தமிழர்களை மீண்டும் கைவிடும் ஐ.நாவும் தமிழர்களுக்கு முன்னுள்ள பணிகளும்..

un-assembly-100x80வன்னி பெருநிலப்பரப்பில் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வந்த ஐ.நா உட்பட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், சிறீலங்கா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் 2008 செப்டெம்பர் 16 ம் திகதி வன்னியை விட்டு வெளியேறின.

இந்த வெளியேற்றம் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முப்பதாவது கூட்டத்தொடர் நாளைய தினம் (செப்டெம்பம் 14) ஆரம்பமாகிறது.

தான் முன்னெடுக்கவிருக்கின்ற வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது மனிதப் பேரழிவுகள் இடம்பெறும் என்பதை சிறீலங்கா அரசாங்கம் தெளிவாக உணர்ந்திருந்தது. அதனாலேயே, சர்வதேச சாட்சிகளற்ற போரை நடாத்தும் முகமாக ஐ.நா உட்பட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தது. இதன் காரணமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தவிர்ந்த ஏனைய அனைத்து சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் வெளியேறின.

மாபெரும் மனிதப் பேரவலம் ஒன்றிற்கான ஒரு முன்னேற்பாடே இது என புரிந்து கொண்ட தமிழ் மக்கள், ஐ.நாவை வன்னிப் பெருநிலப்பரப்பை விட்டு வெளியேற வேண்டாம் என கெஞ்சினார்கள், கதறினார்கள். தம்மை போகவேண்டாமென கேட்டு, போர் வலயத்துக்குள் இருந்த தமிழ் மக்கள் சிந்திய கண்ணீரையும், தாம் வெளியேறுவதால் ஏற்படப் போகும் விளைவுகளையும் கருத்தில் கொண்டு சில ஐ.நா பணியாளர்கள வெளியேறுவதற்கு தயக்கம் காட்டினார்கள். ஆனால், ஐ.நா. தலையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர்களும் வெளியேற வேண்டிய சூழல் உருவானது.

நடைபெற்றுக் கொண்டிருந்த போரின் கொடூரத்தையும், காத்திருக்கும் பேராபத்தையும், ஓடப்போகும் இரத்த ஆறையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், மனியநேயப் பணியாளர்களும் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும், அவர்களின் எச்சரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. சுமார் 7,500 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்ற தகவல் ஐ.நாவின் கசிந்த ஆவணம் ஒன்றினூடாக தெரியவந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஐ.நாவின் இலங்கைத் தீவுக்கான அன்றைய சிறப்பு தூதுவரான ஜோன் ஹொல்மெஸ், நாம் சடலங்களை எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இரத்த ஆறு ஒடுவதை தவிர்ப்பதற்காகவே பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என்றார். சிறீலங்கா அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அமைவாகவே, கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை உத்தியோகபூர்வமாக வெளியிடாமல் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் பின்னர் வெளிவந்தது. ஐ.நாவின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் விசனமடைந்த ஐ.நாவின் இலங்கைக்கான பேச்சாளராக அன்றைய காலப்பகுதியில் பதவி வகித்த கோடன் வைஸ் அவர்கள் ஐ.நா பணியிலிருந்து போருக்குப் பின்னர் பதவி விலகினார்.

இனஅழிப்பு போரின் கொடூரத்தை அனுபவித்து கொண்டிருந்த மக்கள் சர்வதேச சமூகம் தம்மை காப்பாற்றும் என நம்பிக்கையோடு இருந்தனர். தாயகத்தில் வாழும் குரலற்ற மக்களின் குரலாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியான போராட்டங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈடுபட்டனர். தமிழர்களின் அவலக்குரல் கணிசமானளவு சர்வதேசமயப்படுத்தப்பட்டாலும், இனஅழிப்பிலிருந்து தமிழர்களை காப்பாற்ற முடியாமற் போய்விட்டது.

முடிவு 146, 679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என தெரியாமல் அவர்களின் உறவுகள் இன்றும் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். மார்ச் 2011 வெளியான ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பிரகாரம் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் போரின் இறுதி காலப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் 2012 வெளியிடப்பட்ட ஐ.நாவின் இடைக்கால மீளாய்வு குழு அறிக்கையின் படி, அண்ணளவாக 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் தோல்வியென ஐ.நா செயலாளர் நாயகம் தொடக்கம் உலகின் பல தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் தோல்வியிலிருந்து பாடத்தை கற்கவில்லை என்பது மட்டுமல்ல அவர்களை நம்பியிருந்த தமிழ் மக்களை மீண்டும் கைவிட்டு விட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் குமுறத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஐ.நாவின் அறிக்கைகள் தமிழ் மக்களின் இழப்புகளை குறைத்தே வெளிக்காட்டுகின்றது என சுட்டிக்காட்டும் தமிழ் தரப்புகள், சுமார் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நான்காம் ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டதை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அத்துடன், உண்மை தெரியவேண்டும் நீதி கிடைக்க வேண்டும் என்றால் அது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினூடாகவே சாத்தியப்படும் என கூறி தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஆனால், கடந்த சனவரி மாதம் சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக, மேற்குலகை மையமாகக் கொண்ட சர்வதேச சமூகமோ, ஐ.நாவோ சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து தம்மை மாற்றுநிலையாக்கம் செய்திருக்கிறார்கள். ஆழமான அரசியல் பார்வை கொண்டவர்களுக்கு இது அதிர்ச்சியோ ஆச்சரியமோ அளிக்காவிட்டாலும், அவலத்தை சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது பேரதிர்ச்சியே. பூகோள அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவமும், அதற்கமைவாக தமிழ் அரசியல் தரப்புகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளும் தொடர்ச்சியாகவும் நீண்டகாலமாகவும் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. ஆயினும் பொறுப்பானவர்கள் அதனை கருத்தில் எடுக்காததன் விளைவால், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஏக்கத்தோடு வாழவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளிவர இருக்கிற அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினதும் நீதிக்காக போராடிக் கொண்டிருப்போரினதும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப் போவதில்லை. மாறாக, சிறீலங்கா அரசாங்கத்தினதும் அவர்களை பலப்படுத்துவதற்காக பணியாற்றுவோரினதும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே அமையப் போகிறது. ஆதலால், உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்படுவது தடுக்கப்பட முடியாத விடயமாகியுள்ளது.

இத்தகைய சூழலில், தமிழர்கள் என்ன செய்யலாம்?

1. சிறீலங்காவின் உள்கப் பொறிமுறையை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம் என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படுத்துவது நன்று. இதற்கமைவாக மக்கள் மயப்பட்ட அறவழிப் போராட்டங்களை தமிழர் தாயமெங்கும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் நடாத்துதல்.

2. சிறீலங்காவின் உள்ளகப் பொறிமுறையென்பது நம்பகத்தன்மையற்றது என்பதை நிரூபித்தல்.

3. சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்தல்.

4. சிறீலங்கா அரசால் தமிழர்களின் சனநாயக ரீதியிலான போராட்டங்கள் தடுக்கப்படுவதையும், அவர்களின் சனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதையும் உடனுக்குடன் வெளிக்கொணரல்.

5. இனஅழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தினரை போரின் கதநாயகர்களாக கொண்டாடும் சிறீலங்கா அரசின் செயற்பாடுகளையும், குற்றவாளிகளே நீதிபதிகளாக மாற்;றப்பட்டுள்ளதையும் வெளிக்கொணர்தல்.

6. உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால், நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்குமான சர்வதேச பொறிமுறை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை செயற்பாடுகளின் மூலம் பலப்படுத்தல்.

7. சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தை வலுப்படுத்தல்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் விரைவாக சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டும். இதற்காக தாயகம், தமிழகம், புலம்பெயர் தேச மக்கள் பொதுத் தளத்தில் ஒன்றிணைய வேண்டும். தமிழர்களின் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்படுகின்றமை அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதோடு, சிறீலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தத்தை உண்டு பண்ணும். இதன் காரணமாகவே, தமிழர் விவகாரத்தை உள்நாட்டு மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சிறீலங்காவின் புதிய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

நிர்மானுசன் பாலசுந்தரம்
[email protected]

-http://www.puthinamnews.com

TAGS: