வட மாகாண சபையில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான இரண்டு தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்ப ஏற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை தமிழ் மக்கள் இலங்கையில் எதிர்கொண்டுள்ள ஒடுக்குமுறை சார்ந்த இரு தீர்மானங்கள் 47 உறுப்பு நாடுகளிலும் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானங்களை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கொண்டு செல்லவுள்ளார். இந்த தீர்மானங்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கையெழுத்திட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
வட மாகாண சபையிலிருந்து குழுவொன்றை அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது சாத்தியமாகவில்லை என்று தெரிவித்த சிவாஜிலிங்கம் தனிப்பட்ட ரீதியில் உறுப்பினர்கள் சிலர் செல்லத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவா சென்று கூட்டத் தொடரில் பங்கெடுக்கவுள்ளனர். குறித்த உறுப்பினர்களுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கூட்டத் தொடரில் சமர்பிக்கும் பொருட்டு முதலமைச்சர் அதில் ஒப்பமிட்டுள்ளார்.
-http://www.athirvu.com