இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து: இந்தியா நம்பிக்கை

modi-srisenaஇலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர்.

இருவரும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு இந்தச் சந்திப்பு தனியாக நடைபெற்றது.

அப்போது, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்நிலையில், மோடி – சிறீசேனா சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அதேவேளையில், இலங்கையின் இறையாண்மைக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.

இந்த இரு விஷயங்களையும் ஒருசேர அணுகும் புதிய வழிமுறை கண்டறியப்படும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கையில், புதிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது என்றார் அவர்.

“இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்குமா?’ என்ற கேள்விக்கு, விகாஸ் ஸ்வரூப் பதிலளிக்கையில்:

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப் பொறுத்தவரையில், எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படக் கூடிய ஒருமித்த தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஆகும். அந்தத் தீர்மானம் இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

போர்க்குற்றத்துக்கு எதிராக சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஸய்த் ராத் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்தார். ஆனால், உள்நாட்டு விசாரணைக் குழுவே போதுமானது என இலங்கை அரசு கூறி வருகிறது.

-http://www.tamilwin.com

TAGS: