ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானதன் பின்னர் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அனைத்து தரப்புக்களினாலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்தவகையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா பிரேரணையை தாக்கல் செய்துள்ளது.
அத்துடன் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அமெரிக்க பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அது தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரிலும் பரந்துபட்ட அறிக்கையை 34 ஆவது கூட்டத் தொடரிலும் முன்வைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையையும் அமெரிக்க பிரேரணை கோரியுள்ளது.
மேலும் மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தண்டனை விதிக்க உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துதல் என்பனவும் அமெரிக்காவின் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் தரப்பு எதிர்பார்த்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் அமெரிக்கா பிரேரணையை தயாரித்து தாக்கல் செய்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை நகல் வரைபு கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
அத்துடன் கடந்த திங்கட்கிழமை உறுப்பு நாடுகளுக்கும் இந்த திட்ட வரைவு விநியோகிக்கப்பட்டது. அதன் பின்னர் மனித உரிமை பேரவை வளாகத்தில் உப குழுக் கூட்டம் ஒன்றை நடத்திய அமெரிக்கா இந்த பிரேரணை வரைவு தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளித்திருந்தது.
எனினும் அதன்போது ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அமெரிக்க பிரேரணையின் நகல் வரைவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் அதில் உள்ள விடயங்கள் இலங்கையின் உள்ளக செயற்பாட்டில் பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
அதற்கு மேலதிகமாக பிரேரணை வரை வின் வலிமையை குறைப்பதற்கு இலங்கைக்கு ஆதரவான சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் முயற்சித்து வந்தன. எனினும் மறுபுறம் ஐரோப்பிய நாடுகள் பிரேரணை வலுவிழக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வந்தன.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலேயே அமெரிக்கா இலங்கை குறித்த தனது பிரேரணையை வலிமை மிக்கதாக சர்வதேச மற்றும் பொதுநலவாய நீதிபதிகள் உள்ளடக்கப்படுகின்ற விசாரணை பொறிமுறையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த செயற்பாடு பாராட்டப்படவேண்டியதாகும்.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து மெசடோனியா, பிரிட்டன், மொன்டனெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக தயாரித்துள்ளன.
மேலும் முன்னைய பிரேரணை வரைபைவிட புதிய திருத்தப்பட்ட பிரேரணையில் பல விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திட்ட வரைவில் காணப்பட்ட 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும். ஆனால், பிரதான மற்றும் முக்கிய விடயங்களில் எந்த மாற்றத்தையும் அமெரிக்கா செய்யவில்லை என்பது ஆறுதலான விடயமாக அமைந்துள்ளது.
இதேவேளை, பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகர மான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய பிரேரணையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் நீதித்துறைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்நீதிமன்ற செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், சர்வதேசத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பூரண பங்களிப்பை வழங்கவுள்ளது என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் இப்பிரேரணையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனூடாக கடந்த காலத்தில் காணப்பட்ட நிலைமைகளில் வியத்தகு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளது.
இந்த வரைவில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கான நீண்ட பயணத்தை ஆரம்பிக்க முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளது.
உண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை குறித்து நடத்திய விசாரணையின் அறிக்கையிலும் தற்போது அமெரிக்கா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்துள்ள பிரேரணையிலும் கிட்டத்தட்ட தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே, இதனை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாடுகளை பதவியேற்றுள்ள கருத்தொருமைவாத புதிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.
புதிய அரசாங்கம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் சர்வதேசத்துக்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை மற்றும் அமெரிக்காவின் பிரேரணை என்பன வலியுறுத்தும் விடயங்கள் குறித்தும் அரசாங்கம் கவனத்தில் எடுத்து இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக்காண முன்வரவேண்டும்.
அமெரிக்க பிரேரணை இன்னும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அதனை மேலும் வலுவிழக்கச் செய்வதற்கான சாத்தியங்கள் இன்னும் காணப்படுகின்றன என்பதனை மறுக்க முடியாது. இந்த விடயத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை முன்னெடுத்தாலும் அது யுத்தத்தினாலும் மனித உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே, இந்த உணர்வுபூர்வமான விடயத்தில் சர்வதேச சமூகம் அரசியல் செய்ய முயற்சிக்கக்கூடாது. அந்தவகையில் இதுவரை அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளும் முன்வைத்துள்ள பரிந்துரைகளும் தமிழர் தரப்பில் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் அந்த செயற்பாடு தொடர்ந்து யதார்த்த ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வரையான பயணத்தை தொடரவேண்டும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தமது பங்களிப்பை உரிய முறையில் செலுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நீதி வழங்கும் செயற்பாடு தொடர்ந்தும் தாமதமடைவதற்கு இடமளிக்க முடியாது என்பதனை அனைவரும் கவனத்திற்கொள்ளவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
-http://www.tamilwin.com
இத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர வாழ்த்துக்கள்!!!