பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் வே.பிரபாகரனையும், தமது பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது.
ஆனால், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகள், அதன் தலைவர் வே.பிரபாகரனை நம்பித்தான் பல அரசியல் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன.
சிங்களக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல. கொள்கை ரீதியாகவோ, வேறு வழிமுறைகளின் ஊடாகவோ, தமிழ் மக்களின் வாக்குகளை தம்மால் கவர முடியாது என்றுணர்ந்த, கட்சிகள் தமது கடைசி ஆயுதமாக விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும் கையில் எடுத்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளால் மட்டும் தான் இதனைக் கையில் எடுக்க முடியுமா என்று, ஜனநாயகப் போராளிகள் என்ற, முன்னைய விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் கூட, போட்டிக்குக் களமிறங்கியிருக்கின்றனர்.
இப்போது போட்டி என்னவென்றால், யார் புலிகளை அதிகமாகத் தூக்கிப் பிடிப்பது,- பிரபாகரனின் பெயரைக் கூறி கூட்டத்தில் அதிக கைதட்டல் வாங்குவது என்பது தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட மருதனார்மடக் கூட்டத்தில், பிரபாகரனின் பெயர் தாராளமாக உச்சரிக்கப்பட்டது. அப்போது கரவொலியும் வானைப் பிளந்து கூட்டமைப்பினருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
அதைப் பார்த்த, கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்யக் கிளம்பியுள்ளவர்களெல்லாம், பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும், தாராளமாகவே தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.
போர் நடந்து கொண்டிருந்த போது, புலிகளைத் திட்டித் தீர்த்து,- பக்கம் பக்கமாக அறிக்கைகளை வெளியிட்டு-, மக்களை கேடயமாகப் பிரபாகரன் பயன்படுத்துவதாக தூஷித்த, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வெளியிட்டவர்களுக்குக் கூட, இப்போது பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் தேவைப்படுகின்றனர்.
இதன் மூலம் விடுதலைப் புலிகளும், அதன் தலைமையும் தமிழ் மக்களிடம் எந்தளவுக்கு செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்பதை உணர முடிகிறது.
விடுதலைப் புலிகளை வைத்து எந்தளவுக்கெல்லாம் அரசியல் நடத்த முடியுமோ அந்தளவுக்கு அரசியல் நடத்தப்படுகிறது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசியல் பிரவேசத்தை அறிவித்த, – சுதுமலை அம்மன் கோவில் முற்றத்தில் வைத்து, ஜனநாயக போராளிகள் கட்சி தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படிக்க முடிந்தது.
அந்தச் செய்தியை கொடுத்தவர்களோ, எழுதியவரோ, பிரசுரித்தவரோ வரலாறு தெரியாதவர்களாக இருந்திருக்கின்றனர்.
எப்போது பிரபாகரன் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்?
புதுடில்லியில் வைத்து வடகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தருவதாகக் கூறப்பட்டதாகவும் அதனை நிராகரித்து விட்டதாகவும், 1987ம் ஆண்டு இந்திய, – இலங்கை உடன்பாடு கையெழுத்திடப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபாகரன் கூறியிருந்தார்.
அதுமட்டுல்ல, தான் ஒருபோதும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவதில்லை என்றும், ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேட்டி அடங்கிய வீடியோ ஆதாரத்தை இப்போதும் இணையங்களில் பார்வையிடலாம்.
அப்படியிருக்க, பிரபாகரன் அரசியல் பிரவேசத்தை அறிவித்த சுதுமலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக பிரபலம் தேடிக் கொள்கின்றனர் இவர்கள்.
முன்னர் ஒருமுறை விடுதலைப் புலிகளின் கொள்கையை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று, பகிரங்கமாக கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
ஆனால் இன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் விடுதலைப் புலிகளை எப்போதுமே ஆதரித்தோம், அவர்களின் போராட்டத்துக்கு துணை நின்றோம் என்று வாக்குக் கேட்கிறது. முள்ளிவாய்க்காலில் தங்களிடமே போராட்டம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்ல ஆணை தாருங்கள் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வாக்கு கேட்கின்றனர்.
முள்ளிவாய்க்காலில், விடுதலைப் புலிகளின் தலைமை முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து அதனைப் பொறுப்பேற்ற இவர்களில் எத்தனை பேர் அங்கிருந்தார்கள்?
அந்தக் கட்டத்தில் நாட்டை விட்டு ஓடி வெளிநாடுகளில் பதுங்கியிருந்தவர்கள் தான் இப்போது தங்களிடம் போராட்டம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்ல, முள்ளிவாய்க்காலில் போராட்டம் கையில் ஒப்படைக்கப்பட்டதாக கூறுபவர்களில் எத்தனை பேர்? ஏன் அது தம் கையில் வந்தது? அதுவரை போராட்டத்துக்கு தலைமையேற்ற விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? என்று கூறத் தயாராக இருக்கின்றனர்?
இவர்களில் எவராவது போராட்டத்தை தமது கையில் கொடுத்தவருக்கு என்ன நேர்ந்தது என்று வெளிப்படையாகக் கூறி, அவருக்காக அஞ்சலி செலுத்த முன்வந்திருப்பார்களா?
இல்லை-. அதைச் செய்யும் துணிவும் திராணியும் அவர்களில் யாரிடமும் கிடையாது.
ஆனால், விடுதலைப் புலிகளின் பெயரில் பெறும் வாக்குகள் மட்டும் தேவைப்படுகிறது.
இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் ஊடாக, பாராளுமன்ற ஆசனங்களுக்காக அலைபவர்களெல்லாம், பிரபாகரன் கூறிய “போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலட்சியம் மாறாது” என்ற வசனத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரபாகரன் தனது போராட்ட வடிவத்தை தான் குறிப்பிட்டாரே, தவிர இவர்களின் போராட்டத்தைக் குறிப்பிடவில்லை.
அவர் தனது இலட்சியத்தின் அடிப்படையில் தான் அதனைக் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் இலட்சியமும், அவரை வைத்து வாக்கு வேட்டையாடுபவர்களின் இலட்சியமும் ஒன்றல்ல.
பிரபாகரனின் இலட்சியம் தமிழீழத்தை அடைவது.
ஆனால் இன்றுள்ள ஒரு கட்சிக்கும் அந்த இலட்சியம் கிடையாது.
அவ்வாறு இலட்சியம் இருந்திருந்தால், பிரிவினையை ஆதரிக்கமாட்டேன் என்று 6ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் கையெழுத்துப் போட்டு, பாராளுமன்றத்தில் அமர்வதற்காக இந்தளவுக்கு போட்டியிடமாட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் போராட்டம் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறுபவர்கள் கூட, தனிநாட்டு கோரிக்கை நடைமுறைச் சாத்தியமற்றது என்பதால் தாம் அதனைக் கைவிட்டு விட்டோம் என்று பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
ஆக, பிரபாகரனின் இலட்சியம் நடைமுறைச் சாத்தியமற்றது என்று கூறத் துணிந்தவர்கள், அவரது இலட்சியத்தை கைவிட்டு விட்டு, தமது அரசியல் இலட்சியத்தை அடைவதற்காக பிரபாகரனின் வாக்கியத்தை துணைக்கு அழைக்கின்றனர்.
அதுபோலவே, பாராளுமன்ற ஆசனத்துக்காக எல்லோரும் ஒரே வடிவத்தில் தான் மோதுகின்றனர்.
மோதும் குழுக்கள் தான் வேறு வேறே தவிர, அவர்களின் கொள்கை இலட்சியம் எல்லாம் பாராளுமன்றப் பதவி தான்.
விடுதலைப் புலிகள், தமது இறுதிக் காலகட்டத்தில் தமிழரின் அரசியல் பலத்தை ஒன்றாகத் திரட்டவே முனைந்தனரே தவிர, சிதைத்து சின்னாபின்னமாக்க முனையவில்லை.
பல்வேறு முகங்களையும், முரண்பாடுகளையும் கொண்டிருந்த தமிழ் அமைப்புகளை, பழைய பகை, கருத்து முரண்பாடு, கொள்கை வேறுபாடுகளை மறந்து, கூட்டமைப்பாக ஒன்றிணைத்தனர்.
அதற்கான காரணம், அரசியல் ரீதியாக தமிழரின் தேசிய பலம் ஒன்றிணைக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதே.
அந்த கொள்கையில் விடுதலைப் புலிகளால் கணிசமான வெற்றியும் பெற முடிந்தது.
ஆனால், இப்போது நடக்கின்ற அரசியல் யுத்தம், தமிழரின் தேசிய பலத்தை சிதைப்பதற்கானது.
தமிழர்கள் தமக்குள்யே பிரிந்து நின்று முட்டி மோதி அழிந்து போவதற்காக நடத்தும் போராட்டம் இது.
இந்த கேடுகெட்ட அரசியல் யுத்தத்துக்கு விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும் துணைக்கு இழுப்பது அசிங்கத்தனமானது.
விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும், மதிப்பவர்கள், எவராவது இருந்தால், முதலில் செய்ய வேண்டியது- அவர்களை தமது அரசியல் நலன்களுக்கு துணைக்கு இழுக்காமல் இருப்பதேயாகும்.
அதுவே அவர்களுக்கு ஆற்றும் மிகப்பெரிய பிரதி உபகாரமாக அமையும்.
விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருக்கின்றனர்.
அதில் வெளிப்படையாகப் பங்காற்றியவர்களை விட வெளித் தெரியாமல் பங்காறியவர்களே அதிகம்.
இலட்சக்கணக்கான மக்களின் பங்களிப்பில் தான், அந்தப் போராட்டம் உச்சத்தை எட்டியது.
இந்தநிலையில், அந்தப் போராட்டத்துக்கு தாமே உரித்துடையோர் என்றோ, தாமே பெரிய பங்காளர்கள் என்றோ உரிமை கோர முடியாது.
எல்லோருக்கும் இருக்கிறது அந்தப் போராட்டத்தின் மீதான உரிமை.
இதில் ஒருவருக்கு மற்றவர் நிகரில்லை என்று வாதிடமுடியாது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஆற்றிய பங்கை, அறியா மடந்தைகள் தான், விடுதலைப் போராட்டத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.
அரசியல் என்பது ஒரு போராட்ட வடிவம் தான், ஆனால், அது விடுதலைப் புலிகளின் இலட்சியத்துக்கும் கொள்கைக்கு அப்பாற்பட்ட வழிமுறை.
இந்த அரசியல் சதிராட்டத்துக்கு விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பயன்படுத்திக் கொள்வது போன்ற ஈனச்செயல் வேறேதும் இருக்க முடியாது.
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொள்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்களா?
– என்.கண்ணன்
-http://www.puthinamnews.com
இன்னுமாடா இவங்களை நம்புரிங்க………
இவ்ளோ நாலா இலங்கை மக்களை கொடுமை படுத்தினது போதாதா?
இனியாவது அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்