இலங்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கு த.தே.கூ முயலக் கூடாது: எம்.கே.சிவாஜிலிங்கம்

sivajilingamதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகள் இலங்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கு பயன்படக் கூடாது என்று அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இக் கேள்விகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நோக்கியும், அதில் அங்கத்துவம் வகிக்கும் ரெலோ கட்சியினை நோக்கியும் எழுந்துள்ளது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டமை சம்மந்தமாகவே இக் கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி என்பது அரசாங்கத்திற்கு சொந்தமான பதவிகள் இல்லை. அவை பொதுவான பதவிகளாகும். அதனை பெறுப்பேற்பதை வேறுவிதமாக பார்க்கத் தேவையில்லை.

ஆனாலும், எதிர்க்கட்சிப் பதவியினை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பினை பெற்றிருந்த அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்திருந்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை அவர் திறம்பட நடத்தியிருந்தார். அவர் போன்று இரா.சம்மந்தனும் திறம்பட செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க செயற்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் தற்போது நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்றும், ஜனநாயகம் நிலவுகின்றது என்றும் சர்வதேசத்தினை நம்புவைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் இப்பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிவிட்டு, அதனை சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தாம் தப்பித்துக் கொள்வதற்கான பயன்படுத்திக் கொள்ள முனைவார்கள்.

இதற்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. தமிழ் மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையினை தந்துள்ளனர். அவர்களுடைய ஆணையினை ஏற்று நாம் காலத்தினை வீணடிக்காமல் பிரச்சிணைக்கான தீர்வினை நோக்கி நகர வேண்டும்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: