தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்குள் தள்ளும் முகவர்கள்!

viththi_kajenthiran_0இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் அமைப்பும் இந்த எதிர்பாராத போட்டிக்கு காரணமாக இருக்கின்றது

ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் தலைமைத்துவமும் ஒரு காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கமாக இருந்தவர்கள் என்பதுதான் இவர்கள் யார் என்பதை காட்டி கொடுக்கின்றது.

முதலாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர், அதை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு.சம்பந்தன் அவர்கள் இவருக்கு வேட்பு மனு கொடுக்காத போது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி வெளியேறி, தனது சொந்தக் கட்சியில் களமிறங்கினார். களமிறங்கி படுதோல்வி கண்டதுமன்றி டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஒரு ஆசனத்தை கூட்டி கொள்வதற்கு வழி சமைத்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கு உடன்படவில்லை என்று கூறும் இவரது கொள்கை என்னவெனில் பொதுத்தேர்தலை தவிர்த்த மற்ற எந்தவொரு தேர்தலும் தமிழ் மக்களுக்கு நன்மை தராது என்பதேயாகும்.

பொதுத்தேர்தல் மட்டும் எப்படி தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கேட்டால் இவரிடம் பதில் இல்லை. 13வது திருத்தச் சட்டம் பிரயோசனமற்றது என்று கூறும் இவர் அந்த சட்ட மூலத்தை அங்கிகரித்த திரு.விக்னேஸ்வரன் தலைமை தாங்கினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணையத் தயார் என்றும் கூறுகின்றார்.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இவருக்கு ஒரு கொள்கை இருப்பதாக தெரியவில்லை. தனது பெயரின் பின்னால் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக மாத்திரம் சட்டம் பயின்ற இவர் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்காகவும் உயர் நீதிமன்றங்களில் வாதாடியது கிடையாது.

தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வதும் ஊடகங்களில் பேசுவதோடும் இவரது அரசியல் மௌனித்துவிடும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க சொல்லி இவர் ஊடக சந்திப்பை நடத்தினார். தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதால் மீண்டும் மூன்றாவது தடவையாக மஹிந்த ஜனாதிபதி ஆகுவார் என்பது இவருக்கு தெரியாத ஒன்றல்ல.

அப்படி மஹிந்த ஜனாதிபதி ஆகியிருந்தால் தமிழ் மக்களுக்கு இப்போது இருக்கின்ற சிறிதளவு சுதந்திரம் கூட இருந்திருக்காது. ஆகவே தமிழ் மக்கள் எப்போதும் இருட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாகும். அப்படியில்லை என்றால் மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுமாறு இவர் மறைமுகாமாக தமிழ் மக்களிடம் கோரியிருக்க மாட்டார்.

ஆனால் மக்கள் இவரது பேச்சைக் கேட்கவில்லை, தமிழ் மக்கள் ஒரு வரலாற்றை உருவாக்கினார்கள். ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள். அதன் பயனாக அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் வந்தது.முழு நாடும் பயன்பெறத்தக்க ஒரு மாற்றத்தை தமிழ் மக்கள் ஏற்ப்படுத்தினார்கள்.

அன்று மாற்றம் வேண்டாம் என்ற கஜேந்திரகுமார் இன்று மாற்றம் வேண்டும் என்று நிற்கிறார். அன்றைய மாற்றம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை சுமூகமாக இருக்க தேவைப்பட்டது, அதையே வேண்டாம் என்ற இவர் இன்று யாருடைய நன்மைக்காக மாற்றம் வேண்டும் என்கிறார்.

இது அவருடைய சுய நல அரசியலை எடுத்து காட்டுகின்றது. இப்படியொரு சுயநல அரசியலைத்தான் இவரது தந்தையும் மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் வாக்கெடுப்பின் போது செய்தார்.

எவ்வளவு அடிபட்டாலும் கஜேந்திரகுமார் திருந்தியதாக தெரியவில்லை. இவருக்கு சொல்லகூடிய ஒரு அறிவுரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்வரை தான் உங்களுக்கு மக்கள் வாக்கு அளித்தார்கள்.

