இந்தியா தொடர்ந்தும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்கும்! இந்தியப் பிரதமர் மோடி

sl_ranil_in_modi_001இலங்கை இராணுவத்திற்கான பயிற்சிகளை இந்திய அரசாங்கம்  தொடர்ந்தும் வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் பயணமாக நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்தார்.

இன்று காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டுப் பிரதமர்களும் கூட்டாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து தமது சந்திப்புத் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இதன் போது இந்தியப் பிரதமர் குறிப்பிடுகையில்,

இந்திய – இலங்கை உறவில் இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கது. முதலில் இலங்கை இலங்கை மைத்திரிபால சிறிசேன பதவியேற்பிற்கு பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார்.

பின்னர், நான் இலங்கை சென்றேன். தற்போது, இலங்கை பிரதமர் ரணில் இந்தியா வந்துள்ளார்.

இந்தியா – இலங்கை நட்புறவு மிகவும் வலுவானது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் அந்நாடு அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துவருகிறது என்பதை உணர்த்துகின்றன.

இலங்கை அரசு அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதோடு, இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை தலைவர்களின் சீர்தூக்கிய அறிவாலும், அவர்களது உயரிய எண்ணங்களாலும் அந்நாட்டில் உண்மையான அமைதி உடன்படிக்கை ஏற்படுவதுடன் வளர்ச்சியும் ஏற்படும் என நம்புகிறோம்.

இலங்கையின் வளர்ச்சி தெற்காசிய பிராந்திய வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, இந்தியா – இலங்கை கடல்சார் நட்புறவுக்கும் வித்திடும்.

இருநாட்டு நட்புறவு குறித்து எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்தது. பொருளாதார உடன்படிக்கைகள் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உதயமாகியுள்ளது.

இலங்கையில் கட்டுமானம், எரிசக்தி, போக்குவரத்து துறையில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இலங்கைப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

அதேபோல், இலங்கையின் உட்கட்டுமானம், ரயில்வே, எரிசக்தி, சமூக மேம்பாட்டு திட்டங்கள், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் நட்புறவு தொடரும்.

பாதுகாப்பு பயிற்சித் துறையில் இலங்கை, இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகத் திகழ்கிறது அந்தவகையில் இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு துறைசார் பயிற்சி வழங்கும்.

இந்தியா – இலங்கை பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா இலங்கை கூட்டுறவு தீவிரப்படுத்தப்படும். கடல் எல்லையில் இருநாட்டு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

இலங்கை, இந்திய மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம். மேலும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தினேன்” எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: