ரணிலுக்கு நம்பிக்கை! தமிழர்களுக்கு…! – இலங்கைத் தேர்தல் இறுதி நிலைவரம்

ranil_meetingஇலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராதபடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம், உச்சத்துக்குப் போயிருக்கிறது.

நேற்று  நள்ளிரவில் முடிந்த பிரச்சாரத்தில் தமிழ் மக்களைவிட, சிங்களவர் மத்தியில்தான் இரண்டு முன்னணி சிங்களக் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தமிழீழப் பகுதியான வட-கிழக்கு இலங்கையில், ஆரம்பம் முதல் கடைசிவரை பிரச்சாரம் மந்தமாகத் தான் இருந்தது.

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

முன்னாள் அரசு அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார்;

ஆனால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல். மகிந்தாவின் கோஷ்டியானது சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவைக் கூட்டி அவரை வேட்பாளராக அறிவிக்க முயற்சி செய்ய… நீதிமன்றம் மூலம் அதற்குத் தடை வாங்கிவிட்டது அதிபர் மைத்திரி தரப்பு.

முதலில் மகிந்தாவுக்கு எதிராகக் கருத்துக் கூறாமல் இருந்தார் அதிபர் மைத்திரி. பின்னர் அந்த நிலையிலிருந்து மாறி, கடந்த ஜன.8-ம் தேதி அதிபர் தேர்தலில் மகிந்தாவைத் தோற்கடித்ததைப் போலவே இந்த முறையும் மக்கள் முடிவெடுக்கவேண்டும் என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

மகிந்த குடும்ப ஆட்சியை நாட்டில் மீண்டும் வரவிடக்கூடாது என்று முன்னாள் அதிபரும் கட்சியின் புரவலருமான சந்திரிகாவும் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்.

தமிழ்ப் பிரிவினைவாதத்தை பிரதமர் ரணில் ஆதரிக்கிறார் என்று சிங்களவர் மத்தி யில் மகிந்தா கூட்டம் வெறுப்புப் பிரச்சாரம் செய்ய… ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு எனக் கூறி எதிராளிக்கு ஏமாற்றம் தந்தார், ரணில் தமிழர்களுக்கும் சேர்த்துதான்.

ஈழத்தமிழர் தரப்பில் கூட்டமைப்பு, சிங்களவர் மத்தியில் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவால் எளிதாக வெற்றிபெற முடியும் என உறுதியாக நம்புகிறார் ரணில்.

முந்தைய தன்னுடைய ஆட்சியில் பல குற்றங்கள், ஊழல்கள் குறித்து மன்னிப்பு கேட்டும் கடந்த ஆறு மாத கால மைத்திரி+ரணில் கூட்டணியின் ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்றும் பிரச்சாரத்தை மாற்றிமாற்றி ஆட்சி இலக்கில் வெறிகொண்டு இயங்குகிறது, ராஜபக்சாக்கள் கூட்டம்.

அதுபோல, ரணிலுடன் இருக்கும் சிங்கள இனவாதக் கட்சிகள், ஈழத்தமிழருக்கான தனி வட-கிழக்கு மாகாணத்தையே ஏற்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால், ரணில் பிரதமராவதை ஆதரிக்கச் சொல்கிறது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முன்பைப் போல கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஏகமனதாக வாக்களிப்பார்களா என்பதும் தற்போது கேள்வியாகி உள்ளது.

கூட்டமைப்பால் வடக்கு இலங்கை முதலமைச்சர் ஆக்கப்பட்ட முன்னாள் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரனோ, கூட்டமைப்பு அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை மீறியும் ஏமாற்றியும் நடந்து கொள்வதால் நடுநிலைமை வகிப்பதாக அறிவித்தார்.

அடுத்தடுத்த சஸ்பென்ஸ் காட்சிகளால் பரபரப்பான இந்த தேர்தலில் என்ன முடிவு என்பதில் அமெரிக்க அரசும் மறைமுகமாக சீன, இந்திய அரசுகளும் ஆவலோடு இருக்கின்றன.

இவர்களை மீறி இப்போதைக்கு ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு இல்லை என்பது கசப்பான உண்மை!

-http://www.tamilwin.com

TAGS: