சொந்த நாட்டு மக்களை விட அக்கம்பக்க நாடுகளையும் வல்லரசுகளையும் கூடுதலாகக் கவனிக்க வைத்திருக்கிறது ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.
முன்னாள் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இதில் வெற்றியா, தோல்வியா என்ற அவர்களின் ஆவல் ஒருபுறம் இருக்க, இந்தத் தேர்தலால் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு என்ன பலன்? தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 196 நாடாளுமன்ற உறுப்பினர் (நா.உ) இடங்களில், தமிழீழப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வட மாகாணம், (யாழ்., கிளிநொச்சி அடங்கிய) யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 7 இடங்களும் (மன்னார், வவுனியா, முல்லைத்தீவு அடங்கிய) வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 இடங்களும் உள்ளன. கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 5 இடங்களும் திகாமடுல்ல என மாற்றப்பட்டுள்ள அம்பாறையில் 7 இடங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 4 இடங்களும் உள்ளன.
கடந்த 2010 தேர்தலில், யாழ். தேர்தல். மாவட்டத்தில் இருந்த 9 நா.உ. இடங்களில், 2 இடங்கள் இந்தமுறை இல்லாமல் போய்விட்டன. காரணம், மொத்த வாக்காளர்களில் 2,06,037 பேர் குறைந்துள்ளனர். இதேசமயம், கிழக்கு மாகாணத்தில் 92,614 வாக்காளர்கள் அதிகரித்துள்ள போதும், அதற்கேற்ப நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்கவில்லை.
ஏற்கனவே சிறுபான்மையினர் என்ற காரணத்தால் ஈழத்தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகையில், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் வாய்ப்பிலும் கைவைத்திருப்பது, தமிழீழ சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க இழப்பாகும்.
போரினால் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலிய நாடுகளுக்கு ஈழத்தமிழர் இடமபெயர்ந்ததைப் பயன்படுத்தி சிங்களத் தரப்பு செய்த சதியை முறியடிப்பதில், தமிழர் கட்சிகளால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
நேர்மாறாக, கடந்த வாரம் முதல், ஈழத்தமிழர் பிரச்சினையானது தேர்தல் பிரச்சாரத்தில் சிங்களக் கட்சிகளின் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான், இதற்கு அச்சாரம் போட்டது எனச் சொல்லலாம்.
அதில், இலங்கைத் தீவின் பூர்வீகக்குடியே ஈழத்தமிழர் இனம், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஈழத்தமிழர் தாயகம், ஐ.நா. சாசனம் அங்கீகரித்துள்ள ஈழத்தமிழர் தேசிய இனத்துக்கான தன்னாட்சி உரிமை ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது. இந்த மூன்றும் ’திம்பு கோட்பாடு’ எனப் பரவலாக அறியப்பட்டதே!
அண்மைக் காலம்வரை ஈழம் என்பதை எதிர்த்தே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேசிவந்தார் என்றாலும், தேர்தல் அறிக்கையில் ’தமிழீழத் தாயகம்’ கோட்பாட்டையும் இடம்பெறச் செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் அவர்களால் முன்னிறுத்தப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய முன்னாள் நா.ம. உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து, இரு தேசம்- ஒரு நாடு, அதாவது‘இலங்கை என்ற நாட்டுக்குள் தமிழர், சிங்களவருக்கு தனித்தனியாக இரு தேசங்கள்’ என்ற கொள்கையை முன்வைத்து, புதியதாக 2010-ல் த.தே.ம. முன்னணியைத் தொடங்கினார்கள்.
போர் முடிந்து பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட்டிருந்த மக்கள் மத்தியில், தனி ஈழம் கொள்கையை முழங்கியபடி மட்டும் இருந்த முன்னணியால், கடந்த தேர்தலில் ஒரு இடம்கூட பிடிக்க முடியவில்லை. பின்னர், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த… வடக்கில் முன்னணிக்கு கணிசமான ஆதரவு உருவாகியுள்ளது.
சம்பந்தன், மாவை சேனாதிராசா போன்றவர்கள், சிங்களக் கட்சிகளுக்கு அனுசரணையாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் செயல்படவிடாமல் முடக்குகின்றனர் என்றும் போர் முடிந்த ஆறு ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களின் அவரவர் சொந்த இடத்தில் மீளக்குடியமரவும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவும் எதுவும் செய்யவில்லை என்றும் இலங்கையிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடமும் கெட்ட பெயரை உண்டாக்கியது.
இந்த சூழலில், இந்திய அதிகார சக்திகளுக்கு ஆதரவாகக் கருதப்படும் என். வித்தியாதரனின் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’, புலிகளின் தொடர்ச்சி எனக் கூறி, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலின் போது இனப்படுகொலைக் குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் கூட்டமைப்புக்கு அதிகமாகவும் வாக்களித்து, உலக நாடுகளுக்கு வாக்குச்சீட்டின் மூலம் தெளிவான செய்தியை உணர்த்தினார்கள்,
ஈழத்தமிழர்கள். கடந்த பெப்ரவரியில் நடந்த அரசு அதிபர் தேர்தலில் “”தமிழர்களால்தான் தோற்கடிக்கப்பட்டேன்” என மகிந்தாவே பகிரங்கமாகச் சொல்லும் அளவுக்கு, வாக்களிப்பு இருந்தது.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்திலும் அதே நிலை தொடர… இனப்படுகொலைக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க எப்படியாவது பிரதமராவது எனத் துடிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு சிக்கலாகிப் போனது.
இனப்படுகொலையின் மறைமுகப் பங்காளியான கோத்தபாய ராஜபக்சவை பிரச்சாரத்தில் இறக்கி, ரணிலும் கூட்டமைப்பும் இரகசிய உடன்பாடு செய்திருப்பதாகவும் அதனால் இலங்கையில் மீண்டும் ’பிரிவினை அபாயம்’ ஏற்பட்டிருப்பதாகவும் சிங்களவர்களை உசுப்பத் தொடங்கினார்கள்.
கடந்த வாரம், 64 சிங்கள, பௌத்த அமைப்புகளுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்த மகிந்த தரப்பு… பிரச்சாரத்தில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை உமிழத் தொடங்கியிருக்கிறது.
அதன் அடுத்த கட்டமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புலிப்பட்டம் கட்டி, சிங்களவர்களின் வாக்குகளை வேட்டையாடத் தீவிரம் காட்டுகிறது, மகிந்த ராஜபக்ச கூட்டம்!
தற்செயலோ, யார் திட்டமிட்டோ இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், ஈழத்தமிழரின் நீண்டகால -அடிப்படை அரசியல் கோரிக்கைகள், பேசப்படுவதாக மாறியிருப்பது, தமிழ்ச் சமூகத்துக்கு எள்முனை அளவாவது பயன் தருவதாகவே இருக்கும்!
-http://www.tamilwin.com