தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம்?!

3tnaஈழப்போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வடிவம் மெளனிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, மிக முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தல் இப்போது களை கட்டியிருக்கிறது. தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக்கும் முக்கியமான தேர்தலாக பலராலும் கணிக்கப்பட்டு உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.

குடும்ப ஆட்சி, ஜனநாயக இடைவெளி குறைப்பு, மனித உரிமைமீறல்கள் தகர்ந்து நல்லாட்சி உருவாகியுள்ளதாக கூறப்படும் இத்தருணத்தில் போரின் போது இடம்பெற்ற யுத்தக்குற்றச்செயல்கள் மற்றும் தீவிரமான மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த தேர்தலின் பின் முடிவு காண வேண்டியது அவசியமாகியுள்ளது. மேற்கத்தைய நாடுகளின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி நடைபெற்ற விசாரணை அறிக்கை, தேர்தல் இடம்பெற்று சில நாட்களின் பிறகு அல்லது செப்டெம்பர் மாத முற்பகுதியில் வெளியாகும் என தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கை பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வதேச பொறிமுறை ஒன்றை வேண்டி நிற்க வேண்டுமென்பது அனைத்து தமிழர்களினதும் எதிர்பார்ப்பு.

இதுவரை காலமும் தமிழ்த்தரப்பு அரசதரப்பு என்று இருந்து வந்த வட-கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற பிரதிநித்துவ போட்டி இம்முறை தமிழர் தரப்புகளிலேயே போட்டியிடும் பலரால் பலவீனப்பட்டு போய்விடுமோ என்கிற அச்சம் உருவாகியிருக்கிறது. இதுவரை தேர்தல் புறக்கணிப்பில் கவனம் செலுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.மு) மற்றும் முன்னாள் போராளிகளை இணைத்து என்.வித்தியாதரன் தலைமையில் போட்டியிடும் சுயேட்சைக்குழு என்பனவற்றால் இம்முறை தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் சில காலத்துக்கு முன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பகிரங்க விவாதத்தை உற்றுக்கவனித்திருப்பீர்களானால் இரு கட்சிகளின் கொள்கைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால், அதை அடைவதற்கான வழிமுறைகளில் வேற்றுமை எடுத்து சொல்லப்பட்டது. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் முற்றுமுழுதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தாக்கியே த.தே.ம.முன்னணியின் பிரச்சாரம் இத்தருணம் வரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய கொள்கை மற்றும் தீர்வுகளுக்கான பாதை (Road Map) தொடர்பில் எதுவும் தெளிவாக இல்லை. இந்த எதிர்ப்பு அரசியல் த.தே.கூட்டமைபில் அதிருப்தி கொண்டோரை வேண்டுமானால் தம் பக்கம் ஈர்க்கலாம். ஆனால் நிரந்தர வாக்கு வங்கியை தம்பக்கம் உருவாக்க வேண்டுமானால் தெளிவாக கொள்கை மற்றும் தீர்வுக்கான பாதை என்பன மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம்.

புலம்பெயர் தமிழரின் ஒருதரப்பின் கடும்போக்கான நிலையை த.தே.ம.முன்னணி பிரதிபலிக்கிறது என்கிற பொதுவான குற்றச்சாட்டுகளை இம்முறை ஓரங்கட்ட முடியவில்லை. சமூகவலைத்தளங்களிலும் புலம்பெயர் ஊடகங்களிலும் முன்னெடுக்கப்படும் ‘மாற்றத்துக்கான அழைப்பு’ அதற்கு சாட்சி. அவர்களின் முக்கியமான குற்றச்சாட்டு த.தே.கூட்டமைப்பு கொள்கைகளில் இருந்து பின்வாங்கிவிட்டது என்பது தான். த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அன்று தொடக்கம் பல தேர்தல்களில் முன்வைத்து தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியை அரசியல் தீர்வாக முன்மொழிந்திருக்கிறது. த.தே.ம.முன்னணி ‘இரு தேசம், ஒரு நாடு’ கொள்கையை முன் வைக்கிறது. ஆக ஒரு நாடு என்பதை இரு கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருந்தாலும், ஏறக்குறைய சமஷ்டியை தான் இருவரும் கோரி நிறகின்றனர்.

அதுபோக த.தே.ம.முன்னணியின் அடுத்த குற்றச்சாட்டு த.தே.கூ உள்ளக விசாரணையை பொறுப்புக்கூறலுக்கு வேண்டி நிற்கிறது அல்லது அதற்கு வழிசமைத்திருக்கிறது என்பதாகும். ஆனால் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப பொறுப்புகூறல் பொறிமுறையை சர்வதேச விசாரணையினூடே அமைப்பது தான் இரு கட்சிகளினதும் கோரிக்கையாக இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது அது பலவீனமான தீர்மானமாக இருந்தாலும் அதை வலுப்படுத்தி முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அத்தருணத்தில் தீர்மானத்தை முற்றாக எதிர்த்ததுடன் அது தொடர்பில் எதிர்மறை பிரச்சாரங்களை செய்த த.தே.ம.மு அதற்கு என்ன மாற்று என்பதை அப்போதும் சொல்லவில்லை. இப்போதும் சொல்லவில்லை. கள யதார்த்தங்களுக்கு ஏற்ப த.தே.கூட்டமைப்பு செயற்படுவதாகவும் தீர்மானத்தை வலுப்படுத்த உழைப்பதாகவும் அறிவித்து செயற்படுத்த முனைந்த தருணத்தில் த.தே.ம.மு சந்தர்ப்பவாத அரசியலை செய்தது செய்துகொண்டிருந்தது. சுருங்ககூறின் முட்டையிடும் வாத்தின் வயிற்றை வெட்டி பார்க்கவே முற்பட்டது, முற்படுகிறது.

மறுபுறத்தில் த.தே.கூட்டமைப்பில் இணைந்திருந்து பின்னர் வெளியேறிய வித்தியாதரன், முன்னாள் போராளிகளை திரட்டி கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வீம்புடன் எத்தனித்தது அரசியல் குறைபிரசவமாக பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் விடிவுக்காக தங்களை அர்ப்பணித்தோருக்கு அரசியல் செய்ய உரிமை இல்லை என்பதல்ல அதன் அர்த்தம், அரசியல் பிரவேசத்துக்கான தகுந்த தருணம் இதுவல்ல என்பதே. ஜனநாயக அரசியலில் பல்கட்சி பங்கெடுப்பு என்பது அடிப்படையானது. ஆனால் தமிழர்களின் இனப்பிரச்சினை வரலாறு தொட்டு காணப்பட்ட ‘ஏக பிரதிநித்துவம்’ பேச்சுமேசைக்கு வலுச்சேர்க்கும் என்பது ஐதீகம்/யதார்த்தம். உடன் முடிவுகளுக்கும் இலகுத்தன்மைக்கும் இந்த ஏகபிரநித்துவ முறை உதவும். தற்போதைய நிலையில் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்பதே பெரும்பாலான மக்களின் கவலையாக இருக்கிறது. ஏற்கனவே கடும் கண்காணிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகி இருப்போரை இன்னும் ஒரு இக்கட்டான நிலைக்கு தற்போதைய அரசியல் பிரவேசம் தள்ளிவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

த.தே.கூட்டமைப்பு நீண்ட பலசுற்று பேச்சுவார்த்தைக்கு பின் அங்கத்துவ கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகளை நிறைவு செய்தது. ஏற்கனவே மக்களுக்கு பழக்கமான பழைய முகங்களே பெரும்பாலும் வேட்பாளர் பட்டியலில் நிரம்பியிருக்கிறது. பலத்த போட்டி காணப்படும் சூழலில் மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமானார்கள் என்பது எவ்வளவு நன்மையோ அதேயளவு தீமையும் உண்டு. த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் குடும்பங்கள் வெளிநாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மக்கள் சந்திப்பு/ தொகுதி விஜயம் குறைவு என்பது பொதுவாக மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது. அதுபோக த.தே.கூட்டமைப்பை இன்னும் பதிவு செய்யாதது எதிர்த்தரப்புனருக்கு வெறும் வாய்க்கு அவல் போலாகியுள்ளது. ஏற்கனவே இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தேர்தல்களின் பின் பதிவு இடம்பெறும் என்பதும் பிந்தைய செய்தியாக இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கப்ப்டுவதில்லை என்பது காலம் காலமாக முன்வைக்கப்படும் மற்றுமொரு குற்றச்சாட்டாகும். த.தே.கூட்டமைப்பு இது தொடர்பில் தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலகட்டத்துக்கு வந்துள்ளது. நாளைய சவால்களை வழிநடாத்த வேண்டிய இளந்தலைவர்களை உருவாக்காமல் விட்டுசெல்வது சமூகத்துக்கும் கட்சிக்கும் செய்யும் அநீதி என்பது அநேகரின் கருத்து.

