சர்வதேச நாடுகளின் நலனுக்கான எமது மக்களை நாம் ஒருபோதும் அடகு வைக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 34வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற இன அழிப்புக்கு சர்வதேச விசாரணையே தேவை என வலியுறுத்தும் பிரேரணை தீரமானமாக மீண்டும் நிறைவேற்றக் கோரப்பட்டது.
இந்தப் பிரேரணையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே கொண்டு வந்திருந்தார். முதலமைச்சரின் இந்தப் பிரேரணையை முன்மொழிந்தபோது “இந்தப் பிரேரணை எதற்காக?, சர்வதேச ஒழுங்கை மீறி செயற்பட்டால் வெற்றி கிடைக்குமா? என எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கேள்வி எழுப்பினார்.
இவற்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர், “சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல் அவர்களின் நன்மைகளை கருத்தில் இருக்கும். அதற்காக எமது மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது. நாம் அண்மையில் அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலரை சந்தித்தோம். இதன்போது அவர் உள்ளக விசாரணையை கோருமாறே கோடி காட்டிச் சென்றார். ஆனால் எங்கள் மக்கள் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். இதுவே எங்கள் நிலைப்பாடும்.
இந்நிலையிலேயே நாங்கள் இந்தப் பிரேரணையை முன்மொழிந்திருக்கிறோம். எது சரி, எது பிழை என்பதை ஆராய்ந்து கேட்க வேண்டும். அதனை பிழையென எவரும் கூற முடியாது.” என்றார்.
இதைத் தொடர்ந்து இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல், போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை வடக்கு மாகாண சபை தீர்மானமாக நிறைவேற்றியது.
-http://www.puthinamnews.com