இதுதான் உண்மை இது உங்களுக்கு மட்டுமல்ல ஏனைய தமிழ் வேட்பாளர்களுக்கும் பொருந்தும். அதனாலேதான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எந்தவொரு பங்காளி கட்சிகளும் விலகவில்லை.

விலகினவர்கள் ஜெயித்ததும் இல்லை இது வரலாறு. நாளை சம்பந்தனோ அல்லது விக்னேஸ்வரனோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகினால் அவர்களுக்கும் இதே நிலைமைதான்.

இரண்டாவது நபர் திரு. வித்தியாதரன் இவர்தான் முன்னாள் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை செயலாளர். இவர் வழிகாட்டலில்தான் கடந்த பல வருடங்களாக தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுரை நடாத்தப்பட்டு வந்தது. திடீரென்று தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு யாழ்ப்பாணத்தில் இவர் தனது வேலைகளை ஆரம்பித்தார். இன்று இவரது தலைமையில்தான் ஜனநாயக போராளிகள் கட்சி இயங்குகிறது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் இந்த ஜனநாயக போராளிகள் கட்சி வெளிச்சத்திற்கு வந்தது. வேட்பாளர்களை தேர்வு செய்கின்ற நாளிலேதான் இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஆசனம் ஒதுக்கி தரும்படி கேட்டு நின்றார்கள். இவர்கள் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடம் நிராகரித்தது.

உண்மையிலேயே முன்னாள் போராளிகளை அரசியலில் ஈடுபடுத்த வித்தியாதரனுக்கு மனமிருந்திருந்தால் அவர் இதைவிட புத்தி சாதூர்யமாக நடந்து கொண்டிருக்க முடியும்.

1. ஒரு சில முன்னாள் போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் ஊடாக இவர் நிறுத்தியிருக்கலாம். ஏன் இவர் அங்கம் வகித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடாகவும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

2. இல்லை முன்னாள் போராளிகளுக்கு என்று ஒரு கட்சி வேண்டும் என இவர் நினைத்து இருந்தால் ஜனநாயக போராளிகள் கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பில் பங்காளி கட்சியாக இவர் கொண்டு வந்திருக்கலாம்.

3. ஏன் முன்னாள் போராளிகளில் சிலரை இவரால் கடந்த மாகாண சபை தேர்தலில் நிறுத்த முடியவில்லை. ஏன் மாகாண சபை தேர்தலில் இவர் ஆசன ஒதுக்கீடு கேட்கவில்லை

இவை எதனையும் செய்யாமல் இறுதி நேரத்தில் ஆசன ஒதுக்கீடு கேட்டு அது நிராகரிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னால் போராளிகளை ஒதுக்கிவிட்டது என்று கூறுவது சிறு பிள்ளைத்தனமான ஒரு செயலாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற ஒரு கூட்டணி கட்சியில் ஆசன பகிர்வு என்பது ஒரு கடினமான விடயம் என்பதும் இறுதி நேர கோரிக்கைகளை உள்வாங்குவது என்பது சிரமமான விடயம் என்பதும் வித்தியாதரனுக்கு தெரியாத விடயமல்ல.

கவலைக்கிடமான விடயம் யாதெனில் தனது சுயநல அரசியலுக்காக முன்னாள் போராளிகளை வித்தியாதரன் விற்பதுதான். முன்னாள் போராளிகளையும் விடுதலை போராட்டத்தையும் விற்று தனது அரசியலை ஆரம்பிக்கின்றார் வித்தியாதரன்.

எனவே கஜேந்திரகுமார் மற்றும் வித்தியாதரன் ஆகியோர் வெறும் சுய நல அரசியல்வாதிகளே தவிர தமிழ் மக்களின் இன்னல்களை தீர்க்கும் என்னமோ திட்டமோ இவர்களிடம் இல்லை.

எனவே தமிழ் மக்கள் இவர்கள தொடர்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் எம் மக்களை இவர்கள் தள்ளி விடுவார்கள்.

நன்றி
ர. பாலச்சந்திரன்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: