புலிகள் கூட்டமைப்பை ஏன் உருவாக்கினர்?

தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் 2002ஆம் ஆண்டு பொற்காலமாகும். புலிகள் நடத்திய 3 நாள் போரில் உலகமே அதிசயித்துப் பார்க்குமளவிலான வெற்றியை 2000ஆம் ஆண்டுகளில் பெற்றார்கள்.

இந்தப் போரியல் வெற்றியுடன் இலங்கை அரச படைகள் மற்றும் புலிகளுக்கிடையிலான படைவலு சமநிலைப்பட்டது என அப்போதைய இராணுவ ஆய்வாளர்கள் எழுதிவந்தார்கள். இதேகாலப்பகுதியில் ஓர் அரசின் படைகளுக்கு சமதையான கடல் இறைமையையும் புலிகள் பெற்றிருந்தனர். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அவ்வாறான பலத்தைப் பெறுவதென்பது, அதுவும் புலிகள் போன்ற கொரில்லா போராட்ட அமைப்பு பெறுவதென்பது சர்வதேச படையியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய விடயமாக இருந்தது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் படையியல் முன்னேற்றம் ஆச்சரியமானதாக இருப்பினும், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு உருவாக்கப்பட்டிருந்த பெயர் மிகமோசமானதாக இருந்தது. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் என்கிற வகைக்குள் புலிகள் உள்ளடக்கப்பட்டு நோக்கப்பட்டார்கள். இந்த பெயரை உருவாக்கிக் கொடுத்தவர்கள் யாரெனில், தமிழ் ஜனநாயக அரசியல் சக்திகள், அதாவது, தமிழ் மென் அரசியல் சக்திகள் என அறியப்பட்டவர்கள்தான். மேற்கு நாடுகள் பல புலிகளைத் தடைசெய்தமைக்குக் கூட இந்த மென் சக்திகள் செய்த பரப்புரைதான் காரணம்.

2000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பகுதிகள் (வடக்கு – கிழக்கு) இருவகை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கொண்டிருந்தன. ஒன்று இலங்கை இராணுவத்தின் கட்டுபாட்டுப் பகுதி, மற்றொன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலங்கை அரசின் எவ்வித அரசியல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவில்லை. கிட்டத்தட்ட வடக்கு – கிழக்கில் 30 வருட காலம் இதே நிலைமைதான். இலங்கை என்ற ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் (தனித் தமிழீழ அரசாக, நாடாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை. நிதிசார் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசையே நம்பியிருக்க வேண்டியிருந்தமையால் தேசம் என்று குறிப்பிடுவதே பொருத்தம் எனக் கருதுகிறேன்) அரசியல், படையியல், குடியியல், பொருளாதாரமென வலுவான கட்டமைப்புக்களுடன் பிரிந்து நின்ற காலம் அதுவாகும். இதே காலப்பகுதியில் இலங்கை அரசு, அதன் நிர்வாகக் கட்டமைப்பு, இராணுவம் மற்றும் இலங்கையிலிருக்கும் ஏனைய கட்சிகளின் அரசியல் பற்றி அறிந்துகொள்ளாத, அதில் விருப்புக்கொள்ளாத தலைமுறையொன்றும் உருவாகியது.

இவ்வாறு இருவேறு கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாகியிருந்தமையால் இலங்கை என்ற நாட்டுக்குப் பொதுவாக நடக்கும் எந்தத் தேர்தல்களும் 2004ஆம் வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நெருங்கவில்லை. இலங்கை அரசினால் நடத்தப்படும் தேர்தல்களில் புலிகள் அக்கறை காட்டாமல் இருந்தமையும், அதனைப் புறக்கணித்து வந்தமையும் இதற்குப் பிரதான காரணம். பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதே புலிகளின் இறுதி இலட்சியமாக இருந்ததாலும், இலங்கையின் ஜனநாயக வழி மென் அரசியலில் தமிழர்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டு இருந்தமையாலும் புலிகள் இதனை விரும்பாதிருந்தனர். எனவே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குரிய சில தேர்தல்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நடந்தன. ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு செயற்பட்ட தமிழ் தலைமைகள் இதனை சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டன. உதாரணமாக, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை 1980 ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த வவுனியாவில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஈ.பி.டி.பி அதிக செல்வாக்குப் பெற்றிருந்ததோடு, பிரதேச சபை தலைவராகவும் ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஒருவரே தெரிவுசெய்யப்பட்டார். யாழ். மாவட்டத்துக்கான பொதுத் தேர்தல் நெடுந்தீவில் நடந்தது. அங்கிருந்தே யாழ். மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இந்தத் தேர்தல்களில் மிகக் குறைந்தளவிலான வாக்குகளுடன் முழு யாழ். மாவட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. இப்படியே புலிகளின் கட்டுப்பாட்டுக்குரிய அரசியல், நிர்வாக நடைமுறைகளை இலங்கை அரசு மேற்கொண்டது.

வடக்கின் மிக முக்கிய அரச கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த வவுனியாவும், யாழ்ப்பாணமும் இராணுவத்தின் வசமிருந்தாலும், புளெட், ரெலோ, ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய ஆயுதக் குழுக்களைக் கொண்டே அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு செயற்பட்டு வந்த ஆயுதக் குழுக்களில் இருந்தும், தமிழரசுக் கட்சியிலிருந்தும் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்பதை விட புலிகளுக்கு எதிரான சர்வதேச பரப்புரைக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டார்கள்.

இவ்வாறு இலங்கை அரசு மேற்கொண்ட தேர்தல்களுக்கும் ஆயுதப் போராட்ட காலத்துக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். எனவே, இந்தக் காலப்பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த தமிழர் பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தலைமைகளும் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவான தமிழ் தலைமைகள் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்கக்கூடியவர்களாக இருந்தனர். அதற்குப் பொருத்தமான தமிழ் ஜனநாயக அரசியல்வாதிகளையும், விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த பிற இயங்கங்களின் தலைவர்களையும், செயலாளர்களையும் இலங்கை அரசு தெரிவுசெய்து இதற்குப் பயன்படுத்தியது. ஜனநாயக வழிமுறையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களாக இந்தத் தலைமைகள் இருந்தாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச பரப்புரையை மேற்கொள்ளவே இவர்கள் இலங்கை அரசினால் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் வெளிநாட்டுத் தூதுவராலயங்களும், வெளிநாடுகளுக்கும் சென்று, நாம்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், ஜனநாயக வழிமுறையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புலிகள் பயங்கரவாதிகள், மிகமோசமான வன்முறையாளர்கள், வடக்கு – கிழக்கில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை எனப் புலிகளுக்கு எதிரான பெரும் பரப்புரையைச் செய்தனர். இதனால், புலிகளின் ஆயுதப் போராட்டம் சர்வதேச ரீதியில் மிலேச்சத்தனமானது என்ற முத்திரையிடலுக்குள்ளானது. எனவே, இந்த வகை ஜனநாயகத் தமிழ் தலைமைகள் புலிகளின் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டவர்களாகவும், கொலைப் பட்டியலுக்கு உரியவர்களாகவும் இருந்தனர்.

இதனை இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அடிக்கடி நினைவுகூர்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். “புலிகளின் கொலைப் பட்டியிலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இருந்தன” என அவர் குறிப்பிடுவார். எனவேதான் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரா. சம்பந்தன் அரசுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகவும், விசுவாசமுள்ளவராகவும் செயற்பட்டார். இதனால், அமைச்சரவை அந்தஸ்துக்குரிய வசதி வாய்ப்புக்களைக் கூட இலங்கை அரசிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார். உதாரணமாக, இலங்கை அரசியலில் மிகக் கணிசமான முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குண்டுதுளைக்காத வாகனத்தை இரா. சம்பந்தன் அப்போது பெற்றிருந்தார் என்ற கதை கூட உண்டு.

இவ்வாறு புலிகளுக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட தீவிரமான பரப்புரையால் சர்வதேச ரீதியில் புலிகள் தலைகுனிவிற்குள்ளானார்கள். போர்முனையில் புலிகள், உலகமே வியக்கும் சாதனைகளை நிலைநாட்டினாலும், தமது கொள்கை நிலைப்பாட்டையும், ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தையும் சர்வதேசத்திடம் முன்வைத்து, அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்தப் பரப்புரைகள் பெரும் தடையாயிருந்தன. அப்போதுதான் ஜனநாயக அரசியல்வாதிகளின் பலத்தைப் புலிகள் உணர்ந்துகொண்டார்கள். எனவேதான் தமிழ் ஜனநாயகத் தலைமைகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமது குரலாக அவர்களை மாற்ற வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு.

2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இது இரண்டாம் காலம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாம் காலம் புலிகளோடு முடிவடைய, இரண்டாம் காலம் புலிகளற்ற அரசியல் வெளியில் ஆரம்பமானது. இந்தக் காலத்தில் 3 முக்கிய பணிகளைத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிகழ்ச்சி நிரல்படுத்தினார்.

