தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை! காணாமல் போனோருக்கு நட்டஈடு!- முல்லைத்தீவில் ரணில் உறுதி

ranillஇனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவில் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய அரசாங்கத்தில் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முன்னியவளை விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன், வேட்பாளர்களான ஜனகன், விஜிந்தன், ரோஹன கமகே உட்பட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

33 வருடங்களுக்குப் பின் அமைதியான முறையில் பயமின்றி பிரசாரக் கூட்டங்களை நடத்தும் சூழல் வடக்கில் தற்போது நிலவுகிறது. இதற்கு முன் ஜே.ஆரின் காலத்தில் 1982ல் இதுபோன்று பிரசாரக் கூட்டங்களை நடத்த முடிந்தது. அதற்குப் பின்னர் யுத்தம் காரணமாக அமைதியான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலையே தொடர்ந்தது.

முல்லைத்தீவு மக்களை நேரில் சந்தித்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முல்லைத்தீவும் ஒன்று. இந்த மாவட்டம் முழுமையாக அழிவடைந்தது. யுத்தத்தின் பின்னர் மக்கள் எதிர்பார்த்தவை அவர்களின் வாழ்வில் இடம்பெறவில்லை.

மீளமைப்புப் பணிகள் காலதாமதமாகின. அதேபோன்று இப் பிரதேசங்களில் சுதந்திரமான சூழ்நிலையும் காணப்படவில்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூலமே ஒரிரு வேலைத்திட்டங்களாவது முன்னெடுக்கப்பட்டன.

இன்று மக்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாம் அரசாங்கத்தை அமைத்து 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம் அதன் மூலமே இத்தகைய சுதந்திர சூழ்நிலை ஏற்பட்டது. 100 நாட்களில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியுமென எவரும் நினைத்திருக்கவில்லை. நாம் அதை செய்தோம்.

நாம் தற்போது புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். 60 மாதங்களில் இதனை மேற்கொள்ளவுள்ளோம். இதனைச் செய்வதற்கு எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம்.

இதற்கிணங்க ஏனைய எட்டு மாவட்டங்களிலிருந்தும் எமக்கு அதிகமான எம்.பிக்கள் வருவார்கள். எமது முக்கிய நோக்கம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவது.

அதற்காக வடக்கு மக்கள் எமக்கு வடக்கிலிருந்தும் எம்.பிக்களைப் பெற்றுத்தர வேண்டியது முக்கியம். தமிழ், சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற எம்.பிக்கள் எமக்கு அவசியம். அவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளானவுடன் அவர்களே உங்களுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பர்.

கடந்த காலங்களில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே உங்களுக்காக சேவை செய்தார். இவற்றை மேற்கொள்ள இன்னும் எம்.பிக்கள் தேவைப்படுகின்றனர். மக்களுக்காக வேலை செய்வதென்றால் அரசாங்கத்துக்குள் இருப்பது முக்கியம். அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து எதுவும் செய்ய முடியாது. அரசாங்கத்திற்கு வெளியே இருந்து நல்ல ஆலோசனைகளை வழங்க முடியுமே தவிர வேலை செய்ய முடியாது.

நாம் புதிய இலங்கையை உருவாக்கும் போது புதிய முல்லைத்தீவும் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு மக்களுக்காக புதிய முல்லைத்தீவு, புதிய வன்னி மாவட்டம் உருவாக்கப்படுவது அவசியமாகும். மக்கள் சுபீட்சமாக வாழக்கூடியதாக நாம் வன்னியை மாற்ற வேண்டும். அதற்கு எமக்கு 60 மாதங்கள் கூட அதிகமே.

உதவி செய்பவர்களுடன் இணைந்து மிக விரைவில் எம்மால் அதனை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுண்டு.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். விசாரணைகளின்றி உள்ளோரை நாம் விரைவாக விடுவிப்போம்.

காணாமற் போனோர் பற்றி உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்காக புதிய பாராளுமன்றத்தில் புதிய சட்ட மொன்றை நிறைவேற்றவும் தீர்மானித்துள்ளோம்.

யுத்தத்தினால் பெண்களை பொறுப்பாளராகக் கொண்ட குடும்பங்கள் அதிகமாகியுள்ளன. விதவைகள் உள்ளனர். அவர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

-http://www.tamilwin.com

TAGS: