இலங்கையின் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்று பத்து நாட்கள் கழிந்துவிட்ட நிலையிலும், அரசமைக்கப்போகும் கட்சியின் அல்லது தேசிய அரசின் மந்திரிசபை இன்னமும் பதவியேற்காத குழப்ப நிலை தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
“மழை விட்டும் தூவாணம் விடாததுபோல்” கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் இருந்த நிலைபோன்ற ஒரு அரசியல் நிலையே இப்போதும் காணப்படுகிறது.
ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஜனவரியில் ஜனாதிபதியாக மைத்திரி தெரிவானதும் பாராளுமன்றில் போதிய அங்கத்துவம் இல்லாமலே ரணில் பிரதமராக்கப்பட்டார்.
ஆனால், இம்முறை தேர்தலில் அரசமைக்க 113 என்ற பெரும்பான்மை அங்கத்துவத்தை பெறமுடியாதபோதும், எதிர்த்தரப்பை விட கூடுதலான அங்கத்துவத்தை ஐ.தே. முன்னணி பெற்றது என்ற வகையில் ரணில் பிரதமராக்கப்பட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் மூலம், தனது சிறுபான்மை அரசுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு ரணில் முயல்வதாகத் தெரிகிறது.
அதுபோல், தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு பதவிகளை வளங்குவதன்மூலம் அவர்களையும் அரசியல் பலமுள்ளவர்களாக தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை ஜனாதிபதி மைத்திரியிடமும் உள்ளது.
தனக்கிருக்கும் வாய்ப்புகள் மூலம் தனது தலைமையிலான அரசையும், தனது தலைமையிலான கட்சியையும் ஒரே திசையில் பயணிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், மகிந்தவின் தூண்டுதலால், அவருக்கு துணை நிற்கும் ஆதரவாளர்கள் மூலம் இப்போதும் அரசுக்கு நெருக்கடிகள் கொடுக்கப் படுவதாகவே தெரிகிறது.
இரண்டாவது முறையும் தோல்வியை தழுவியுள்ள மகிந்த, இம்முறை தேர்தலின் பின் உருவாகியுள்ள புதிய அரசினால் தனக்கு எதிராக வேகம்பெறப்போகும் குற்றவிசாரணைகளிலிருந்து தப்பிவிடவேண்டும் என்ற நோக்குடனேயே தனக்கு ஆதரவான அங்கத்துவர் மூலம் அரசுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி இருந்தபோதும், மகிந்தவுக்கு சார்பான அங்கத்தவர்களை இப்போதுவரை ஜனாதிபதியால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதாலேயே தேசிய அரசு அமைப்பதிலும் மந்திரிசபை அமைப்பதிலும் காலதாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.
தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு அங்கத்தவர்களை நியமிப்பதிலேயே கட்சிக்குள் இழுபறி நிலை ஆரம்பமானது. ஆனால் கட்சித் தலைவர் என்ற ரீதியல் மைத்திரியால் தன் எண்ணப்படி பட்டியலை பூர்த்தி செய்ய முடிந்தது.
ஆனால் தேசிய அரசு, மற்றும் அதற்கான அமைச்சுப் பதவி என்பவற்றில் ஏற்பட்ட நெருக்கடிகளை அவரால் இலகுவில் தீர்த்துவைக்க முடியாமல் போயுள்ளது. இதுவே கடந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த நிலை.
தேசிய அரசொன்றை அமைப்பதில் இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் மட்டுமே பேச்சுவார்த்தைகளும், பேரம் பேசல்களும் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், தேசிய அரசென்றால் சிறு கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் என்பன உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையே இல்லாததுபோல் அரச தரப்பும், எதிர் தரப்பும் தமக்கிடையே மட்டும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றன.
16 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது நிலையிலுள்ள தமிழ் மக்களின் தலைமையாக கருதப்படும் தமிழ் கூட்டமைப்பைகூட கண்டுகொள்ளாதது போலவே அனைத்து விடயங்களும் இடம்பெற்று வருகின்றன.
“அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசுடன் இணைந்து செயல்பட போவதில்லை, ஆனால் வெளியிலிருந்து ஆதரவளிப்போம்” என்று தமிழ் கூட்டமைப்பு தெரிவித்திருந்ததை சாட்டாக வைத்து அவர்களை தற்போதைக்கு விலத்தி வைத்திருப்பதே நல்லது என்ற முடிவுக்கு ரணில் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமிழர் தரப்பிடம் போவதை தடுப்பதும் அவரது பின்நகர்வுக்கு காரணமாக இருக்கலாம்.
பாரிய இடைவெளி இல்லாத ரணிலின் வெற்றி, மகிந்தவை குறைத்து மதிப்பிட முடியாது என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பக்கமும் இனவாதத்தின் வாக்குகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
இனவாதக் கட்சிகளும் அமைப்புகளும் பிரிந்து நின்று இரண்டு தரப்புக்கும் ஆதரவளித்தன என்பது இரண்டு கட்சியிலும் இணைந்து போட்டியிட்ட இனவாதக் கட்சிகளின் எண்ணிக்கையை பார்த்தாலே புரிந்துவிடும்.
அதனால், இப்போதே தமிழர் தரப்பை இணைத்துக் கொண்டால், அரசமைப்பதற்கான ஆரம்பமே சிங்கள இனவாதிகளால் ஆட்டம் காணச் செய்யப்படும் நிலை உருவாகும் என்று கருதியே ரணில் சிறுபான்மையினரை தவிர்த்து, சிங்கள மக்களை மட்டுமே மையப்படுத்தி தனது அரசியல் சதுரங்கத்தை அரங்கேற்ற முயல்கிறார்.
தமிழரின் பிரச்சினை தொடர்பாக உறுதியான எந்தக் கருத்தையும் இப்போது தெரிவிப்பதற்கு ரணில் தயாராக இல்லை என்பது தெரிகிறது. போர்க்குற்றம் சம்பந்தமாக உள்ளக விசாரணை என்ற போர்வைக்குள் எல்லாவற்றையும் மூடிமறைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதற்கு அமெரிக்காவின் ஆசீர்வாதமும் கிடைத்துள்ளது என்பதை அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான இராஜாங்க உதவி செயலாளர் நிஷா பிஸ்வாலின் இலங்கை விஜயம் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல் என்பன நெருப்பாக இல்லாமல் புகையாக மட்டுமே இருந்துவிடும் நிலை தோன்றியுள்ளதாகத் தெரிகிறது.
வாய்ப்புகள் யாவும் சிங்கள அரசுக்கு சாதகமாகவே உள்ளது. தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்கள் யாவும் எங்கோ கேட்ட குரலாக மட்டுமே இருந்துவிடுமோ? என்ற ஏக்கம்தான் ஏற்படுகிறது.
அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் தமிழர்களின் காலை வாரிவிடப்போகிறது என்பது மட்டும் புரிகிறது. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் தாளம்போடும் நிலையில் உள்ள தமிழர் கூட்டமைப்பு அமெரிக்காவின் முடிவையிட்டு என்ன செய்யப்போகிறது என்பதுதான் தமிழர்களின் கேள்வியாக உள்ளது.
இலங்கையின் உள்ளக விசாரணைக்கு இணங்கவேண்டிய நிலைக்கு தமிழர் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது என்றே கருதவேண்டியுள்ளது.
சிங்கள மக்களைப் பொறுத்தவரை, குறிப்பிடத் தக்களவானவர்கள் ஓரளவுக்கேனும் நாட்டின் முன்னேற்றத்தையும் ஒருமைப்பாட்டையும் சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் சில காட்டி நிற்கின்றன.
போர் வெற்றியை முன்னிறுத்தி பத்து வருடங்கள் இனவாத அரசியலை மேற்கொண்ட மகிந்தாவை அரசகட்டில் ஏறவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
போர் வெற்றியின் நாயகன் என்று தன்னை சொல்லிக் கொண்ட சரத்பொன்சோகா, இனவாதப் பிக்கு ஞானசார தேரர், மற்றும் தேர்தலில் போட்டியிட்ட நூற்று ஐம்பது வரையான பிக்குகளை சிங்கள மக்கள் தோல்வியடைய செய்துள்ளார்கள்.
சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்கவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே இதை கருதலாம். இனவாதிகளும், சிங்கள அரசியல்வாதிகளும் இந்த மாற்றத்தை தொடர்ந்து வரும் தேர்தல்களில் அனுமதிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.
காரணம் இனவாத அரசியல்தான் சிங்கள அரசியல்வாதிகளின் தொலைதூர அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தொடர்ந்தும் இருந்து வருகிறது.
ஆனாலும் சிங்கள மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், சிங்கள இனவாத அரசியலவாதிகளையும் கடந்து படிப்படியாக என்றாலும் ஏனைய சிங்கள மக்களிடமும் உருவாகும் பட்சத்திலேயே நாட்டில் சமத்துவமும், தமிழருக்கான நிரந்தரத் தீர்வும் கிட்டும் என்பது எமது கருத்தாகும்.
க.ரவீந்திரநாதன்
[email protected]
-http://www.tamilwin.com