இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

kavanayeerppu_001இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதால் தாம் வாழ்வாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்.குடாநாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் யாழ்.மாவட்டக் கடற்றொழில் நீரீயல் வளத்துறை திணைக்களத்தில் நடைபெற்ற மீனவர்கள் கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள்,

இந்திய இழுவை படகுகள் மற்றும், பாய் வள்ளங்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் தொடர்ச்சியாக நுழைந்து வரும் நிலையில் தாம் வாழ் வாதாரீதியாக பாதிக்கப்படுவதாகவும்,தினசரி பெருமளவு பொருள் நஷ்டத்தை எதிர்கொண்ட வண்ணம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன்,

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டல் விடயத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையிலும் அரசியல் வாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் யாழ்.மாவட்டத்தில் முழுமையாக கடற்றொழிலை முடக்கி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல கடற்றொழிலாளர் சங்கங்களையும் உள்ளடக்கும் வகையில் கூட்டத்தை நடத்தவேண்டும் எனவும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு சகல கடற்றொழிலாளர்களினதும் ஆதரவும் ஒத்துழைப்பும் பெறப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இன்றைய கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படாத போதும் யாழ்.குடாநாட்டை முடக்கும் வகையிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டலுக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம்,  வடமாகாண கடற்றொழிலாளர், இணையம் கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: