தமிழ் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத்தான் அவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று கூறுவது தவறு. அமைச்சுப் பதவிகளைப் பெறாமலே நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் உள்ளே தரப்படுகிறது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவை வழங்கி அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமா?
பதில்: நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்திற்கு தனது ஆதரவினை வழங்கும். தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. ஆனால், அமைச்சுப் பதவிகளை ஏற்காது.
கேள்வி: வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் தற்போதும் அவதிப்படுகின்றனர். இதற்காகவாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளைப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளனவே?
பதில்: தற்போதும் தமிழ் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத்தான் அவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று கூறுவது தவறு. அமைச்சுப் பதவிகளைப் பெறாமலே நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெண்களை உள்வாங்கவேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாதது. குறிப்பாக, இவருக்குத்தான் வழங்கவேண்டும் என்று நான் பரிந்துரை செய்யவில்லை. யாராக இருந்தாலும் திறைமையான பெண்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப்பை ஓரங்கட்டுவதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?
பதில்: அவ்வாறு எந்தவொரு சதித்திட்டமும் இடம்பெறுவதாக எனக்குத் தெரியவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப். மட்டுமன்றி கூட்டமைப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்படுவதையே நாங்கள் விரும்புகின்றோம். திட்டமிட்டே இவ்வாறான தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. கூட்டமைப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
கேள்வி: பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தோல்வியைத் தழுவியுள்ளனர். இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?
பதில்: அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவியபோதும் அவர்கள் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்பது மக்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும்.
கேள்வி: ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டமை கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?
பதில்: அவ்வாறு குறிப்பிட முடியாது. ஆனால், அவர்கள் போட்டியிடாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஓர் ஆசனம் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்பது உண்மையான கருத்தாகும். ஆறு வாக்குகள் அவர்களுக்குக் குறைவாகக் கிடைத்திருந்தால் எங்களுக்கு ஆறு ஆசனங்கள் கிடைத்திருக்கும். மக்கள் இவர்களை தற்போது முழுமையாக நிராகரித்துள்ளார்கள். அவ்வாறிருக்கும்போது, ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்காது என்று நான் நினைக்கின்றேன்.
கேள்வி: வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையப் போகின்றன?
பதில்: மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையினை நிறைவேற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம். தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளையும், அரசியல் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். அதேபோல் சர்வதேச சமூகத்தின் ஆதரவும் எமக்கு பக்கபலமாக இருந்தது. தொடர்ந்தும் அவர்களது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி: யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் இன்றும், வீடு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகின்றார்கள். இது குறித்து எதிர்காலத்திலாவது கூட்டமைப்பு கவனமெடுக்குமா?
பதில்: யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம். அவ்வாறு அரசாங்கம் எமக்கு ஆதரவை வழங்காவிட்டால் அழுத்தங்களையும் பிரயோகிப்போம்.
-http://tamil24news.com