இலங்கையில் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலானது நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒட்டுமொத்த இலங்கை அரசியலிலும் வடக்கு-கிழக்கு அரசியலிலும்கூட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பகுதியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கான தேசிய அரசாங்கமாக இது செயற்படுமென ஒப்பந்தமும் கைச்சாத்தாகியுள்ளது. வெற்றிபெற்று அரசமைக்கக்கூடிய சூழ்நிலையில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
பிரச்சாரத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டது.
இதன் மூலம் பிரதமராக வரவிரும்பிய மகிந்த ராஜபக்சவின் கனவிற்கு மண்போடப்பட்டது. அதுமட்டுமன்றி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகின்ற முயற்சியும் முறியடிக்கப்பட்டது. இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பகுதியினர் ஆளும் கட்சியுடனும் இன்னொரு பகுதியினர் எதிர்த்தரப்பிலும் பாராளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
இதுஒருபுறமிருக்க, வடக்கு-கிழக்கில் 16ஆசனங்களுடன் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் காரணமாக மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியாகும் வாய்ப்பு
ஏற்பட்டது. அதேசமயம், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தமக்கென ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சி நிரலானது இந்திய அமெரிக்க நலன்களையும் இலங்கையின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியானது சீனாவிற்கும் இலங்கைக்குமான இராஜரீக உறவுகளை இயன்றவரை குறைத்து, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகவும் கொண்டிருந்தது.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசு சீனாவின்மீது ஏற்படுத்திக்கொண்ட அபரிமிதமான உறவுகளும் அதன் காரணமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் நலன்களுக்கு மறைமுகமாக ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களும் அதற்கு வழங்கிய ஒத்தாசையும் உதவியும் இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தின் அவசியத்தை வெளியுலகிற்கு உணர்த்தி நின்றது. இதேபோல், மகிந்த
தலைமையிலான அரசின் சர்வாதிகார ஆட்சியும் குடும்ப ஊழல்களும் கொலையும் கொள்ளையும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் ஆட்சி மாற்றத்தின் தேவையை வலியுறுத்தியது.
இந்தக் கூட்டு முயற்சியின் காரணமாகவே மகிந்த அகற்றப்பட்டு மைத்திரி ஜனாதிபதியாக்கப்பட்டார். இந்த ஆட்சி மாற்றப்போரில் ஜனாதிபதி மாற்றம் என்பது ஜனநாயக யுத்தத்தின் ஒரு பகுதி மாத்திரமே. எனவே, புதிய பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடாத்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதன் மூலமாகவே முழுமையான ஜனநாயக யுத்தத்தை வென்றதாக முடியுமென்றதுடன், மேற்சொன்ன எல்லோரது நலன்களையும் காப்பாற்றவும் முடியும்.
அந்த வகையில் 2015 ஓகஸ்ட் மாதத் தேர்தலில் ரணில் மைத்திரி கூட்டு ஆட்சி அமைத்துள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அமெரிக்க அரசுகளுக்குள்ளது.
அதே சமயம், யுத்தகாலத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஐ.நாசபை தவறிவிட்டது என்பதை ஐ.நாவே ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையிலும், அதேபோன்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தின் ஆணையாளராகச் செயற்பட்ட திருமதி. நவநீதம்பிள்ளை அவர்கள், ‘எமது நடவடிக்கைகள் மெதுவாக இருந்தாலும் யுத்தக் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்கள் தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
அவரைத் தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட ஐ.நா.மனிதவுரிகைள் ஆணையகத்தின் புதிய ஆணையாளர் அவர்கள் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பாக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவிகளைப் பெற்றுக்கொண்ட இந்திய, அமெரிக்க நாடுகள் தமது சொந்த நலன்களைப் பாதுகாக்கும்பொருட்டு, இப்பொழுது இலங்கையை சர்வதேச தளங்களில் பாதுகாக்க வேண்டியிருப்பதால் இலங்கை அரசிற்குச் சாதகமான ஒருபுறச்சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்து, மிக மோசமான போர்க்குற்றங்களுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை இப்பொழுது அமெரிக்கா செய்ய ஆரம்பித்திருக்கின்றது.
ஈழ தமிழ் மக்களின் மனிதாபிமான கோரிக்கையான சர்வதேச விசாரணை என்பது நிராகரிக்கப்பட்டு உள்ளக விசாரணை ஒன்றை ஏற்படுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகின்றது. இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு செப்ரெம்பரில் ஜெனிவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கைகள் வெளியிடப்பட்டதன் பின்னர், அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.
இங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்குபற்றி நோக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மிக நீண்டகாலமாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்தது. மாவை, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோரும் தேர்தல் பிரச்சார மேடைகளில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்திருக்கின்றனர். சர்வதேச விசாரணை இல்லாமல் யுத்தக் குற்றங்களுக்கு இலங்கையால் பொறுப்புக்கூற முடியாது. யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவும் முடியாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. ஆனால், சர்வதேச விசாரணையொன்றின் ஊடாக மேற்சொன்ன எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதற்கான மக்கள் ஆணை வேண்டும் என்று கேட்டே தேர்தலில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்று தமிழ் மக்களின் நலன்கள் புறந்தள்ளப்பட்டு அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்பட்டால் போதுமென்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், திருவாளர்கள் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை ஆகியோரின் நடவடிக்கை எவ்வாறு அமையப்போகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈபிஆர்எல்எவ், ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளும் அதனுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் ஒருபகுதி பாராளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர், தவிசாளர் உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்களும் அங்கத்துவக் கட்சிகளின் மாகாணசபை உறுப்பினர்களும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றபோது மேற்கண்ட மூவர் கொண்ட குழு மாத்திரம் அதனை நிராகரித்து உள்ளக விசாரணையைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்கள் மிகவும் அவதானத்துடன் கவனிக்க வேண்டிய ஒரு
செயற்பாடாகும்.
இங்கு ஜனநாயக விழுமியங்கள் புறந்தள்ளப்பட்டு, ஒரு சிறுகுழுவின் முடிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக தமிழ் மக்களின்மீது திணிக்கப்படுகின்றது இத்திணிப்புக்கள் ஆனது தமிழ் மக்களின் எதிர்காலத்தை அதள பாதாளத்திற்குத் தள்ளிவிடுமோ என்ற அச்சமும் எழுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவரான சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசுத் தலைவர்களுடன் ஒரு பேரம்பேசலில் ஈடுபட்டு, அந்தப் பேரத்;தின் காரணமாக தேசிய அரசை அங்கீகரிப்பதாகவும் அந்த தேசிய அரசை அங்கீகரிப்பதை வெளிப்படுத்துமுகமாக குழுக்களின் பிரதித் தவிசாளர் என்ற எந்தவிதமான பிரயோசனமுமற்ற ஒரு பதவியை எடுத்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தப் பதவியை தமிழ் மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்போகின்றாரா? அல்லது அந்நிய நாடுகளின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்போகின்றாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. உள்ளக விசாரணையை அமெரிக்கா வலியுறுத்துகின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்ட திரு.சம்பந்தன் அவர்கள் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் சர்வதேச விசாரணைக்கான நியாயங்களை எடுத்துரைத்தால் அது தமிழ் மக்களின் இழப்புக்களுக்கும், தியாகங்களுக்கும் ஒரு அர்த்தத்தை ஏற்படுத்துவதாய் அமையலாம். திரு.சம்பந்தன் அவ்வாறு செயற்பட வேண்டுமென்று தமிழ் மக்கள்
எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால் அவ்வாறான முயற்சிக்கு சிங்கள கடும்தேசியவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வருமென்பதும் அவர் இலங்கையைக் காட்டிக்கொடுத்த பயங்கரமான துரோகி என்றும் வர்ணிக்கப்படுவார். இந்த சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் எதிர்ப்பு என்பது திரு.சம்பந்தனின் பதவியைப் பறிப்பதிலும் போய்முடியலாம்.
இவ்வாறான ஒரு சூழலில், தமிழ் மக்களின் நலன்களை திரு.சம்பந்தன் காப்பாற்றப்போகின்றாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பதவியைக் காப்பாற்றப்போகின்றாரா என்பதை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
-http://www.tamilwin.com