பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ‘த ஹிந்து” நாளிதழுக்கு முன்னாள் பிரதம செய்தியாளர் எம். ராமுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ஓகஸ்ட் 17 பொதுத் தேர்தலின் பின்னர், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும், உறுதிப்பாடும் நம்பிக்கையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்த விடயத்தில் பிரதான முக்கிய பங்காளர்களாக இருந்து தீர்வுக்கான பரிந்துரைகளை மேற்கொள்ள முடியும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த விடயத்தில் மிக முக்கிய பங்காற்றலை மேற்கொள்கிறார் என்பதனை இதன்போது ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தினார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி குறுகிய வித்தியாச அடிப்படையில், வெற்றி பெற்று காத்திரமான ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்க நான்காவது தடவையாகவும் பிரதம மந்திரியாகவும் பதவி ஏற்றிருக்கிறார்.
அத்துடன், தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமைக்காக ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிலையில், அலரி மாளிகையில் வைத்து, ‘த ஹிந்து” செய்தியாளரை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் அமைப்பு தமிழர் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் வாழ்க்கைத் தர முன்னேற்றம், மனித உரிமை மேம்பாடு குறித்து செவ்வியளித்தார்.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோல்வி கண்டதன் பின்னர், இனப்பிரச்சினை தீர்வுக்கான நிர்வாக தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன. அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக சில மாகாண சபைகளிடம் இருந்து அதிகாரங்களை இணைந்த நிலையில் பகிர்ந்து கொள்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, சில அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியும். எனினும் பிரதான காரணங்களில் மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும்.
13வது அரசியல் அமைப்பு அதிகார பகிர்வு குறித்து கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பொறுத்த வரையில், புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு ஒரு வருட காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளது.
எனினும், ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரையில் இதனை ஆறு மாத காலத்தினுள் நிறைவேற்ற முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கலப்பு விகிதாசார முறையை ஏற்றுக்கொண்டுள்ளன.
எனினும், அதில் இன்னமும் உடன்பாடுகள் முற்றாக எட்டப்படவில்லை.
சில தரப்பினர் ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என கோருகின்றனர். எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றது.
என்வே, அரசியல் அமைப்பை மீளமைத்து, நாடாளுமன்றத்தை வலுப்படுத்துவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி சிந்தித்து வருவதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கை பொறுத்தவரையில், காணிகள் மீள கையளிக்கப்பட்டவுடன், பொதுமக்கள் பலர் திருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில் மக்களை மீள் குடியமர்த்துவது முக்கியமான விடயமாக அமைந்திருக்கிறது. இந்த விடயத்தில், தேசிய பாதுகாப்பு என்ற விடயமும் உள்ளடங்கியுள்ளது.
இதன்போது, இராணுவத்தினருடன் பேசி காணிகளை விடுவிக்க முடிந்தது.
காவல்துறை அதிகாரங்களைப் பொறுத்த வரையில், அங்கு மீண்டும் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
காவல்துறையானது, அரசியல் மயப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, காவல்துறை ஆணைக்குழுவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மாகாண சபைகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
13வது அரசியல் அமைப்பிற்குள் இருந்து கொண்டு அதன் அதிகாரங்களை முழுமையாக பகிர்வது குறித்து பணியாற்றவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை சர்வதேசத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அந்த விசாரணைகள் உள்நாட்டு விசாரணைகளாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ரோம் உடன்படிக்கையில், இலங்கை கைச்சாத்திடாத படியால் உள்ளக விசாரணைக்கு தமது அரசாங்கம் இணக்கம் வெளியிட்டது.
உள்ளக நீதிகளில் நம்பிக்கை இல்லாதவர்களே சர்வதேச விசாரணைகளை கோரினர்.
எனினும், உள்ளக பொறிமுறை மூலம் அனைத்து இனங்களும் அத்துடன் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ள கூடிய முறையில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடப்பு நிலவரத்தில் முக்கிய பங்கை ஆற்றுகிறார்.
எனினும், ஐக்கிய தேசிய கட்சி தமது அடையாளத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள முடியும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனை விடுத்து, நாடாளுமன்றத்தில் தமக்கு தேவையான சுமார் 15 பேரை, தமது அரசாங்கத்தினுள் சேர்த்திருந்தால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
இதனால் எந்தப் பணிகளையும் நகர்த்திச் செல்ல முடியாது, இந்தியாவை பொறுத்தவரையில், லோக் சபாவில் பாரதீய ஜனதா கட்சி தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது.
எனினும், ராஜ்ய சபாவில் சிறுபான்மை கட்சியாக உள்ளது. எனவே அங்கு அனைத்தும் பிரிந்து போய் உள்ளன. எதனையும் நகர்த்த முடியாமல் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே தனிப்பட்ட அரசியல் நலன்களை ஒதுக்கிவிட்டு தேசிய ஒற்றுமை, கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, தேசிய கடன்படுகை உட்பட்ட விடயங்கள், உள்நாட்டு ஜனநாயகத்தை மேம்படுத்தல் போன்றவற்றில் இணைந்து செயல்படுத்துவதற்காகவே, தேசிய அரசாங்க கொள்கை முன்னெடுக்கப்படுவதாக ‘த ஹிந்து” விற்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com