1ஆம் பணி

இரண்டாம் காலத்தைப் பொறுப்பெடுத்தவுடனேயே இரா. சம்பந்தன் செய்த முதல் பணி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த புலிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தயாராயிருந்த புதியவர்களை வெற்றிகரமாக வெளியேற்றியமைதான். புலிகளுக்கு விசுவாசமான புதியவர்களுக்குப் பதிலாக இரா. சம்பந்தனுக்கு விசுவாசமான புதியவர்கள் அணி அந்த இடைவெளிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டது. இரா. சம்பந்தன் உருவாக்கிய புதியவர்கள் அணியைச் சேர்ந்தவர்களின் முதல் தகுதி தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். அத்துடன், தமிழரசுக் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், அதில் திழைத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.

2 ஆம் பணி

இரண்டாவது பணியாக, புலிகள் விட்டுச் சென்ற ஏகப்பிரதிநித்துவ இடைவெளியை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்படியே சுவீகரித்துக் கொண்டது. ஏகப் பிரதிநிதித்துவ அந்தஸ்த்தில் நின்றடியே, தமிழர்களைக் கொன்றொழித்த இரத்த வெடிலோடு வந்துநின்ற சரத் பொன்சேகாவுக்குத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு கோரியது. ‘தமிழ் சனங்கள் முட்டாள்கள்’ என்பதை 2010இல் மீளவும் நிரூபித்திக் காட்டினார்கள். 2009இல் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட மூல காரணமாக இருந்த ஒருவரை ஒரு வருடத்துக்குள் அவரால் காயப்படுத்தப்பட்ட அதே தமிழர்களைக் கொண்டு வாக்களிக்கச் செய்த பெருமையும் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும்.

3ஆம் பணி

மூன்றாவது பணி எதுவெனில், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சிகளின் கூட்டை வலுவற்றதாக்கி, இரா. சம்பந்தன் தலைமை வகித்த தமிழரசுக் கட்சியை முதன்மை நிலைக்கு கொண்டு வருவதே ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீடு தமிழரசுக் கட்சியிடம் கடன் வாங்கியதாக இருந்தமையினால், அவ்வாறு தமிழரசுக் கட்சியை முதன்மை நிலைக்குக் கொண்டு வருவதில் பெரிய சிரமங்களும் இருக்கவில்லை. இரா. சம்பந்தனின் விசுவாசிகளாக இருந்த புதியவர்கள் இதற்கு உள்ளும் புறமுமாக உழைத்தனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகளுக்குள் தமிழரசுக் கட்சி மட்டும் மேலிருந்து கீழ் நோக்கி தீர்மானிக்கும் சக்தியாக மாறிவருவதை, அதற்குள் இருக்கின்ற ஏனைய கட்சிகள் விரும்பவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பிரதானி சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த விடயத்தில் அடிக்கடி கிளர்ந்தெழுந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என தமிழரசு கட்சி தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரிநின்றன. தமிழ் மக்களுக்கு விளக்கமற்ற கட்சி பதிவு விடயத்தைத் திட்டமிட்டே ஓரங்கட்டி வந்தார் இரா. சம்பந்தன்.

அதற்குப் பிரதான காரணம் இன்றிருக்கின்ற பெரும்பாலான தமிழர்களுக்கு, ‘வீடு’ என்ற அரசியல் குறியீட்டையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளால் உருவாக்கப்பட்டு, புலிகளின் நினைவு எச்சமாக மிஞ்சியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் சின்னமான வீடும் மட்டும்தான். அவர்களுக்கு கூட்டமைப்பென்பது தனியொரு கட்சி. வீடு கூட்டமைப்பின் சின்னம் என்றே அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவு அறுந்த வரலாறு எல்லாம் சாதாரண வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கவில்லை. அதனைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் அச்சு ஊடகங்களுக்கு இருந்தது. ஆனால், அதனை எந்த ஊடகங்களின் நிகழ்ச்சிநிரலிலும் கூட்டமைப்பின் உண்மைதன்மையை வெளிப்படுத்தும் விடயம் உள்ளடங்கவில்லை. தமிழ் அச்சு ஊடகங்களின் சீழ் வடியும் அவலமான பக்கங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தி, அதிகாரமிக்க சக்தியாக முன்னிறுத்தும் வேலைத்திட்டங்கள் நடந்தாலும், இதுவரை அந்தக் கட்சி கூட்டமைப்பை விட்டு வெளியேற விரும்பவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தமிழரசுக் கட்சியின் அடையாளத்தோடு வாக்கு கேட்டு மக்களிடம் வந்தால் இலகுவில் தோற்றுவிடுவோம் என்பதை அதன் தலைமைகள் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், காலப்போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை மறக்கச் செய்து தமிழரசுக் கட்சியை ஆழப் பதிய வைக்க முடியும் என்பதில் அந்தக் கட்சியின் தலைமை அசையாத நம்பிக்கை கொண்டிக்கின்றது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

நன்றி…

அன்புச் செல்வன்(த-வி-பு)

-http://www.pathivu.com

TAGS: