கலப்பு நீதிமன்றமா? அல்லது பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா? என்ற கேள்வியை அமெரிக்காவின் பிரேரணை தற்போது ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இரண்டுமே சர்வதேச நீதித்துறையை சேர்ந்தவை என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
விசாரணைக்குழு அறிக்கையில் ‘ஹைபிரிட்’ எனப்படும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையையே பரிந்துரை செய்துள்ளது. அதற்கென சர்வதேச நீதிபதிகள் சர்வதேச விசாரணையாளர்கள் சர்வதேச சட்டவாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை தொடர்கின்றது.
அந்த நீதிமன்றத்திற்கென புதிய சட்டவிதிகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் போர்க்குற்றங்களை விசாரிக்கும் சட்டவலு இலங்கையில் இல்லை என்றே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பொறிமுறை குறித்து போதிய விபரங்கள் காணப்படவில்லை. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் விசாரணை நடைபெற வேண்டும் என புதிய பந்தி ஒன்றையும் அமெரிக்கா இணைத்துள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்குழு அறிக்கையில் அது குறித்து ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பிரேரணை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. தமிழ் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் எதிர்பார்த்தது போல் இல்லை என்றாலும் மோசமான ஏமாற்றத்தை தரவில்லை என சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
ஆனால், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனீவா பிரதிநிதி ஜோன் பிஸர் கடுமையாகக் கண்டித்தார். விசாரணைக்குழு பரிந்துரைகளை மீறி அமெரிக்கா புதியதொரு பொறிமுறையை அறிவித்துள்ளது. இது ஏற்புடையதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் நீதியை எதிர்பார்க்கின்றார்கள். இழைக்கப்பட்ட குற்றங்களைப் புரிந்தவர் யார் ? அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை யாது? என்பதை அந்த மக்கள் கண்டிப்பாக அறிய வேண்டும் என்கிறார் ஜோன் பிஸர்.
சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும் என கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் பிரேரணை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதென என அவர் சாடியுள்ளார்.
எனவே, அமெரிக்காவின் பிரேரணை மீது திருத்தங்களைக் கொண்டு வருமாறு அவர் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலப்பு நீதிமன்றத்திலேயே இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.
பேரவைக் கூட்டத் தொடரின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள். பாகிஸ்தானும் சீனாவும் கடும் நிலைப்பாட்டை எடுத்திருந்தன.
இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டியதில்லை என அவ்விரு நாடுகளும் குறிப்பிட்டிருந்தன. விசாரணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளையும் அவை நிராகரித்தன.
ஆனால், பல நாடுகள் ஐ.நா. விசாரணைக்குழு பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் எனக் கோரினர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமும் நிவாரணமும் கிடைக்க வேண்டும் என்றும் அந்நாடுகள் குறிப்பிட்டன.
சுவிஸ், நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, பெல்ஜியம், பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. விசாரணை ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகளைப் பின்பற்றியே அமைய வேண்டும் என அவை சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்காவின் பிரேரணையில் 18 விடயங்கள் நீக்கப்பட வேண்டும் என ஏற்கனவே இலங்கை அரசு கோரி இருந்தது. ஆனால், தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணையில் புதிய சொற்கள் பல புகுத்தப்பட்டுள்ளன.
ஆனால், அமெரிக்காவின் புதிய பிரேரணை தமிழ் அமைப்புக்களையும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளன எனப் பரவலாக குறிப்பிடப்படுகின்றது.
ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரிய சிங்க ஆற்றிய உரை பலத்த கண்டனத்திற்கு இலக்காகியது. அவரின் உரைக்கும் அதற்கு முன்பு வெளிநாட்டமைச்சர் மங்களசமரவீர ஆற்றிய உரைக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் ஜெனீவா ஐ.நா. பணிமனையில் நடைபெற்று வருகின்றது. கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான இக்கூட்டத்தொடர் அக்டோபர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையை முன்னிறுத்தி அமெரிக்கா நாளை மறுதினம் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவுள்ளது. கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30ம் திகதி புதனன்று பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அன்றே வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது.
