இம்மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற நான்கு கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள இரண்டு முக்கிய அணிகளான இவையிரண்டும் வடக்கு கிழக்கிலுள்ள எல்லாத் தேர்தல் மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், அவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கவனத்திற்குரியவையாக அமைந்துள்ளன.
யூலை 25ம் திகதி மருதனாமடத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு மகாணங்களின் ஒரு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சமஷ்டிக்கட்சி’ (Federal Party) என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயமல்ல. இருப்பினும், சமஷ்டி பற்றி குறிப்பிடுவதைத் தவிர்த்து வெறுமனே அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசிவந்த வந்த கூட்டமைப்பினர் இப்போது அது பற்றி வெளிப்படையாகப் பேச முற்பட்டிருப்பது ‘ஆட்சி மாற்ற’ விவகாரத்தில் கூட்டமைப்புடன் அணிசேர்ந்திருந்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு நெருடலைக் கொடுத்துள்ளது. அதேசமயம் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இராஜபக்சவின் ஆதரவாளர்கள் இனவாத அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பொதுசன ஜக்கிய சுதந்திர முன்னணியின் பிரமுகர் தினேஸ் குணவர்தன, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொள்கைகளுடன் தான் உடன்படாதபோதிலும், அவர் தனது கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார் எனவும், தேர்தலில் தனித்து ஒரே கொள்கையுடன் களமிறங்கியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே சம்பந்தன் இந்த சமஷ்டி என்ற கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்துள்ளார் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்களத் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்றதொரு அரசியல் விவாதத்தில் கலந்து கொண்ட சிறிலங்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேராவும் இதுபோன்ற கருத்தினையே வெளியிட்டுள்ளார். “நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னர் அரசாங்கத்துடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சுக்களை நடத்தி வந்த சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு நியாயமான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு தொடர்பில் காத்திரமான முறையில் கருத்துப் பகிர்வுகளைச் செய்திருந்தனர். ஆனால் தேர்தல் வந்ததும் இம்முறை வழமைக்கு மாறாக ஏனைய தரப்புகளிடமிருந்து போட்டியை எதிர்நோக்குவதால் சமஷ்டி என்ற கோசத்தை முன்வைத்து இனவாத அரசியலை முன்னெடுக்கின்றனர். “ என்று குறிப்பிட்டிருந்தார்.
மேற்குறித்த சிங்கள அரசியல்வாதிகள் சரியாக விளங்கி வைத்திருப்பதுபோன்றே, தமிழ்த் தேசிய அரசியலில் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவாகிவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினை எதிர்கொள்வதற்கு ‘சமஷ்டி’ என்ற அஸ்திரத்தை ஏவி விடுவதனைத் தவிர கூட்டமைப்பினருக்கு வேறுவழிவகைகள் தெரியவில்லை போலிருக்கிறது. கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைகளில் முதன்மையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் விமர்சிக்கப்பட்டு வருவதிலிருந்து தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணி ஏற்படுத்திவரும் தாக்கத்தினை கூட்டமைப்பு நன்கு உணர்ந்துள்ளமை தெரிகிறது.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக மேற்கத்தைய தரப்புகளிலிருந்து கருத்து எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சிங்களத்தரப்பினர் போன்ற விமர்சனங்கள் அவர்களிடமிருந்து வருமாயின் அதனை எதிர்கொள்வதற்காக கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், 2002ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இரண்டுதரப்புகளும் கவனத்தில் எடுப்பதாக இணங்கிக்கொண்ட ஒஸ்லோ அறிக்கை (Oslo Communiqué ) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’ என்ற விடயத்தில் சிறிலங்கா அரசதரப்பும் விடுதலைப்புலிகளும் இணங்கியிருந்தனர். இவ்விடயத்தில் இணைத்தலைமை நாடுகளும் வேறும் பல நாடுகளும் உடன்பட்டன எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த ஆறுவருடங்களில் எந்தவொரு சர்வதேசத் தரப்பும் இலங்கைத் தீவு விடயத்தில் சமஷ்டித் தீர்வு பற்றி வாய்திறக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. ஒஸ்லோ அறிக்கை வெளிவந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த திரு. கஜேந்திரகுமார் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வினை நிராகரித்திருந்தார். அதுபோன்று தேசியத்தலைவர் அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விடயத்தையும் தகவலுக்காக இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.
தமிழ்மக்களுக்கான இறுதித் தீர்வாக சமஷ்டித் தீர்வைப்பற்றி கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறிப்பிடுகிற நிலையில், இறுதித்தீர்வினை 2016 ம் ஆண்டில் பெற்றுவிடுவோம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அறிவித்திருக்கிறார். கூட்டமைப்பின் தீவிர விசுவாசிகளே நம்ப மறுக்கிற இவ்விடயம் சாத்தியமானதுதானா? கூட்டமைப்பு உண்மையிலேயே சமஷ்டித் தீர்வினை நோக்கி நகர்கிறதா? என்ற கேள்விகளுக்கு விடைகாணுதல் அவசியமாகிறது. கடந்தகாலப் பட்டறிவிலிருந்து, கூட்டமைப்பைப்பினர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றைக் குறிப்பிட்டு விட்டு, அதிலிருந்து விலகி வேறொரு நிலைப்பாட்டிற்குச் செல்லமாட்டார்கள் எனக் கூறமுடியாதுள்ளது. அவ்வாறு செய்தாலும் தாம் சாத்தியமானதை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையைக் (pragamatic approach) கடைப்பிடிப்பதாகக் கூறி எழும் விமர்சனங்களை அவர்கள் இலகுவில் கடந்து சென்றுவிடுவார்கள். இருப்பினும் இன்னும் 16 மாத காலத்தில் சமஷ்டித் தீர்வு ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகிறதா என்பதனைப் பார்ப்போம்.
