சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் – நரேந்திர மோடி

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று புதுடெல்லியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் நடக்கும், உலக இந்து- பௌத்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள, சந்திரிகா குமாரதுங்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில், அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வகித்து வரும் தலைமைத்துவப் பங்கு மற்றும் இந்திய- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதில், சந்திரிகா குமாரதுங்க ஆற்றிவரும் பங்களிப்பை இந்தியப் பிரதமர், வரவேற்றுள்ளார்.

ஒன்றபட்ட இலங்கை  என்ற கட்டமைப்புக்குள் எல்லா சமூகங்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், மெய்யான நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு, சந்திரிகா தொடர்ந்தும், முக்கிய பங்காற்றுவார் என்று நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுடனான உறவுகளுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளும், வரலாற்று, கலாசார, உறவு ரீதியாக ஆழமாக பிணைந்திருக்கின்றன என்றும், இந்த உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு, சிறிலங்காவின் அதிபர் மந்றும் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் இந்தியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எனினும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

-http://www.pathivu.com

TAGS: