சிங்களப்பேரினவாத அரசும், அதன் பாராளுமன்ற சட்டங்களும், மதக்கொள்கைகளும், நம் மக்கள் மீது இன்று வரை திணித்துள்ள கொடூரமான இனவாத அடக்குமுறைகளும், அதனால் மக்கள் அனுபவித்து வந்த தன்னிச்சையான மிருக சுமையான சாவுகளும் பிரிவுகளும் சிறுபான்மை இனம்,
அகதிகள், புலம்பெயர்ந்தோர், பயங்கரவாதிகள் என்ற அடையாளப்படுத்தல்களும் நம் மக்கள் சுதந்திரமாக வாழத்தான் வேண்டும் என்று உந்திதள்ளும் காரணிகளாக இருக்கின்றன.
உலகமயமாக்கல் சர்வதேச அண்டைநாடுகளின் பொருளாதார அரசியல் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு இனவழிப்பு ஒன்று நடந்துகொண்டிருக்கின்ற இந்த வேளையில்.
1) யுத்தகாலங்களிலும், இறுதி யுத்தத்திலும் நடைபெற்ற படுகொலைகள்.
2) 2009 பின்னர் தமிழர் பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கலாச்சார சீரழிவுகளும், பண்பாட்டு சிதைவுகளும்.;
3) தமிழர் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு செல்லும் மக்கள்.
அதற்கெல்லாம் ஈடுகொடுத்துக்கொண்டு இந்த உலக ஓட்டத்தில் நாங்களும் எங்கள் தனித்துவத்தை இழக்காமல் பயணிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையிலும் மீண்டும் துளிர் விட்டு பிரகாசிக்கவேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கின்றோம்.
ஒவ்வொரு நாடும் இந்த உலக ஓட்டத்துக்குள் பயணிப்பதற்கு அறிவுஜீவிதம் உள்ள அதன் தலைவர்களினதோ அல்லது குழுக்களினதோ அறிவுறத்தல்களாலும் ஆலோசனைகளாலும் தான் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு தங்களுடய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், 60 வருடகாலமாக அடிமைச் சிறைக்குள் வாழுந்துகொண்டிருக்கும் எம் மக்கள் இந்த உலக ஓட்டத்தில் சுயநிர்ணய உரிமைகளுடன் பயணிக்க வடக்கு முதல்வர் கூறுகின்ற மாதிரி நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மானோபாவம், தூரநோக்கு பார்வை, எந்த நேரத்திலும எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டியது மிக மிக அவசியமாகும்.
‘பாராளுமன்றம் செல்லல், அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சிக்கட்டில் அமர்தல், ஆனாலும் அரசாங்கத்திற்கெதிராக ஆக்ரோசமான அறிக்கைகளை விடுதல், அர்த்தமற்ற சாத்தியமற்ற வெட்டிக்கதைகளையும், வெளிப்பூச்சுக்களையும் வாக்குகளுக்காக உறுதி கொடுக்கும் பிரதிநிதிகள் நிச்சயமாக தமிழ் மக்களுடய பிரதிநிதிகளாக இருக்கமாட்டார்கள்.;
அந்தவகையில் இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கை அரசுடனும், உலகநாடுகளுடனும் பேசிக்கொண்டிருப்பவர்கள் இரண்டு வகையினர்.
(திம்பு பேச்சுவார்த்தையின் போது தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக அறிமுகம் செய்துகொண்டவர்கள்)
1) அரசியற்கட்சி உறுப்பினர்கள்
1948 இலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த அரசியற் கட்சி தலைவர்கள். தமிழ் மக்களுக்கான உரிமையை சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏறத்தாள 30 வருடங்கள் உண்ணாவிரதம், மறியற்போராட்டம், கண்டன ஊர்வலங்கள் போன்ற பல வகையான போராட்டங்கள் செய்தனர்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான உரிமைகளை பெற போராடியவர்கள் 1976வட்டுக்கோட்டை பிரகடனம் மூலம் தமிழீழம் தான் தமிழ் மக்களுக்குரிய இறுதியான தீர்வு என்;ற மக்களின் தீர்மானத்தை தமிழ்பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ள, தமிழ் மக்களும் அதனை ஏக மனதாக ஏற்றுக்கொண்டனர்.
2) விடுதலைப்போராட்ட இயக்கங்கள்.
முதல் முப்பது வருடங்களில் இலங்கை பேரினவாதத்திற்கு எதிராக அரசியற்கட்சிகள் மேற்கொண்ட போராட்டங்களின் மிதவாதப்போக்குகளும், தங்களுக்குள் நடைபெற்ற அரசியல் பதவி போட்டிகளும் தங்களை பாதுகாக்க தங்களை இளைஞர்களை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமே, ஆயுத இயக்கங்கள் ஆரம்பிக்க ஒரு காரணமாகவும் இருந்திருக்கின்றது என்பது எமது வரலாற்று பக்கங்கள் காட்டி நிற்கும் வெளிப்படையாகும்.
(‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்;. புஷ்பராஜா )
விடுதலைக்காக புறப்பட்ட இளைஞர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகள், கொள்கைமுரண்பாடுகள், பிரதிநிதித்துவ முன்னிலை முரண்பாடுகள் போன்ற காரணங்களால் சிங்கள அரசுடன் போராடவேண்டியவர்கள் தங்களுக்குள் பலவாறாக பிரிந்து தங்களுக்குள் போராடி அநியாயமாக ஏராளமான இளைஞர்களை பலி கொடுத்து பின்னர். இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் வற்புறுத்தலால் ஜனநாயக கட்சிகளாக மாறி இன்று பெரும் ஜனநாயக கட்சிகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர்.
ஆனால் அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் தான் தமிழீழ கொள்கைக்காக ஆயிரக்கணக்கான போராளிகள், மக்களின் அர்ப்பணிப்புடன் இறுதிவரை போராடியது. தமிழ்மக்களின் இருப்புத்தன்மைய, தனித்துவத்தை, பண்பாடுகளை அவர்கள் நடாத்திய வீரம் செறிந்த போராட்டங்கள் மூலம் உலகத்திற்கு அறியவைத்த பெருமை அவர்களையே சாரும். 2009 மே மாதத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என்று கூறிக்கொள்ளும் சிங்கள கட்சிகளும், தமிழ் கட்சிகளும், அண்டைநாடுகளும், வல்லரசுகளும் 17000 க்க மேற்பட்ட மாவீரர்களினதும், 150000 க்கு மேற்பட்ட மக்களின் ஜீரணித்துக்கொள்ள முடியாத உயிர்தியாகங்கள் மீதேறிதான் தங்களுடய அரசியலை செய்யவேண்டிய நிலைதான் இன்று இருக்கின்றது என்பதை பார்க்கின்ற போது. அவர்களின் சிந்தனையும், போராட்டமும், கொள்கைபற்றுதியும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உய்த்துணரக்கூடியதாக இருக்கின்றது.;
நாம் இப்போது சிந்திக்க வருவது சாதாரணமாக ஒரு நாட்டின் மக்களின் கட்சி பிரதிநிதிகள் என்;ற அடிப்படையில் அல்ல ஒரு நாட்டிலிருந்து ‘விடுதலையை வேண்டி நிற்கின்ற மக்களின் உரிமையை, உணர்வுகளை, நியாயங்களை பேசத் தலைமை தாங்கிய தாங்க வருகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிக்கட்சிகளும், அதன் பொறுப்புமிக்க தலைவர்களையும் தான்”.
தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லுகின்ற பிரதிநிதிகள் நியாயமான பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால் மேலே குறிப்பிட்டது போல மக்களின் நியாயமான பிரச்சனைகளை எந்த சக்தி வந்து தடுத்தாலும் உறுதிகுலையாது நிற்கின்ற தனித்தன்மை வாய்ந்த பிரதிநிதிகளைதான் மக்கள் வரவேற்கின்றனர். தேவையும் கூட.
