்ற நம்பிக்கையை வேட்புமனுத் தாக்கலின்போது, வெளியிட்டிருந்தார் அதன் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள அசாத்திய நம்பிக்கையா? அல்லது வாக்காளர்களை அவ்வாறு நம்ப வைக்கும் உத்தியா? என்ற கேள்விக்கு ஆகஸ்ட் 17ஆம் திகதி தான் விடை கிடைக்கும்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை.

இந்த 7 ஆசனங்களில் அதிகபட்சமானவற்றைக் கைப்பற்றுவதன் மூலமே, கூட்டமைப்பினால் தமது பிரதான இலக்கை நோக்கி நகர முடியும்.

இந்த ஏழு ஆசனங்களில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சிறு சரிவும் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த இலக்கில் சறுக்கலை ஏற்படுத்தும்.

எனவே, வடக்கு, கிழக்கிற்குள் வரையறுக்கப்பட்ட ஒரு வாக்காளர்களை மட்டும் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது ஒரு வாழ்வா, சாவா என்ற போராட்டம் என்று தான் கூற வேண்டும்.

இந்த வாழ்வா, சாவா போராட்டம் என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கானது அல்ல அவர்கள் இம்முறை வகுத்துள்ள இலக்கிற்கானது. எனவே, எப்படியாவது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், அதிகபட்ச ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான உத்திகளை சரியாக வகுக்கத் தவறினால், அந்தப் பிரதான இலக்கு பிசகி விடும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகபட்ச ஆசனங்களுடன் கூட்டமைப்பு தனது பிரதான இலக்கை எட்ட வேண்டுமானால், அதற்கு இருக்கின்ற ஒரு வழி, உச்சக்கட்ட வாக்களிப்பை உறுதிப்படுத்துவது மட்டும்தான்.

இது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒரு விடயமல்ல. வடக்கு, கிழக்கு முழுவதிலும் தமிழர்களை அதிகளவில் வாக்களிக்கச் செய்வதன் மூலமும், நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமுமே, கூட்டமைப்பின் இலக்கு சற்று இலகுவாக்கப்படும்.

அதிகபட்ச வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு வந்த போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உச்சபட்சமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை கடந்த தேர்தல்கள் நிரூபித்துள்ளன.

ஆனால், இம்முறை அதிகளவு கட்சிகள், சுயேச்சைகளின் மூலம் வாக்குகளைப் பிரிக்கும் உத்திகள் கையாளப்படுகின்ற நிலையில், அந்த உத்தியை உடைப்பதற்காக உள்ள ஒரே ஆயுதம் அதிகபட்ச வாக்களிப்பு மட்டும்தான்.

உச்சக்கட்ட வாக்களிப்பு நிகழும்போது, வாக்குகளைப் பிரிக்க நிறுத்தப்பட்ட கட்சிகள், சுயேச்சைகளால் தாக்குப்பிடிக்க முடியாது.

இப்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்று குவிக்கப்பட்ட இலக்காக இருக்க வேண்டியது, விருப்பு வாக்குகளுக்கான பிரசாரம் அல்ல.

சிறிய அல்லது அதிகம் செல்வாக்கில்லாத கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் ஓரம்கட்டுவதுதான்.

செல்லுபடியான வாக்குகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழு வெற்றி வாய்ப்பிலிருந்து ஒதுக்கப்படும்.

அதாவது, யாழ்ப்பாணத்தில் போட்டியிடும், கட்சிகள், குழுக்களைப் பொறுத்தவரையில் சிலவற்றினால் மட்டும்தான், நான்கு இலக்க வாக்குகளையாவது பெற முடியும். ஏனையவை பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று இலக்க வாக்குகளைத் தான் பெறும்.

ஐ.தே.க., ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கிதான் இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிலையான ஒரு வாக்கு வங்கி இருந்தாலும், காலச்சூழலைப் பொறுத்து, மிதக்கும் வாக்காளர்கள் அதிகளவில் அவர்கள் பக்கம் சாயவோ அல்லது வாக்களிக்காமல் விடவோ வாய்ப்புள்ளது. இப்போதைய நிலையில், ஆகக்குறைந்த வாக்கு வங்கியை அல்லது வாக்குகளை திரட்டும் சக்தியைக் கொண்டுள்ள கட்சிகளை, போட்டிக் களத்தில் இருந்து அகற்றுவதுதான் முக்கியமானது.

மிக அதிகபட்ச வாக்களிப்பு இடம்பெற்றால், போட்டிக் களத்தில் நிற்பதற்குத் தேவையான குறைந்தபட்ச வாக்குகளின் எண்ணிக்கையும் உயரும்.

குறைந்தளவு வாக்குகளைத் திரட்டும் ஆற்றலுள்ள கட்சிகள், குழுக்கள் அந்த இலக்கை எட்ட முடியாமல் போகும். எனவே, அந்த உச்சநிலைக்கு குறைந்தபட்ச வாக்குகளின் எல்லையைக் கொண்டு சென்று நிறுத்துவதன் மூலம் கூட்டமைப்பு தனது வெற்றிக்கான கதவைத் திறந்து கொள்ளலாம்.

2010ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில், 1,68,277 வாக்குகள் அளிக்கப்பட்டன. அதில், 1,48,503 வாக்குகளே செல்லுபடியானவை.

இதில் 5 சதவீதமான- 7,425 வாக்குகளுக்கு குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் ஆசனங்களைப் பெறும் தகுதியை இழந்தன.

அவ்வாறு தகுதியிழந்த கட்சிகளில் 6,362 வாக்குகளைப் பெற்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் ஒன்று.

அந்தக் கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க. ஆகிய கட்சிகள் தான் ஆசனங்களைப் பெற தகுதி பெற்றன.

அவை 5, 3 ,1 என்ற அடிப்படையில் ஆசனங்களைக் பகிர்ந்து கொண்டன. கடந்த தேர்தலில் ஐ.தே.க.வுக்கு கிடைத்த வாக்குகள், 12,624 ஆகும்.

இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்த ஈ.பி.டி.பி. தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், கடந்த தேர்தலில், கிடைத்த 47,622 வாக்குகள் இம்முறை பிரிந்து போகும் நிலை உள்ளது.

இந்தக் கட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில், யாழ், கிளிநொச்சி இணைந்த மாவட்டங்களில், அதிகபட்சமாக 3,24,015 வாக்குகள் அளிக்கப்பட்டன. இவற்றில் செல்லுபடியானவை 2,99,001 ஆகும்.

இந்த உயர்ந்தபட்ச வாக்களிப்பினால், யாழ்ப்பாண மாவட்டத்திலும் சரி கிளிநொச்சியிலும் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்தான் வெற்றி எல்லைக்குள் நின்றன.

இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தகுதி இழப்பு செய்யப்படாமல் தப்பிக் கொள்வதற்கு, 12,677 வாக்குகளைப் பெற வேண்டியிருந்தது. அதுபோலவே, இம்முறையும், மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களை வாக்களிப்பு நிலையத்துக்கு கூட்டமைப்பு அழைத்து வருமேயானால்,

உதிரிக்கட்சிகளை ஓரளவுக்கு ஓரம் கட்டி விடலாம். அதன் மூலம் மிச்சங்களில் பங்கு போடும் அவற்றின் வாய்ப்பு இல்லாமல் செய்யப்படும்.

5,29,239 வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், 70 சதவீதமானோரை வாக்களிக்க அழைத்து வந்தால், உதிரிக் கட்சிகளை இலகுவாக ஓரம்கட்டிவிடலாம்.

அதாவது 3,70,000 செல்லுபடியான வாக்குகள் அளிக்கப்பட்டால், தகுதியிழப்புச் செய்யப்படாமல் தப்பிக்கொள்வதற்கு கட்சிகள் குறைந்தபட்சம் 18,500 வாக்குகளைப் பெற வேண்டியிருக்கும். அது பெரும்பாலான கட்சிகளுக்கு முடியாத காரியம்.

அத்தகையதொரு நிலையில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்ற முடியும்.

வாக்களிப்பு சதவீதம் 80, 90 சதவீதம் என்று காணப்பட்டால் இது இன்னமும் கூட்டமைப்புக்குச் சாதகமாக அமையும்.

ஆனால், அத்தகைய பிரமிக்கத்தக்க வாக்களிப்புக்கு தமிழ் மக்கள் தயாராகவும் இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டும் சாத்தியப்படுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி

– சத்ரியன் –

-http://www.tamilwin.com

TAGS: