இங்கு விசாரணை செய்ய முடியாது என சர்வதேச நீதிபதிகளே ஓடுகின்றனர்! உள்ளக விசாரணையில் எவ்வாறு நம்பிக்கை வரும்?- சம்பந்தன்

sampanthan_003திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை மற்றும் மூதூரில் 17 தொண்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை போன்றவற்றுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிட்டவில்லை.

இந்த விசாரணையின் பொருட்டு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்பட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாதென்று அவர்களே ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் உள்ளக விசாரணை தொடர்பில் தமிழர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை பிறக்கும்? என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீரும் வரை எதிர்க்கட்சியிலேயே நான் இருக்க விரும்புகின்றேன். நான் முதலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். அடுத்து நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எனக்கு எதிர்க்கட்சி பதவியென்பது இதனால் தான் கிடைத்தது என்றும் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பிரச்சினைகள் வெளிப்பாட்டு களத்தில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நான் 33 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றேன். பல சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்கள் என்னை விலை பேசினார்கள். எனினும், நான் விலைபோகவில்லை விலை போகவும் மாட்டேன்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு எதிரான நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை எதிர்க்கட்சியிலேயே நான் இருக்க விரும்புகின்றேன். தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறுவதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலக்காக இருக்கும்.

உள்ளக விசாரணையின் மீது தமிழ் மக்களுக்கு என்றுமே நம்பிக்கையில்லை என்பதினாலேயே சர்வதேச விசாரணையினைக் கோரி வந்துள்ளார்கள்.

உதாரணமாக, 2006ம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், மூதூரில் 17 தொண்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக உள்ளூர் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை.

இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்தியாவின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசரும் ஏனைய சர்வதேச நீதிபதிகளும் நியமிக்கப்பட்டும் கூட தீர்வு காணப்படவில்லை.

நேர்மையான விசாரணை செய்ய முடியாது என்று அவர்களாகவே விலகிச் சென்றுள்ளார்கள். எனவே தான் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என மக்கள் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாகவே வட மாகாணத்திலும் , தமிழகத்திலும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய மனித உரிமை ஆணையாளரும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இறுதி யுத்தத்தின் போது அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எனவே இதற்கு ஒரு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதையே அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமைப் பேரவையும் சர்வதேச சமூகமும் அக்கறை காட்டி வருகின்றன.

எனவே இச்சந்தர்ப்பதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: