இலங்கையில் இறுதிக்கால யுத்ததின்போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்தோர்க்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைப் பொறிமுறையொன்றினை ஏற்படுத்தக் கோரி மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு வடக்கு கிழக்கு எங்கும் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது.
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்துள்ள இந்த வெகுஜனப் போராட்டத்தில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுவருகின்றனர்.இந்தப் போராட்டம் குறித்துக் கருத்துவெளியிட்ட இந்தச் செயற்பாட்டுக் குழுவின் தலைவர் பேராசிரியர் வி.பி சிவநாதன், இது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு இறுதியில் இக்கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசு கடந்த காலங்களிலும் தற்போதும் தமிழர்கள் மீது மேற்கொள்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைகுழு சர்வதேச ரீதியிலான விசாரணை ஒன்றினை மேற்கொண்டிருந்தது. இவ்விசாரனை அறிக்கை இம்மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதவுரிமை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், ஆரம்பத்தில் இலங்கை மீது போர்க்குற்ற பிரேரணையை கொண்டுவந்து சர்வதேச விசாரணைக்கு வழிவகுத்த அமெரிக்கா இலங்கையில் புதிய ஆட்சி வந்தவுடன் இலங்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டிலிருந்து மாற்றமடைந்து உள்ளக பொறிமுறைக்கு ஆதரவளிக்கப்போவதாக அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் நீஷா பிஸ்வால் கூறிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கட்சி பேதமற்ற புதியதொரு அமைப்பை ஏற்படுத்தி, அதனூடாக போராட்டங்களை முன்னெடுத்து இலங்கை மீது சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையினை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் சிவநாதன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கல்விமான்ககள் தமிழ் அரசியல் தரப்பினர் ஒன்றினைந்து சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு ( Tamil Action Committee for International Accountability Mechanism [TACIAM] ) என்ற குழுவினை நேற்றைய தினம் அங்கூரார்ப்பணம் செய்திருந்தனர்.
இக்குழுவில் இணைவதற்கு எந்த மட்டுப்பாடுகள் இல்லை எனவும் தமிழ் இனம் மீது அக்கறை கொண்ட எவரும் இணைய முடியுமெனவும் குறிப்பிட்ட அவர், இலங்கை மீதான சர்வதேச பொறிமுறையை முன்னிலைப்படுத்தி தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.தமிழ் இனம் தனக்கான நீதியினை பெற்றுக்கொள்வதற்கு இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் இதனை ஒவ்வொரு தமிழனும் நன்றாக புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். இதனை தவறவிட்டால் மீண்டும் நாம் நீதியை பெற்றுக்கொள்ள மேலும் நீண்ட கால அவகாசம் ஏற்படலாம் அல்லது இல்லாமல் போகலாம் என மேற்படி குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
இன்று சனிக்கிழமை காலை திருநெல்வேலி பொதுசந்தை,பருத்தித்துறை பொதுசந்தை,பொன்னாலை வரதராஜாப்பெருமாள் கோவில்,நல்லூர் ஆலய சூழலினில் கையொப்பம் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாளை திருகோணமலை உள்ளிட்ட வடக்கு-கிழக்கிற்கு இது விஸ்தரிக்கப்படுகின்றது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) ஆகியவற்றின் தலைவர்களான செல்வம் அ.அடைக்கலநாதன், பா.உ., தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.உ., மற்றும் சுரேஷ் க.பிரேமச்சந்திரன், முன்னாள் பா.உ., ஆகியோரும் ந.சிவசக்தி ஆனந்தன், கவீந்திரன் கோடீஸ்வரன், சதாசிவம் விஜயலேந்திரன் மற்றும் மருத்துவக் கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
-http://www.pathivu.com