ராஜபக்சவை வீழ்த்திய சைலன்ட் கில்லர்!

mahinda_cryingநம்பிக்கை ஒளி தெரிகிறது ஈழத்தமிழர்களிடம். 196 இடங்களுக்கான இலங்கை பிரதமர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 93 இடங்களைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே, அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ச, பிரதமராவது ஆகிவிட முடியாதா என பதவி மோகத்துடன் களமிறங்க, அவரது இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணிக்கு 83 இடங்கள்தான் கிடைத்தன.

தமிழர்கள், சிங்களர்கள் என இரு தரப்பு ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆகியுள்ளார்.

ஈழத்தமிழரான ‘பத்திரிகையாளர் சோமிதரன் ‘தேர்தல் நேரத்தில் அங்கு பயணித்தவர். அவரை’ சந்தித்த போது, தமிழீழ மக்களின் எதிர்பார்ப்புகளுடன் கூடிய தனது கள அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார்.

தமிழர்கள் வசிக்கும் வட-கிழக்கு பகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரபாகரன் பெயரை சொல்லியே வாக்கு கேட்டனர்.

ரணில் கூட்டணி கட்சியை விஜயகலா மகேஸ்வரன் ‘என்னை வெற்றி பெற வைத்தால் இங்கே பிரபாகரனுக்கு சிலை வைப்பேன்’ என்று வாக்குறுதி தந்து வெற்றி பெற்றார்.

மகிந்தா கட்சியில் யாழ்ப்பாணத்தில் போட்டி யிட்ட அங்கயன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நாங்கள் தேசிய தலைவர் வழியில்தான் செயல்படுகிறோம்’ என வாக்கு கேட்டார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் வடக்கு-கிழக்கு பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 14 பேர் வெற்றி பெற்றனர்.

ஒரு நாடு இரு தேசம்’’என்ற முழக்கத்தோடு வந்த தமிழ்த் தேசிய முன்னணி டெபாசிட் இழந்தது.

2004 ல் பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரித்ததால் அதற்கு மக்களின் ஆதரவு தொடர்கிறது.

டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கு ஓர் இடம் கிடைத்துள்ளது.

ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு 4. மலையக தமிழர்கள் பகுதிகளில் ரணில் கட்சி கூட்டணி சார்பாக மூவரும், ராஜபக்ச கூட்டணி சார்பாக ஆறுமுகம் தொண்டைமானின் கட்சியில் இருவரும் வென்றுள்ளனர்.

மலையக தமிழர்கள் ஆட்சியில் பங்கு பெற வாய்ப்பு அதிகம். தனித்து நின்ற இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இடத்தில் மட்டுமே வென்று இருந்தாலும் மொத்தமாக அவர்கள் வாக்கு ரணில் கட்சிக்கே சென்றுள்ளது.

இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவு மக்களுமே ராஜபக்சவை புறக்கணித்தனர்.

அதேசமயம் சிங்கள மக்களில் பலருக்கு, போரை வென்ற ஹீரோவாகத்தான் ராஜபக்ச காட்சி தருகிறார். அதனால் தான் அவர் கட்சியும் கணிசமாக வெற்றி பெற்றுள்ளது. என்றவரிடம் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?’ என்றோம்.

ராஜபக்சவுக்கு ஆதரவாளர்கள் இருந்தாலும், அதிபர் சிறிசேனாதான் அவருடைய கட்சியின் தலைவர். அவரை மீறி எதுவும் செய்ய இயலாது.

இலங்கைக்குள் எந்த நாட்டு விசாரணையும் அனுமதிக்க மாட்டோம்’ என அதிபர் கூறியிருந்தாலும் ஊழல் மற்றும் படுகொலை வழக்குகளில் சிறைப்படுத்தப்படலாம்.

சரத் பொன்சேகாவை கைது செய்து குடியுரிமை பறித்த ராஜபக்சவுக்கு அதேநிலை ஏற்பட வாய்ப்பதிகம். சட்ட பாதுகாப்பும் பறி போகும்.

இதை எல்லாம் அறிந்துதான் ‘எம்.பி.யாக பாராளுமன்றம் வருவேன்’ என கூறியுள்ளார் ராஜபக்ச.

அவர் மூத்த மகன், அண்ணன் ஆகியோர் எம்.பியாக வென்றுள்ளனர். சாணக்கியத்தனம் மிகுந்த சைலன்ட் கில்லரான ரணில், ராஜபக்சவை ஓரம் கட்டும் வேலைகளை நிச்சயம் செய்வார் என்றவர் அடுத்து ‘தமிழர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து பகிரத் தொடங்கினார்.

போரினால் சுமார் 95,000 விதவைகள் உருவாகியுள்ளனர். 11,500 போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று திரும்பவும் மக்களுடன் இணைந்துள்ளனர்.

இவர்களை எல்லாம் சந்தித்து பேசிய போது போராளிகள் உடல், மனரீதியா கடுமையா பாதிக்கப்பட்டு இருக்காங்க. தெருவுக்கு தெரு மதுக்கடைகள் தமிழர்கள் பகுதியில் நிரம்பி இளைய சமூகத்தை போதை, கேளிக்கைக்கு தள்ளி வருகிறது.

இதை ரணிலும் விரும்ப மாட்டார். சுமுகமான சூழல் இருப்பதாக காட்டினால்தான் வெளிநாட்டு முதலீடுகள் வரும். எனவே ஒரு குறைந்தபட்ச தீர்வு தர தயாராக இருப்பதாகத்தான் இலங்கை சூழல் தெரிவிக்கிறது.

ராஜபக்சே சீன ஆதரவாளர். ரணில் அமெரிக்க ஆதரவாளர். சிறிசேனா இந்திய ஆதரவாளர். இந்த இந்திய-அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டால் விரைவில் தமிழர் நலனுக்கானப் பேச்சுவார்த்தை தொடங்கும்.

இலங்கை விடயத்தில் இந்தியாவின் கையில் உள்ள ஒரே ஆயுதம் தமிழர் விவகாரம். அதைக் கொண்டு இலங்கையைத் தன் கண்காணிப்பில் வைத்திருக்க முயற்சிக்கும்.

போர்க்குற்ற விசாரணை, மறுவாழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்தியாவில் உள்ள அமைப்புகள் கொடுக்கும் நெருக்கடியைப் பொறுத்து இலங்கை அரசு குறைந்த பட்ச தீர்வுக்கு வரும் என்றார் சோமிதரன் தெளிவாக.

ரணிலுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசிய அரசு அமைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதில் தமிழர் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நிலை முக்கியமானது. தேசிய அரசு அமையும் போது, ராஜபக்ச கட்சி எம்.பி.க்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் அமையும்.

-http://www.tamilwin.com

TAGS: