வெளிநாட்டு நீதிபதிகளினால் உள்ளக விசாரணை நடந்தால் மட்டுமே தமிழருக்கு நீதி கிடைக்கும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

vikneswaran01வெளிநாட்டு நீதிபதிகளின் குழுக்கள் கொண்ட குழுவினரால் உள்ளக விசாரணை நடைபெற்றால் மட்டுமே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும். இல்லாவிட்டால் நீதி கிடைக்காது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஐ.நா. விசாரணை வேண்டுமென வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையான நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த நடைபயணம் நேற்று யாழ்ப்பாணத்தினை வந்தடைந்த பின்னர் நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

அந்த மகஜரை பெற்றுக் கொண்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உங்களின் வேதனைகளை நன்கு அறிவேன். அதனால்தான், காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, இனப் படுகொலை சம்பந்தமான அறிக்கைகளையும், தீர்மானமாக நிறைவேற்றியதுடன், உரியவர்களிடம் அறிக்கைகளை சமர்பித்துள்ளோம்.

நீதிமன்றில் இருக்கும் போது, குற்றவாளிகளை விசாரித்து தண்டனைகளை வழங்குவோம், இது அரசியலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவ்வாறு வழங்க முடியாது.

அதேபோன்று நாட்டின் நன்மைகளை பார்த்தே நடவடிக்கை எடுக்கின்ற காரணத்தினால் தான், காணாமல் போனோர்கள் மற்றும் சர்வதேச நீதி விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளை எப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால், தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, மிகப்பெரியளவிலான வெற்றியைக் கொடுத்த பட்சத்தில், அரசியல் கைதிகளை சரி பெருவாரியாக விடுதலை செய்திருக்கலாம்.

இவ்வாறான சர்வதேச விசாரணைகள் மற்றும் போராட்டங்கள் வரும் போது, நாங்கள் அதைச் செய்கின்றோம். இதைச் செய்கின்றோம் என மழுங்கடிப்பதற்காக அனைத்து விடயங்களையும் இவ்வாறு அரசாங்கம் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையினை மேற்கொள்ளலாம் தானே என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் வினவிய போது, சர்வதேச விசாரணையினை எடுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அதனால், சர்வதேச விசாரணை மேற்கொள்ள முடியாது என்றும், அதனால் தான் இலங்கையில் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்றும் முதலமைச்சர் கூறினார்.

உள்ளக விசாரணையினை மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட குழுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். உள்ளூர் நீதிபதிகளின் கருத்துக்களுக்கு மாறாக வெளிநாட்டு நீதிபதிகள் கருத்துக் கூறக் கூடிய நிலையினை அமைக்க வேண்டும்.
அத்துடன் வெளிநாட்டில் இருந்து சுதந்திரமான வழக்கு நடத்துநர் ஒருவரையும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும்.

உள்நாட்டில் சட்டங்கள் இல்லை என்றால் அதற்கு ஏற்ற சட்டங்களை இங்கு உருவாக்க வேண்டும். இவ்வாறு வெளிநாட்டு அனுசரணையுடன், முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே, தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் இல்லாவிட்டால் நீதி கிடைக்காது.

ஏனெனில், ஒரு பாதையின் கீழ் பயணித்தால் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் அதேவேளை, உள்நாட்டு பொறிமுறையின் கீழ் எந்த விசாரணை நடைபெற்றாலும், இங்குள்ள நீதிபதிகளைப் பற்றி எமக்கு தெரியும். பெரும்பான்மையான நீதிபதிகள் பற்றியும், சிறுபான்மை நீதிபதிகளைப் பற்றியும் நன்றாக தெரியும்.

பெரும்பான்மை நீதிபதிகளை விட அதிகமாக சிறுபான்மை நீதிபதிகள் அதிகமாக பயப்படுவார்கள். இந்த விதத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய நீதியைப் பெற்றுத் தரக்கூடிய வகையில் அந்தப் பொறிமுறை அமைந்தால் அந்த உள்நாட்டு விசாரணைக்கு செல்வது வேலையற்ற ஒரு விடயம் என்றார்.

எனவே, தான் சர்வதேச பொறிமுறையினை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றோம். அதனை வலியுறுத்தி நீங்களும் நடை பயணத்தினை மேற்கொண்டு வந்துள்ளீர்கள். இதை உரியவர்களுக்கு அனுப்புவோம்.

ஆனால் எந்த அளவிற்கு நன்மை கிடைக்குமென்று தெரியாது. அதற்கு மேல், எமது கடமைகளை சரியாக செய்து வருவதாகவும், வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமது பிரச்சினை என்னவென்று வெளியுலகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கின்றது.

ஆனால், பல அரசியல் காரணங்களின் நிமித்தம் சில தடங்கல்களும் கட்டுப்பாடுகளும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: