இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 17-ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவாத்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.
அரசு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாக கூறியுள்ளார்.
எனக்கு கிடைத்திருக்கின்ற மக்கள் ஆணையின்படி, எங்களின் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோரவுள்ளோம். அதன் மூலமே எங்களின் அரசியலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்’ என்று கொழும்பில் செய்தியாளர்கள் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓரிரு ஆண்டுகளாவது அனைத்து அரசியல் சக்திகளும் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த முடியும் என்றும் ரணில் கூறினார்
மீண்டும் மக்களை பிரித்தாளும் அரசியலை யாரும் முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறினார்.
இந்தப் பணியிலிருந்து யாரும் ஒதுங்கிவிடுவார்கள் என்றோ அல்லது பிரித்தாளும் அரசியலை நோக்கி மீண்டும் யாரும் செல்வார்கள் என்றோ நான் நினைக்கவில்லை. நாம் அதனை அனுமதிக்க மாட்டோம் என்றார் விக்ரமசிங்க.
கடந்த ஜனவரியில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, தற்போது கிடைத்துள்ள தேர்தல் வெற்றியின் மூலம் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதியின் உதவியுடன் ரணில் சவால்களை சமாளிப்பார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத்திலும் நிர்வாகத்திலும் சவால்களை சமாளிப்பார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் ரணிலின் அரசுக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் முன்வரலாம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணிலின் அரசுக்கு ஆதரவளிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் சிலோன் டுடே பத்திரிகையின் பிரதான ஆசிரியர் ஆனந்த் பாலகிருட்ணர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கணிசமான இடங்களைப் பெற்றிருந்தாலும், ஜனாதிபதியின் ஆதரவு பிரதமருக்கு இருப்பதால் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவால் பெரிய சிக்கல்களை ஏற்படுத்த முடியாது என்கிறார் ஆனந்த் பாலகிருட்ணர்.
வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, மஹிந்தவைவிட ரணில் விக்ரமசிங்க சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்கிறார் அவர்.
-http://www.tamilwin.com


























இதைத்தான் 60 வருடங்கள் கேட்டு புளித்து போய் விட்டது வாடா கிழக்கில் இன்று வரும் குழந்தைகள் விரைவில் ..எனது அப்பா எங்கே ..அக்கா எங்கே ..அண்ணன் எங்கே என்று கேட்டக போகின்றார்கள் ….இவர்கள் குமுறும் எரிமலையை விட ஆபத்தானவர்கள்