இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை நாட்டின் நீதிதுறையின் மீது நம்பிக்கை குறைவடைந்தமையினாலேயே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2009ம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தால் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபைக்கு உரிமை இல்லை என்பதே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொறிமுறை மூலமே அதனை செய்ய முடியும் என இதன்போது குறிப்பிட்டுள்ள ரணில், உரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமையால் இந்த நாட்டிலுள்ள எவரையும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முன் நிறுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.
-http://www.pathivu.com