ஈழத்தமிழர்களின் அரசியல் தந்தை என போற்றப்படும் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் அமரர் தந்தை செல்வநாயகத்தின் உருவச் சிலை இனந்தெரியாத சிங்கள இனவாதிகளினால் சிதைக்கப்பட்டுள்ளது.
1977-ம் ஆண்டு தமிழர்களுக்கென தமிழரசுக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் நினைவாக இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையின் தலைப்பகுதியை சிங்கள இனவாதிகள் சிதைத்துள்ளனர்.
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அரசியல்வாதிகளை கொன்றொழித்த சிங்கள பேரினவாதிகள் தற்போது தமிழர்களின் நினைவுச் சின்னங்களிலும் கை வைக்கத் தொடங்கிவிட்டனர்.
திருகோணமலை சிவன்கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை 1983-ம் ஆண்டு கலவரத்தின்போது சிங்கள இனவாதிகளினால் உடைக்கப்பட்டு பின்னர் 1990-ம் ஆண்டு மீண்டும் அவரது உருவச்சிலை புனர்நிர்மானம் செய்யப்பட்டு அங்குள்ள கோயில் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது உருவச்சிலை நேற்றிரவு சிதைக்கப்பட்டுள்ளது. இச்செயலுக்கு இலங்கையிலுள்ள பல தமிழ் அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.
தந்தை செல்வா பற்றிய குறிப்பு…
31-03-1898-ல் மலேசிய மண்ணில் பிறந்த தந்தை செல்வா, இலங்கையின் புகழ்பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்ததோடு பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர்.
1977 ஏப்ரல் 26-ல் மறைந்த அவர், 1947-ல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் கால்வைத்தார்.
1972 மே 22 -ம் நாள் சிங்களவர் சேர்ந்து இயற்றிய புதிய அரசியலமைப்பு இலங்கையில் நடைமுறைக்கு வந்தது. அந்த அரசியலமைப்பின் நகல் ஒன்றை, 1972 மே 25-ம் நாள், யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் பலர் முன்னிலையில் திரு. செல்வநாயகம் தீயிட்டுக் கொளுத்தித் தமிழ் மக்கள் அந்த அரசியலமைப்பை ஏற்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் சிங்கள அரசின் இனவாதப் போக்கினால் 1972 அக்டோபர் 3-ம் நாள் தனது நாடாளுமன்ற பதவியைத் தந்தை செல்வா உதறித் தள்ளினார். பணிதுறப்புக்கு முன் அவர் நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர், 1976 மே 14-ம் நாள் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் இறைமையும் தன்னாட்சியும் சுதந்திரமும் உடைய சுதந்திர நாடாகத் தன்னைத் தமிழீழம் அமைத்துக்கொள்ளும் என்ற தீர்மானத்தை திரு. செல்வநாயகம் நிறைவேற்றினார்.
தனது வாழ்நாளில் இறுதிவரை செல்வநாயகம் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. எந்தத் தனிப்பட்ட சலுகையையும் பெறவில்லை. செல்வந்தராக அரசியலில் நுழைந்த அவர், சில காலங்கள் தனது செலவுக்குக் கூடச் சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடையை எதிர்பார்த்து வாழவேண்டியிருந்தது.
1949-ல் இரு வழிகளைப் பற்றிக் கூறிய அவர், 1972 வரை கூட்டாட்சி அரசியலமைப்பைச் சிங்களவர் ஏற்றுக்கொள்ளப் பலவாறு முயன்று தோல்வியடைந்தார். அந்த வழியில் சென்று உரிமை பெறாத மக்கள், மற்ற வழியில் செல்லும் காலம் வந்துவிட்டதை உணர்ந்து அதற்காகத் தமிழ் மக்களைப் படிப்படியாக 1972-ல் இருந்தே தயார் செய்து 1976-ல் தீர்மானமாகக் கொண்டுவந்தார்.
தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல அரசியல் போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் அறவழிப் போராட்டங்களாகவே அமைந்தன. அவரின் நேர்மையும் உறுதிகுன்றாக் கொள்கைத் தெளிவும் தமிழ்மக்களைக் கவர்ந்தன. அதனால், அவர்கள் அவரைத் தந்தை செல்வநாயகம் என அழைத்தனர். அவர் காட்டிய வழிகளைச் சரியான வழிகள் எனக் கைக்கொண்டனர்.
“தமிழீழம் அமைப்பது வில்லங்கமான ஒரு காரியம்” என்று அவர் கூறினார். எனினும், அதைத் தவிர வேறுவழிகள் மூலம் தமிழ் மக்கள் அடிமைத் தளையை அகற்ற முடியாது என அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.
ஒரு முழுமையான விடுதலைப் போராட்டத்துக்குத் தமிழ் மக்களைச் சிந்தனை ரீதியாகத் தயார்செய்து விட்டுத்தான் அவர் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் விதைத்துச் சென்ற விடுதலை உணர்வுகள் இன்றும் மறையாமலே உள்ளன.
[தொகுப்பு : தி. பிரசன்னா]