வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அனுதாப அலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், போலியான ஐ.நா போர்க்குற்ற அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்மட்ட அரசாங்கப் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அடுத்த மாத முதல் வாரத்தில்- நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இந்த போலியான போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கையில் சுமார் 50 பேர் போர்க்குற்றவாளிகளாகப் பிரகடனப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் கிடைத்திருப்பதாக அரசாங்க பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முப்படைகளினதும் முன்னாள் தளபதிகள், இறுதிக்கட்டப் போரில் முக்கியமான பங்களிப்புச் செய்த இராணுவத் தளபதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சிறிலங்கா அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு அனுதாப அலையை தோற்றுவிக்கவே இந்த போலி அறிக்கை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர், போர்க்குற்ற அறிக்கை போர்வீரர்களை மின்சார நாற்காலிக்கு அனுப்பவுள்ளதாகவும், அவர்களைப் பாதுகாக்க மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறும் கோரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-http://sankathi.com