அமெரிக்கா கூறினால், அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை! ‘சர்வதேச விசாரணையே வேண்டும்’

sri_nisaஇலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கும், எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்புக்கும் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாக மாத்திரமே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் ..

.. என்பதோடு சர்வதேச விசாரணையே கடந்த 60வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கான வழியாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சமகால அரசியல் நிலமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

உள்ளக விசாரணை பொறிமுறையை எதிர்ப்போம். கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் சிங்கள தலமைகளிடமிருந்து கற்றுக் கொண்ட விடயங்களில் ஒன்று உள்ளக பொறிமுறை ஒருபோதும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட அநீதிகளுக் கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது என்பதாகும்.

தமிழர் தாயகத்தில் கடந்த 60 வருடங்கள் நடைபெற்றது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு என்பதை தமிழர்களின் குருதி தோய்ந்த கடந்த 60 வருடகால உரிமை தேடல் பயணத்தில் பதிந்திருக்கும் இருண்ட கால் தடங்கள் காட்டி நிற்கின்றன.

நாம் பழிவாங்கும் எண்ணம் கொண்ட மூர்க்கர்கள் இல்லை. ஆனால் எங்கள் மீது நடத்தப்பட்ட அநீதிகளுக்கு, அழிப்புக்கு நீதி நிச்சயம் வேண்டும். அந்த நீதியை சர்வதேச சமூகத்தினால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என்பது நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு பாடம்.

அது மட்டுமல்லாமல் அவ்வாறான நீதி விசாரணையே ஏன் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்? அவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? இனிமேல் இவ்வாறான அழிப்பு இடம்பெறாமல் பாதுகாப்பது எப்படி? என்பதோடு இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் எங்களால் எட்ட முடியும்.

இந்த விடயத்தையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் கடந்தகாலத்திலும் அண்மையில் தேர்தல் நடைபெற்றபோதும் கூறியிருந்தோம். எனவே மக்களுடைய விருப்பமும் அதுவானதாலேயே எம்மை அதிகரித்த பலத்துடன் தெரிவு செய்திருக்கின்றார்கள்.

எனவே மக்களுடைய விருப்புக்களுக்கு மாறாக பயணிக்க முடியாது.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு தொடர்பாக சில மனவருத்தங்கள் இருக்கின்றன. ஆனால் நாடாளுமன்ற குழு கூடும்போது அது குறித்து அவர்கள் எமக்கு சொல்வார்கள். நான் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.

அவரும் அந்த விடயம் தொடர்பாக பேசுவதாக சொன்னார். மேலும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விபரம் முன்னதாகவே அனுப்பப்பட்ட விடயம். எனவே முன்னர் அனுப்பியதை அவ்வாறே தெரிவு செய்திருக்கலாம்.

குறிப்பாக வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் பெயர் அதில் முதலில் இருந்தது. எனவே அவருடைய கல்வி, வயது, கட்சிக்கும் இனத்திற்கும் ஆற்றிய பங்களிப்பு  ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு அந்த ஆசனத்தை வழங்கயிருக்கலாம்.

ஆனால் வழங்கவில்லை என்ற மனவேதனை உள்ளது. மேலும் தேசியப் பட்டியல் தெரிவு தொடர்பில் எங்கள் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கவில்லை. என்பது உன்மைதான் ஆனால் பேசலாம். அது குறித்து சொல்லப்படும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு பதிவு புதிய சர்ச்சை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிவு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக நானும் ஊடகங்களில் பார்த்திருக்கிறேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அதன் அங்கத்துவக் கட்சிகள் 3 இணைந்து பதிவு செய்யப்போவதாக உள்ளது. ஆனாலும் அந்த செய்தியை யார் உத்தியோகபூர்வமாக வழங்கியவர் அல்லது எப்போது வழங்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் அதில் இல்லை. எனவே அது தொடர்பாக கருத்து கூற முடியாது.

மக்களுடைய ஆணை தொடர்பாக

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகபடியான விருப்பு வாக்குகளை மக்கள் எமக்கு வழங்கியிருக்கின்றார்கள். அந்த வகையில் மக்களுடைய அந்த ஆணையை நான் இமாலய சக்தியாக நினைக்கிறேன்.

கடந்த 5 வருடங்கள் மக்களுக்காக நேர்மையாக பணியாற்றியிருக்கிறேன். அதற்காக என்னுடைய ஆதரவாளர்கள் பழிவாங்கப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 6 தடவைகளுக் கும் மேல் நான் 4ம் மாடி விசாரணைக்குச் சென்றுவந்தேன்.

இவ்வாறு பல இன்னல்களை சந்தித்திருக்கிறேன். இத்தனைக்கும் அப்பால் மக்கள் எனக்கு ஒரு சக்தியை கொடுத்துள்ளார்கள். அந்தவகையில் மக்களுக்கு துரோகம் இழைக்காமல், வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு நிச்சயமாக உழைப்பேன்.

மேலும் மீள் கட்டுமானம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களிலும், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விடயம் உள்ளிட்டவற்றுக்காகவும், தொடர்ந்தும் போராடுவேன்.

ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் அறிக்கை உள்ளக விசாரணையை வலியுறுத்தினால்,

உன்மையில் ஆணையகம் தமது உத்தியோகபூர்வ அறிக்கையினை வெளியிடவில்லை. இந்நிலையில் ஊகங்களுக்காக பேசிக்கொண்டிருக்க முடியாது. எனவே உன்மையில் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியானதும் அது குறித்து பேசலாம் என்றார்.

‘சர்வதேச விசாரணையே வேண்டும்’

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கூறினால், அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சர்வதேச விசாரணையையே தொடர்ந்து கோருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்குவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின்  நலன் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து சிறிதரனிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று நாங்கள் செயற்படுவோம்.

அமெரிக்கா சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குற்றம் புரிந்தவர்கள் தங்களைத் தாங்களே விசாரிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கட்டாயம் தேவையானதொன்று. அதன்மூலமே தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும். மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்’ என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: