பாகிஸ்தானில் இருந்து இலங்கை உட்பட சில நாடுகளுக்கு ஹெரோயின் போதைப் பொருளை விநியோகிக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பின் தலைவரான மொஹமட் முபாரக் மொஹமட் என்பவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உற்ற நண்பர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச மற்றும் மொஹமட் என்ற நபருடன் காணப்படும் புகைப்படங்கள் கூட தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், பாதாள உலக குற்றச் செயல்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழித்து சட்டத்தை வலுப்படுத்துவதாக மகிந்த சிந்தனையில் வழங்கிய உறுதிமொழிகளை அப்பட்டமாக மீறுபவர்கள் தற்போது தேசப்பற்று குறித்து பேசும் ராஜபக்சவினரே என்பது தெளிவாகியுள்ளது.
வடக்கில் போராட்ட ரீதியான நிலைப்பாடுகள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுவதை தடுக்க அங்கு போதைப் பொருள் மற்றும் ஆபாசப் படங்களை பரப்புமாறு ராஜபக்சவினர் ஆலோசனை வழங்கியிருந்தாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன எனவும் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சட்டம், காவற்துறை மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைத்து இலங்கையில் போதைப் பொருளை மூன்று வருடங்களில் முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
– www.tamilwin.com