கடந்த மே மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திரு. கஜேந்திரகுமாருடனான பகிரங்க விவாதத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கம் பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரவிருப்பதாகவும் அது ஒற்றையாட்சி முறையாக அமையாது என்ற கருத்தினை திரு. சுமந்திரன் வெளியிட்டிருந்தார். இதுவிடயமாக தமக்கிடையே எழுதப்படாத ‘இதயங்களுக்கிடையிலான உடன்பாடு’ எட்டப்பட்டுள்ளதாகவும் அதன் விபரங்களை பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இன்னும் பத்து நாட்களில் தேர்தல் பரப்புரை முடிவுக்குவரவுள்ள நிலையில், இதுவரை அவ்வாறான தகவல்கள் எதனையும் கூட்டமைப்பினர் வெளியிடவில்லை. ஆனால் சமஷ்டித் தீர்வினை சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜக்கியதேசியக் கட்சி, ஜாதிக ஹெல உருமய, ஜே.வி.பி. என அனைத்து சிங்களக் கட்சிகளும் நிராகரித்துள்ளன. இந்நிலையில், நேற்றைய தினம் (ஓகஸ்ட் 6ம்திகதி) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் திரு.சுமந்திரன் புதிய விளக்கத்தினை அளித்துள்ளார். சிங்கள அரசியல்வாதிகளின் சமஷ்டிக்கு எதிரான கருத்து தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவதற்கானது என்று குறிப்பிட்ட அவர், இவர்களது ஆதரவின்றி சர்வேதேசத்தின் ஆதரவுடன் தாம் சமஷ்டித் தீர்வினைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாகக் கூறியிருக்கிறார். இச்சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், கூட்டமைப்பில் இருபது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களுடைய கோரிக்கையை அரசாங்கம் நிராகரிக்க முடியாது என்று வேறு கூறியிருக்கிறார் சுமந்திரன். (ஈசா, இந்த மாயமான எண்ணிக்கையான 20 இல் உள்ள தர்க்க நியாயம் உனக்குத் தெரிந்தால் சொல்)
அரசியல் அமைப்பை மாற்றுவது பற்றி மைத்திரிபால தரப்பு மட்டுமல்ல மகிந்த தரப்பும் பேச ஆரம்பித்திருக்கிறது. மைத்திரிபாலவின் ஜனவரி 8 ஆட்சிமாற்றத்தில் கூட்டுச் சேர்நத தரப்புகள் அரசியலமைப்பு மாற்றம் பற்றி ஏற்கனவே பேச ஆரம்பித்துள்ளன. மைத்திரியின் ஆலோசகர்களான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தன, சட்டத்தரணி வெலியமுன்ன போன்றவர்களும் தமிழர் தரப்பும் கலந்துகொண்ட சிங்கப்பூர் பேச்சுவார்த்தைகளிலும் புதிய அரசியலமைப்புபற்றி பேசப்பட்டதாகத் தெரிகிறது.
ஊடகங்களில் வெளியாகிய சிங்கப்பூர் பிரகடனம் (Singapore Principles) தொடர்பான தகவல்களிலிருந்து இப்பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படும் சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, பகிரப்பட்ட இறைமை போன்ற விடயங்கள் காணப்படவில்லை. அங்கு பேசப்பட்ட புதிய அரசியல் அமைப்பு தொடர்பான யோசனைகளிலும் இவை உள்ளடக்கப்படவில்லை என இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட தமிழ் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். மாறாக “சிறி லங்கா சமூகத்தின் பன்முக குணாதிசயங்களும் அவற்றைப் போலவே அதில் அடங்கியுள்ள மக்கள் குழுமங்களினதும் அடையாளங்கள் மட்டுமல்லாது அவர்களுடைய அபிலாசைகளும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லாட்சி, ஜனநாயக முறையினைப் பேணுதல், அரசியல் தலையீடின்றி செயற்படும் சுயாதீனமான கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் புதிய அரசியல் அமைப்புப் பற்றிய பரிந்துரைகளில் காணப்படுகின்ற போதிலும், ஒற்றையாட்சி முறையினை மாற்றுவது தொடர்பான எந்தக் குறிப்பினையும் இப்பரிந்துரைகளில் காண முடியவில்லை.
இவற்றை வைத்துப் பார்க்கையில் கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கை என்பது வெறுமனே தமிழ்மக்களின் வாக்குகளை பொறுக்குவதற்கான தேர்தல்கால வெற்றுக்கோசமே தவிர வேறொன்றுமில்லை என்பது தெளிவாகிறது.
நன்றி
ஒரு பேப்பர் 07-08-2015
-http://www.pathivu.com