முதல் முறையாக மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட த.தே.கூ மாகாண சபை அதிகாரங்கள் போதுமானதல்ல என்பதை அனுபவபூர்வமாக வெளிநாடுகளுக்கு அறிவித்திருக்கிறது. முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போல் முதலமைச்சர் (சிறப்பு) நிதியத்துக்கு ஆளுநர் அனுமதியில்லை. சுவாமி வரம் தந்தாலும் பூசாரியின் அனுமதியில்லை என்கிற நிலையே காணப்படுகிறது.

மற்றும் மாகாண நிதி கையாளுகை சட்டமூலத்துக்கு அனுமதி குறிப்பாக மாகாண அரசமைந்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகே கிடைத்தது. மக்களை பொறுத்தவரை இருக்கும் குற்றச்சாட்டு, தங்களுக்கு அபிவிருத்தி இல்லை என்பதே. ஆரம்ப அத்தியாவசிய தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்பதாக இருக்குறது. தனித்து அபிவிருத்திக்கோ அல்லது தனித்து உரிமைகளுக்காகவோ போராட தயாரில்லை என போராடி போராடி சோர்ந்து போன மக்கள் தீர்மானத்துக்கு வந்துவிட்டார்கள். அபிவிருத்தியும் அரசியல் தீர்வு முன்னெடுப்பும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும். மத்திய அரசில் அரசியல் தீர்வு கிட்டும் வரை பங்கெடுப்பதில்லை என்பது த.தே.கூட்டமைப்பின் கொள்கை முடிவு. அந்த முடிவில் தமிழ் மக்களுக்கும் வட மாகாண முதலைமைச்சருக்கும் அச்சம் இருக்க தேவையில்லை. ஏனெனில் அப்பிடி பங்கேற்பது அரசியல் தற்கொலை. அதை த.தே.கூ உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்த த.தே.ம.முன்னணி கூறிய காரணங்களை மக்கள் கருத்தில் கொள்ளவில்லை என்பதற்கு முக்கிய காரணம் மத்திய மஹிந்த ராஜபக்ச அரசின் மீதான வெறுப்பு கோபமுமே. அதை கணிக்க முடியாத அரசியல் வெற்றிடத்தில் த.தே.ம.மு அப்போது சிக்கிக்கொண்டது.

தமிழ் மக்கள் தேர்தலின் பின் விரைவாக தீர்வுத்திட்டத்தை பெறவேண்டியது அத்தியாவசியமாகிறது. அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள் இன்றி வாழ சக்தியிழந்து போயுள்ளனர் மக்கள். ஏற்கனவே சர்வதேசத்துடன் தொடர்பில் உள்ளவர்களாகவும், பல பேச்சுக்களில் கலந்துகொண்டவர்களாகவும் உள்ள த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி தீர்வுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கி சர்வதேசத்துக்கு எங்கள் எதிர்பார்ப்பை உரக்க சொல்ல அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை த.தே.கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்ய வேண்டியது இன்றியமையாதது.

மாறாக சந்தர்ப்பவாத எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தும் பலவீனமான சர்வதேச தொடர்புகளை தற்போது கொண்டிருக்கும் த.தே.ம.முன்னணியை பலப்படுத்துவது தீர்வை தாமதப்படுத்துவதுடன் மக்களை இடர்களுக்குள் அழைத்து செல்வதாக அமையும். எனினும் இந்த பல்கட்சி போட்டி தமிழரின் கடும்போக்கு அரசியல் பிம்பத்தை அகற்றி கடும்போக்கு எதிர் மென்போக்கு என்ற தோற்றப்பாட்டை தென்பகுதியிலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் ஒரே ஆறுதல்!

-சிவதாசன் டினேஷன்

-http://www.puthinamnews.com

TAGS: