வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை முகாமில் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு,
கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வெளியிடங்களில் உள்ள கல்லறைகளில் மேல் பாகம் திறக்கப்பட்டு, அந்த கல்லறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.
வெள்ளை வான் கலாசாரத்தின் பிதா மகன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த ராஜபக்ச சார்பு அமைச்சரான மேர்வின் சில்வா கூறியிருந்தார்.
பல்வேறு கொலைக் குழுக்களை பயன்படுத்தி வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்ட செல்வந்த கோடிஸ்வரர்கள், காணி, சொத்துரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், ராஜபக்ச அரசுக்கு எதிரானவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள், கண்கள் கட்டப்பட்டு முதலில் கிரித்தலே இராணுவ முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரம், கொலைக் குழுவினர் உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் கப்பம் கோருவது வாடிக்கையாக இருந்து வந்தது.
கொலைக்குழுக்களுக்கு பிரத்தியேகமான சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்துடன் அந்த சிம் அட்டைகள் கடத்தல்களுக்கு தனித்தனியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
கேட்கும் கப்பப் பணம் கிடைத்தால் மாத்திரம் கடத்தப்பட்ட நபரின் கண்களை கட்டி பாழான இடங்களில் கொண்டு சென்று இறக்கி விட்டுள்ளனர். கப்பப் பணத்தை செலுத்த முடியாதவர்களிடம் வெற்று கடதாசியில் கையெழுத்துக்களை பெற்று அவர்களின் சொத்துக்களை பெற்றுக்கொண்ட பின் விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கப்பம் செலுத்தவும் சொத்துக்களை மாற்றி எழுதி கொடுக்க முடியாதவர்கள், கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடல்கள் மயானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள கல்லறைகளின் மேற்பகுதியை திறந்து அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோத்தபாயவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று காலி நீதிமன்ற நீதவான் நீக்கியுள்ளார்.
காலி நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு தடை ஏற்பட கூடாதென்பதனால் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com