இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி த.தே.கூ உறுப்பினர்கள் ஜெனீவா பயணம்!

sivajilingamஇலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில்…

…சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று ஜெனீவாவுக்கு செல்லவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவிருப்பதால், அதற்கு முன்னராக குழுவொன்று ஜெனீவா செல்லவிருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தானும், மற்றொரு வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனும் ஜெனீவா செல்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தம்முடன் இணையவிருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி மோதல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துவதில் தமக்கு நம்பிக்கையில்லையென்பதையும், சர்வதேச விசாரணையொன்றே நடத்தப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்த தாம் எதிர்பார்த்திருப்பதாகவும், ஜெனீவாவில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை வலியுறுத்த விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண சபை அண்மையில் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளது.

-http://www.puthinamnews.com

TAGS: