இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில் பிரிவினைவாத அரசியலின் சிக்கல்கள் மீண்டும் இலங்கையில் உருவெடுத்திருப்பதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் என்ற ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது. தன் ஆட்சிக் காலத்தின் முதல் ஆறு மாதத்தில் குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்துள்ளதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் கூறுகிறது.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அந்த அமைப்பு இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரச நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் சிறிசேன அரசின் முதல் ஆறு மாதங்களில் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், அரசுக்குள் இருந்த பிளவுகளின் காரணமாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சிறிசேனவுக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவும் ஆழமான சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லையென்றும் இதன் காரணமாகவே ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் களத்திற்குத் திரும்பிவர முடிந்தது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
தன் ஆட்சிக் காலத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறிசேன குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்துள்ளார் என இன்டர்நேஷனல் கிரைசிஸ் க்ரூப் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக 19வது அரசியல் சாசனத் திருத்தத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் சுயேச்சையான கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிறிசேன விரும்பாவிட்டாலும், கட்சிக்குள் ஆதரவில்லாததன் காரணமாக அதற்கு இணங்க வேண்டியிருந்தது.
சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதைப் போல முந்தைய அரசு செய்த மோசடி, அதிகார துஷ்பிரயோகம் குறித்து பல விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் ஊழலுக்கு எதிராக இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கை பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கியது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்படாதது வேறு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பல மாதங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த சிறிசேன, தனக்குக் கட்சிக்குள் ஆதரவில்லாததன் காரணமாக, கடைசியில் அதற்கு இணங்க வேண்டியிருந்தது என அறிக்கை கூறுகிறது.
ராஜபக்ஷவால் பிரதமராக முடியாவிட்டால் கூட, அவர் தலைமையில் நாடாளுமன்றத்தில் செயல்படும் சிங்கள தேசியவாதிகள், வரக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளக்கூடிய இணக்கப்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முடியும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, இனப்பிரச்சினையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சில விடுவிக்கப்பட்டிருப்பதையும் வடக்கு கிழக்கை நிர்வகிப்பதில் அதன் பங்கு குறைந்திருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இராணுவத்தின் அளவு குறைக்கப்படாவிட்டாலும் அவற்றின் பிரசன்னம் குறைக்கப்பட்டிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
யுத்தம் குறித்து நம்பகத்தன்மைமிக்க உள்நாட்டு விசாரணை நடத்துவோம் என அரசு வாக்குறுதியளித்தாலும் இதுதொடர்பாக யாரையும் தண்டிக்க வேண்டுமென்றால் சட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென அறிக்கை கூறுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறு பிரிவினர், வேறு சில சிறிய கட்சிகளை இணைத்து தேசிய அரசை அமைக்க சிறிசேன திட்டமிட்டிருந்தாலும் ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மிகத் தீவிரமாக களமிறங்கியிருப்பது அந்த முயற்சிகளுக்கு தடையாக அமையும் என அறிக்கை கூறியுள்ளது.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை உள்ளடக்கிய ஒரு நீடித்த தீர்வு என்பது, இந்தத் தேர்தலில் முடிவுகளை வைத்தே அமையும் என அறிக்கை தெரிவித்துள்ளது.
-http://www.tamilwin.com