இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்பு காட்டிவரும் போலிமுகம் மீண்டுமொரு முறை அம்பலமாகியுள்ளது. சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழான பேச்சு தொடர்பில் கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் இன்று கொண்டு வந்த பிரேரணை ஆமோதிக்க எவருமின்றி கைவிடப்பட்டுள்ளது.
பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அங்கு கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்கள் 19பேரும் எதிர்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் இருந்திருந்தனர்.
எனினும் முதலமைச்சர் கொழும்பு சென்றிருந்தமையால் விவாதத்தின் போது பிரசன்னமாகியிருக்கவில்லை. அதே போன்று மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் போன்றவர்களும் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.
இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை காணும் வகையில் இலங்கை அரசிற்கும் தமிழ் தலைவர்களிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க வருமாறு இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய யூனியன், கனடா ஆகியவற்றிற்கு அழைப்பு விடுப்பதாக சிவாஜிலிங்கத்தின் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்ட பிரேரணை இன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனையும் தீர்மானத்தின் தேவை பற்றியும் சிவாஜிலிங்கம் எடுத்து விளக்கியிருந்தார்.
எனினும் தீர்மானத்தை முடக்கிவிடுவதில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடும் முனைப்பு காட்டியதுடன் அதனை சிவாஜிலிங்கம் தனது விளம்பரத்திற்கு கொண்டுவருவதாக விபரித்தார்.
இதனால் காரசாரமான விவாதம் நடைபெற்றிருந்தது. எனினும் தனது பிரேரணை ஆமோதிக்கப்படவில்லையன்றி தோற்கடிக்கப்படவில்லையென பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம் மீண்டும் பிரேரணையினை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.
-http://www.pathivu.com