தற்போதிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் பற்றி
தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க போராடிய அதைப்பற்றி பேசிய அனைவருமே இலங்கை அரசின் எதிரிகளாக, பயங்கரவாதிகளாக, சித்தரிக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் படுகொலைசெய்யப்பட்டும் இருக்கின்றனர். ஆனால் இவர்களை பொறுத்தவரை பொருளாதார ரீதியிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகுந்த செல்வாக்குடன் தங்கள் குடும்பங்களை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டும,; நினைத்த நேரங்களில் பயணங்கள் செய்துகொண்டிருப்பதும். தமிழ் மக்களுக்காக போராடியதால் மட்டுமல்ல தமிழ் மக்களுக்காக போராடுகின்றோம் என்ற போர்வையில் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்து செல்வதால்தானா என்ற ஜயம் எல்லாருடய மனங்களிலும் ஏற்படுகின்றது?
2009 இல் யுத்தம் மிக மோசமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், 2004 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தெரிவாகி தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இவர்கள்,
தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டார்களா? சிங்களபேரினவாத அரசின் பாராளுமன்ற பிரதிநிதிகளாக செயற்பட்டார்களா?
போர்நடந்த பகுதியில் இருந்த மக்களை தவிர வெளிப்பகுதியில் இருந்த மக்களை ஒன்று திரட்டி ஏதாவது போராட்டங்களை நடாத்தி அரசுக்கு ஏதாவது கண்டனங்களை தெரிவித்தார்களா?
தங்களுடைய பதவிகளை பாதுகாக்க சில அறிக்கைகளை தவிர ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் செய்யமாலிருந்தனர். ஆகக்குறைந்த செயற்பாடாக போரின் சாட்சியாகவாவது இருந்தார்களா? ஆகவே இப்படியானவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் மதிப்பு கொடுத்து நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவார்கள் என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்?
இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ்; நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவோம் என்று 2015 பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறுவது போல இவர்களால் நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தர முடியுமா? அதற்கு இலங்கையின் சட்டதிட்டங்களும், யாப்புகளும் இடமளிக்கின்றனவா?
அப்படியாயின் ஏன் 60வருடங்களாக அதனை பெற்றுத்தரமுடியாமல் இருக்கின்றது? இனிமேல் பெற்று தருவார்களாயின் இலங்கையரசின் சட்ட திட்டங்களை மாற்றக்கூடிய சக்தி இவர்களிடம் இருக்கின்றனவா? என்பது ஒரு சிந்திக்க வேண்டிய விடயமாகும்.?
பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் தமிழ் மக்களின் பங்கு
தமிழ் மக்களை பொறுத்தவரையில் நன்கு கல்வியறிவும் சிந்தனை தெளிவும் மிக்கவர்கள். தங்களை தலைமை தாங்கும் தலைவர்களை நன்றாக மதிப்பவர்கள். அதுவே சில வேளைகளில் அவர்களின் சிந்தனை தேக்கங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தலைவர்கள் மேலும்,கட்சிகள் மேலும் வைத்திருக்கின்ற விசுவாசம் மக்களை சிந்ததிக்கமுடியாது சூழ்நிலைக்கு சில வேளைகளில் இட்டு செல்கின்றது. பெரும்பாலும் அதுதான் எங்கள் தோல்விநிலைகளுக்கு காரணங்களாக அமைந்திருக்கின்றன.
அதைவிட்டு, அவர்களின் இலட்சியம், கொள்கைள் என்பவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எல்லாமே எமது சுய சிந்தனைக்கும் சுயதர்க்கத்திற்கும் கால நேர தேவைகளின் அடிப்படையில் தத்துவார்த்த ரீதியாக பரந்து விரிந்த பூகோளவியல் அரசியலையும், நடக்கின்ற உள்நாட்டு சம்பவங்களையும் மையப்படுத்தி மீள்பரிசீலனை செய்வது ஒவ்வொருமனிதனதும் உரிமை. அந்தவகையில் எமது பிரதிநிதிகளை தீர்மானிக்க வேண்டியது உங்கள் உரிமை.
சாதாரண நாட்டின் குடிமகனாக இருந்தாலே சுயசிந்தனை தேவை விடுதலையை வேண்டிநிற்கின்ற என் மக்கள், போராளிகளையும், மாவீரர்களையுயம் நாட்டிற்கு கொடுத்த மக்கள் கட்டாயம் சுயமாக சிந்தித்து செயற்படும் தன்மையும், கணநேரமும் விழிப்புணர்வுடன், கொள்கையில் தெளிவுடனும் இருக்கவேண்டியது உங்கள் அத்தியாவசியமாக கடமையாகும். யாருடய வெற்றுப்பேச்சுகளுக்கும் மயங்கிவிடாதீர்கள். மக்கள் சக்திதான் மகாசக்தி என்பதை உணருங்கள். ‘சக்தி கொடு மக்களே” என்பது தான் பிரதிநிதிகளின் நிலைமை. உங்கள் தலையசைவு மட்டுமே எல்லாத்தையும் தீர்மானிக்கும். உங்களை தீர்மானிப்பது என்றுமே நீங்களாக இருக்கட்டும்.
போராட்ட முன்னோடிகளாக இருக்கட்டும், போராளிகளாக இருக்கட்டும், பாரம்பரிய அரசியற்தலைவர்களாக இருக்கட்டும். யார் வந்தாலும் 17000 க்கும் மேற்பட்ட மாவீரர்களினதும், 150000 க்கு மேற்பட்ட மக்களின் தியாகங்களால் நாங்கள் உயிர்வாழ்கின்றோம் என்பதை மனதிலிருந்து ஒரு கணமும் மறவாமல் நிலைநிறத்தி தெளிவானமுறையில் பிரதிநிதிகளை தெரிவுசெய்யுங்கள்.
தமிழீழக் கோரிக்கை, சமஷ்டிக் கோரிக்கை, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற எங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வைக்கின்றார்கள் என்பதற்காக எல்லாரையும் ஆதரிக்கலாமா? என்று சிந்தியுங்கள். அவர்களுடய கொள்கைகள், எதிர்கால திட்டங்கள், சர்வதேச உறவுகள் போன்றவற்றை விரிவாக ஆராயுங்கள்.
பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் புத்திஜீவிகளின் பங்கு
ஒரு சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், மதத்தலைவர்கள், சமூகநலன் விரும்பிகள் மிக முக்கியமான தருணங்களில் செய்யும் மௌனங்கள், சார்புத்தன்மைகளும் அந்த சமூகத்தின் எதிரியை விட மிக மோசமானதாகும். என்பதை உணர்ந்து எமது மக்களின் முறையான சிந்தனைக்கு வழிகாட்டியாக இருந்து உதவிசெய்யுங்கள்.
1953 பிடல்காஸ்ரோ ரூஸ் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்த போது கூறியதின் சிறு பகுதி இது, எங்களுக்கு இப்பொழுது மிகவும் பொருத்துமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
‘அநீதியான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண்ணையும் அம்மக்களையும் நசுக்கி அவமதிக்க அனுமதிக்கின்றவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லாத மனிதர்களும் அதிகமாயிருக்கின்ற இந்நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒரு சில மனிதர்கள் மனமுவந்து முன்வருகின்றார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர் கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒரு சிலரேனும் அவர்களுக்குள் பல்லாயிரம் பேர் உள்ளடங்கியிருக்கின்றார்கள். ”
இறுதியாக தேசியத்தலைவரின் சிந்தனையிலிருந்து,
‘எங்களை பொறுத்தவரை சிங்கள தமிழ் மக்கள் மீது ஓர் இன அழித்தல் போரை நடத்தி வருகின்றது. அந்த அரசுடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் அனைவருமே தமிழருக்கெதிரான போரின் பங்குதாரர்கள் ஆகிறார்கள். அவ்வகையில் அவர்களும் எமது அரசியல்-ராணுவ எதிர்தாக்குதலுக்கு எதிரான இலக்குகளே. ஆனாலும் புலிகள் இயக்கமும் மாறிக்கொண்டுதான் வந்திருக்கின்றது. வளர்ச்சிப்பாதையில் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களை சரிப்படுத்திக்கொள்ள எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றோம்.”
(வீரம் விளைந்த மண் பாகம்-2, அருட் தந்தை ஜெகத்கஸ்பர்)
-தமிழ்நேயன்-
-http://www.tamilwin.com