கொடுத்த வாக்குறுதியை மறுத்தவர் ரணில்..!

orabakaran_ranil_001இலங்கை முழுவதும் சிங்களவர் நாடு. தமிழர் இரண்டாம் தர குடிகளே என்ற கண்ணோட்டம், 1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கித் தலைமை வகித்தவர் பொன்னம்பலம் அருணாசலம்.

யாழ்ப்பாணத் தமிழரோடு இலங்கைத் தேசிய காங்கிரஸார் ஒப்பந்தம் செய்து ஆதரவை பெற்றனர். மேற்கு யாழ்ப்பாணத்தில் தமிழர் ஒருவர் சட்டசபை உறுப்பினர் ஆவார் என்பதே உடன்பாடு.

தேர்தலில் வென்ற உடனேயே உடன்பாட்டை மீறிய சிங்களவர்களை விட்டு, 1920ல் அருணாசலம் அகன்றார். சிங்களவர்களை நம்பமுடியாது என்ற கருத்தை அப்பொழுதே எழுதி வைத்தவர் அவரே.

2002ல் நோர்வே நாட்டு ஒஸ்லோ நகரில் விடுதலைப்புலிகளோடு பேசிய பின், 20 நாடுகளின் முன்னிலையில் தமிழர்களுக்கு ஒரு மாநிலம் சிங்களவர்களுக்கு ஒரு மாநிலம் என்று இரண்டு மாநிலங்களும் இணைந்த ஆட்சியாகக் கூட்டாட்சி அமைக்க ஒப்புக்கொண்டவர் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

ஆனால் அவ்வாறு தான் ஒப்புக்கொள்ளவில்லவே இல்லை என கடந்த சனிக்கிழமையன்று தமிழ் நாட்டில் இருந்த வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளாக தமிழர்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வருவதும் ஆட்சிக்க வந்த பின்னர் தமிழருக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுவதும் சிங்களத் தலைவர்களின் வாடிக்கையான போக்கு என்பதனாலேயே 1976ல் வட்டுக்கோட்டையில் செல்வநாயகம், பொன்னம்பலம், தொண்டமான் அமைத்த தமிழர் கூட்டணி, தமிழர்களுக்கு தனிநாடு அமைக்கும் தீர்மானத்திற்கு வந்தது.

2015 தேர்தலில் தமிழர் மரபுவழித் தாயகத்தில் இருந்து 18 உறுப்பினர்கள், மலையகத்தில் இருந்து 8 உறுப்பினர்கள் ஆக, மொத்தம் 26 தமிழ் உறுப்பினர்கள்(முஸ்லிம்களை சேர்க்காமல்), கட்சிகளின் தேசியப்பட்டியலில் இடம்பெறக்கூடிய 4உறுப்பினர்களையும் சேர்த்து 30 தமிழ் உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கப்போகின்றார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் நேரடி ஆதரவுடன் 106 உறுப்பினர்களைக்கொண்ட ரணில் ஆட்சி அமைப்பார் என்ற கருத்தை கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் துறைப்பேராசிரியர் ஜெயதேவா உயங்கொடை மறுக்கிறார்.

மகிந்த ராஜபக்சவின் அணியில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களே, ரணிலுக்கு ஆதரவு தருவார்கள் என்கிறார் உயங்கொடை.
அதாவது, தமிழரின் ஆதரவின்றியே ஆட்சியமைப்ப்பார் ரணில்.

தமிழருக்கு எதிரான அல்லது பாதகமான நிலைப்பாடுகளை ரணில் மேற்கொண்டால் ராஜபக்ச அணியினர் முழுவதுமே ரணிலுக்கு ஆதரவாக வாக்களிப்பர்.

1947ல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிங்களவர்கள் ஒன்றாக இணைந்து மலையகத் தமிழர்களின் குடியுரிமையை பறித்தனர்.

1956ல் கட்சி பேதங்களுக்கு அப்பால், சிங்களவர்கள் ஒன்றாக இணைந்து சிங்கள மொழியை ஆட்சி மொழி என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

1972ல் கட்சி பேதங்களுக்கு அப்பால், சிங்களவர்கள் ஒன்றாக இணைந்து புத்த மதமே  ஆட்சி மதம், சிங்கள மொழியே ஆட்சி மொழி, ஒற்றையாட்சியே அரசியலமைப்பு, தமிழர் நிலைப்பாடுகளை ஏற்கோம் எனப்  புதிய அரசியலமைப்பைத் தமிழர் பங்களிப்பின்றி தமக்குத் தாமே நிறைவேற்றினர்.

ஆக, கடந்த 100 ஆண்டுகளில் 14 உடன்பாடுகளை தமிழரோடு சமாதானம் செய்வதாக எழுதிய சிங்களவர்கள் ஒவ்வொன்றையும் பின்னர் கிழித்தெறிந்தனர்.

2015 தேர்தலில் வாக்குக் கேட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், 2016க்குள் தமிழர் உரிமைகள் ஒன்று பட்ட இலங்கைக்க்குள் தீர்ந்து விடும் என வாக்காளர்களுக்க உறுதியளித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு மாநிலம், சிங்களவர்களுக்கு ஒரு மாநிலம், இரண்டு மாநிலங்களும் இணைந்த கூட்டாட்சி அமைக்க அனைத்துலக நாடுகள் உதவும் எனக்கூறி வாக்கு கேட்டனர்.

1987 ல் இந்தியாவோடு எழுதிய உடன்பாட்டில் மரபுவழித் தாயகமான வடகிழக்கு இணைப்பு ஓர் அங்கம். அதிகாரப்பகிர்வு மற்றோர் அங்கம். முதலாவது அடியோடு நீக்கப்பட்டது. இரண்டாவதையாவது (13ஆவது அரசியலமைப்பு திருத்தம்) முழுமையாக நடைமுறையாக்குங்கள் என இந்தியா இன்றும் இலங்கையை இரந்து கொண்டிருக்கின்றது.

2002 ல் 20 நாடுகளின் முன்னிலையில் ஒஸ்லோவில் ஒப்புக்கொண்டதை இப்பொழுது ஒப்புக்கொள்ள மறுக்கின்றார் ரணில்.

1919ல் அருணாசலம் சொன்னதை, 1925ல் மகாதேவா சொன்னதை, 1948ல் சுந்தரலிங்கம் சொன்னதை, 1958ல் செல்வநாயகம் சொன்னதை, 1967ல் மீண்டும் செல்வநாயகம் சொன்னதை, 1990ல் வரதராசப்பொருமாள் சொன்னதை, 2008ல் பிரபாகரன் சொன்னதை, சிங்களவரை நம்பமுடியாது என 2016ல் சம்பந்தன் சொல்வதை தவிர வேறு வழி? என்ன இருக்கிறது.?

இலங்கையில் தமிழர் ஆதிக்குடிகள்., தீவின் 66,000 சதுர கி.மீ. பரப்பளவில் 25,000 சதுர கி.மீ பரப்பளவு தமிழர்களின் மரபுவழித் தாயகம். 2015 தேர்தல் மூலமாக சம்பந்தன் தலைமையில், அங்கே தமிழர்கள் ஆட்சி அமைக்க தமிழர்கள் அறவழியில் முயன்றனர் என வரலாறு எழுதும்.

ஏனெனில், இலங்கை முழுவதும் சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களே� என்ற கண்ணோட்டம் சிங்களவரின் மனங்களில் ஆழமாகப் புதைந்துள்ளது.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
(இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்)

-http://www.tamilwin.com

TAGS: