அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க அரசதுறை அதிகாரிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த 30 பக்க ரகசிய ஆவணமொன்றை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.
மனிதஉரிமை மீறல்கள், மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விவரங்கள் அடங்கிய இந்த ஆவணத்தை கருத்தில் கொண்டு இலங்கை அரசின் மீது அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதைக் கைவிட்டுள்ளதாகக் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.