போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், சர்வதேச விசாரணை மூலமே தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பும் நிலையில், நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்போம் என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
நம்பகமான உள்நாட்டு விசாரணை விவகாரத்தில், தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் திருப்தியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளத் தவறியிருக்கிறது.
இப்போது, உள்நாட்டு விசாரணை விவகாரத்தில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இரண்டு முக்கியமான சவால்களை இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ளது.
முதலாவது, சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய- ரதுபஸ்வெல பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பான இராணுவத்தினர் மீதான நடவடிக்கை.
இரண்டாவது, போர் நடந்த காலங்களில் காணாமற்போனோர் மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் வெளிநாட்டு நிபுணத்துவ ஆலோசகரான சேர் டெஸ்மன் டி சில்வா விவகாரத்தில் எழுந்துள்ள நெருக்கடி.
இந்த இரண்டு விவகாரங்களிலும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறு அமையப் போகிறது என்ற கேள்வி பரவலாக மனித உரிமை விவகாரங்களில் தொடர்புடையோர் மத்தியில் எழுந்திருக்கிறது.
பிரித்தானியாவை சேர்ந்த சட்டநிபுணரான சேர் டெஸ்மன் டி சில்வாவை கடந்த ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு (பரணகம ஆணைக்குழு)வுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவராக நியமித்திருந்தார்.
இந்த வெளிநாட்டு நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆலோசனை எதுவும் வழங்கியதாக தெரியவில்லை. ஆனால், டெஸ்மன் டி சில்வா மட்டும், ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
டெஸ்மன் டி சில்வா இந்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவரிடம் இலங்கை அரசாங்கம் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக- எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது குறித்து அவரிடம் இலங்கை அரசாங்கம் ஆலோசனைகளைப் பெற்றிருந்தது.
இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் ஒருவராகச் செயற்பட்ட சேர். டெஸ்மன் டி சில்வா, எவ்வாறு அதே இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுதந்திரமான விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் குழுவுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் என்பதே, இப்போது எழுந்திருக்கிற சர்ச்சை.
இந்த விடயத்தில், டெஸ்மன் டி சில்வா தொழில் நேர்மையைக் கடைப்பிடிக்க வில்லை என்று கூறி, இலங்கையில் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பினால், பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், சேர் டெஸ்மன் டி சில்வாவுக்கு எதிராக கடந்த ஜுலை 20ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் ஐந்து வாரங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
டெஸ்மன் டி சில்வா, பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் கூட, போரில் பங்கெடுத்த இராணுவ டிவிசன்களின் தளபதிகளை தனித்தனியாகச் சந்தித்து என்ன நடந்தது என்று கேட்டறிந்திருந்தார். அது, பரணகம ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல.
ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க வந்தவர், எதற்காக இராணுவ அதிகாரிகளை தனியாக சந்தித்து, விளக்கங்களைப் பெற வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்திருந்தது. அதாவது, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவ அதிகாரிகள் தப்பிப்பதற்கான ஆலோசனைகளை அவர் முன்வைக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
நிபுணர் குழுவின் ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரே, டெஸ்மன் டி சில்வா, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியவர் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது, அவர் மீதான நேர்மையை மட்டும் கேள்விக்குட்படுத்தவில்லை.
இந்த விசாரணைகளின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
டெஸ்மன் டி சில்வா மீதான விசாரணைகள் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தான், அவரை நிபுணர் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவில் சமூகம் ஜனாதிபதியிடம் கோரியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறார் என்பது மனித உரிமை அமைப்புகளால் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஏற்கனவே காணாமற்போனவர்கள் விவகாரத்தில் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை.
இந்தநிலையில், பக்கசார்புடைய ஒருவர் அந்த குழுவுக்கு நிபுணத்துவ ஆலோசனையை வழங்கியிருப்பது அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த விவகாரம் இவ்வாறிருக்க, கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதி சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய ரதுபஸ்வெல மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர் என்பது தெரிந்ததே.
அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் சிங்கள மக்களின் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தக் காரணமாக அமைந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் விபரங்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன.
இந்த அறிக்கையில், பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு இராணுவமே முற்றுமுழுதான காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடமும், பாதுகாப்பு அமைச்சிடமும் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
உரிய அனுமதியின்றி இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் மீது இராணுவச் சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மக்கள் போராட்டத்தை அடக்குவதற்கு இராணுவத்தினருக்கு நேரடியாக உத்தரவிட்ட குறித்த பிரிகேடியர் மீது முழுப்பொறுப்பும் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் அப்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறையை உள்ளடக்கிய பிரதேசத்துக்குப் பொறுப்பான 14-2 பிரிகேட் தளபதியாக இருந்தார்.
இப்போது அவர் துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பின்னர் தான், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பாதுகாப்பு அமைச்சினால், துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இறுதிப்போரில் இடம்பெற்ற மீறல்களுக்கு இவரது படைப்பிரிவும் பொறுப்பு என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தான், பிரிகேடியர், ரதுபஸ்வெல படுகொலைகளில் அகப்பட்டுக் கொண்டார்.
ஆனாலும், முன்னைய அரசாங்கம் அவரைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தது.
குறித்த பிரிகேடியர் உள்ளிட்ட 22 இராணுவ அதிகாரிகள் மீது இராணுவ மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இந்த விசாரணை அறிக்கை மீது, இன்னமும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.
இதுகுறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, இந்த வாரத்தில் இராணுவத் தளபதி இதுபற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.
நீண்ட அறிக்கையை இராணுவ சட்டப் பணிப்பாளர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். எவ்வாறாயினும், ஜனாதிபதியோ, இராணுவத் தளபதியோ இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில், சிங்கள மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு – இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழ்மக்களுக்கு நியா யம் வழங்கும் வகையிலான நம்பகமான விசாரணையை மேற்கொள்ளும் என்ற கேள்வி வலுத்துள்ளது.
நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற முடியும் என்று அளிக்கப்படும் வாக்குறுதிகளில் மாத்திரமோ அத்தகைய விசாரணைகளிலோ அந்த இலக்கை எட்டிவிட முடியாது.
அத்தகைய விசாரணைகளின் மீது முதலில் தமிழ்மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
-சுபத்ரா
-http://www.tamilwin.com