அமெரிக்காவின் பிரேரணையின் நகல் குறித்து பலரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பேசினர். ரவிநாத் ஆரியசிங்க பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் பிரேரணையின் முக்கிய பிரிவுகளை முற்றாக நிராகரித்தார்.
உள்நாட்டு விசாரணை பொறிமுறையையே தமது அரசு விரும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. விசாரணைக்குழு வெளிநாட்டு சட்டவாளர்களைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றே பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், ரவிநாத் ஆரியசிங்க தமது அரசு அதனை நிராகரிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் நகல் பிரேரணை ஆறுபக்கங்களில் 26 பந்திகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.
அதில் ஆரியசிங்க பதினெட்டு விடயங்களை அகற்றுமாறு கோரியதுடன் அமெரிக்கா பிரேரணை கண்டிப்பாகத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனை முதலில் சர்வதேச மன்னிப்பு சபை கடுமையாக விமர்சித்தது.
இலங்கை வெளிநாட்டமைச்சு மங்கள சமரவீர கூட்டத்தொடரின் முதல் நாள் ஆற்றிய உரைக்கும் இப்போது நீங்கள் ஆற்றிய உரைக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
இதனை நீங்களே ஆராய்ந்து கொள்ளலாம் என சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி பீட்டர் கெயின் பேரவைக் கூட்டத்தொடரின் போது சுட்டிக்காட்டினார். நடைபெற்றுள்ளது மிகப்பாரிய குற்றங்கள். அவை சர்வதேச நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில் ஜனநாயகத்தை குறிக்கும் எத்தனை சொற்கள் உண்டோ அத்தனையும் பாவித்தே மங்கள சமரவீர உரையாற்றினார். ஆனால், அதற்கு மாறாக, ரவிநாத் ஆரியசிங்கவின் உரை அமைந்ததாக பீட்டர் கெயின் குறிப்பிட்டார்.
இதேவேளையில் ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையை அமெரிக்கா பின்பற்ற வேண்டுமென அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த பதினொரு உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்றம் அமைப்பதை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பதினொரு பேரும் கையெழுத்திட்ட கடிதம் ஒபாமா நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயமும் நிவாரணமும் கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா கூடுதல் அக்கறை காட்டுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழக அரசின் சார்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் முக்கிய ஆவணமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதில் பதினான்கு இலட்சம் பேர் கையெழுத்திட்ட ஆவணப் பிரதிகள் அடங்கும்.
அதில் ஒரே ஒரு கோரிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. போரின் போது இடம்பெற்ற இனப்படுகொலை போர்க்குற்றம் ஆகியவை தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை தேவை அதனை ஐ.நா. சர்வதேச மனித உரிமை ஆணையகம் நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும்.
அதன் பிரதிகளை 47 உறுப்பு நாடுகளுக்கும் வழங்க ஆணையகம் ஏற்பாடு செய்து வருகின்றது. ஏற்கனவே இதன் ஒரு தொகுதி ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ காவல் துறையினர் ஜெனீவாவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சுவிஸ் காவல் துறையினருடன் இணைந்து காவலில் ஈடுபட்டிருந்தனரா என்ற செய்தி பரவலாக வெளிப்பட்டிருந்தது.
தமிழீழ காவல் துறையினரின் உத்தியோகபூர்வ உடையுடன் ஜெனீவாவில் பலர் காணப்பட்டனர். ஜெனீவா ஐ.நா. பணிமனையின் எதிரே புலம்பெயர் தமிழர்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
மிகவும் உத்வேகத்துடன் நடந்த பேரணி அது. உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழர்கள் அணி திரண்டிருந்தனர். குறிப்பாக சுவிஸ், பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நோர்வே, கனடா, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பெருந்திரளான மக்கள் அதில் கலந்து கொண்டனர்.
ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவிலிருந்து தமிழர் பேரணி கடந்த திங்களன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது. மூன்று மணியளவில் பேரணி ஐ.நா. பணிமனை எதிரே ஒன்று கூடியது.
அச்சமயம் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சர்வதேச தொண்டரமைப்பு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழு நிலை விவாதத்தில் பங்குபற்றியிருந்தனர்.
மண்டபத்திற்கு வெளியே பெருந்திரளான தமிழர்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களில் இளைஞர் குழுவொன்று ஐ.நா. பணிமனை வாயிலை நோக்கி நகர முற்பட்டது. இதனை கவனித்த சுவிஸ் அதிரடி காவல் துறையினர் தற்காப்புத் தடிகளுடன் நகர முற்பட்டனர்.
அப்போது அந்த இடத்தை நோக்கி பலர் தமிழீழ காவல் துறையினரின் உடையுடன் விரைந்தனர். அவர்கள் சுவிஸ் காவல் துறையினருடன் கதைத்து தாம் நிலைமையை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்றனர்.
இதனையடுத்து தமிழீழ காவல் துறையினர் குறிப்பிட்ட இளைஞர் குழுவை தடுத்து நிறுத்தி கூட்டம் நடைபெறும் பகுதியை விட்டு அவர்கள் நகராவண்ணம் காவலில் ஈடுபட்டனர். இளைஞர் குழுவினர் அவர்களை தள்ளிக்கொண்டு ஐ.நா. வாயிலை நோக்கிச் செல்ல முற்பட்டனராயினும் காவல் துறையினர் தடுப்பு வேலியாக செயற்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
பேரணியில் கலந்து கொண்ட பல தமிழர்கள் அப்போதுதான் அவர்களின் உடையை வைத்து அடையாளம் கண்டு கொண்டனர். பேரணி ஆரம்பம் முதலே அவர்கள் கூட்ட ஒழுங்குகளில் பங்கு பற்றி இருந்தனர்.
தமிழீழ விடுதலை புலிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் தமிழீழ காவல் படையின் நிர்வாகத்திறமை குறித்து சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் முன்பு வெளியாகி இருந்தன.
2009 ஆம் ஆண்டின் பின் முதற் தடவையாக ஜெனீவாவில் மீண்டும் தமிழீழ காவற்றுறையினர் உடையுடன் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் தமிழீழ காவல் துறையினர் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தந்த நாடுகளில் இடம்பெறும் கவனயீர்ப்புப் போராட்டங்களின் போது தமிழரை பாதுகாக்கும் பொறுப்பில் அவர்கள் ஈடுபடுவார்கள். அதனால், அந்தந்த நாடுகளின் காவல் துறையினரின் தேவையற்ற தலையீடுகளை தவிர்க்கலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
ஜெனீவா பேரணியின் போது கடந்த ஆண்டுகளில் ஒரு சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தன. அதன்போது சுவிஸ் அதிரடிப்படையினர் தலையிட்டு கண்ணீர்ப்புகை குண்டுகள் வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்கும் நோக்காகவே இம்முறை தமிழீழ காவல் துறையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்முறை ஜெனீவா பேரணியின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பேரணி தமிழர்களின் எதிர்ப்பை அங்கு பதிவு செய்தது.
இனப்படுகொலை போர்க்குற்றம் குறித்து விசாரணை செய்ய சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை அமைக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ அவசியம் குறித்து ஐ.நா. கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழீழ விடுதலை புலிகளின் தடை நீக்கப்பட வேண்டும் ஆகியவை உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழரின் பேரணி ஜெனீவாவில் இடம்பெற்றது. பேரணியின் போது அதன் பிரதி நிதி ஒன்று ஐ.நா. பணிமனை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இம்முறையும் தமிழீழ தேசிய கொடி ஐ.நா. முன்றலில் ஏற்றப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் தமிழீழ தேசிய கொடியை ஏந்திய வண்ணமே காணப்பட்டனர். போர் முடிந்து ஆறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை தமிழரின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
வி.ஆர்.வரதராஜா
ஊடகவியலாளர் ஜேர்மனி
நல்லாட்சி எனக் கூறப்படுகின்ற தற்போதைய அரசும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழீழம் ஒன்றே நிரந்தரமான தீர்வு என்ற முடிவு தற்போது மேலோங்க ஆரம்பித்துள்ளதாக பேரணியின் போது குறிப்பிடப்பட்டது.
ஜெனீவாவில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தின் போது சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சர்வதேச தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகள் உட்படப் பலரும் உரையாற்றினர்.
-http://www.tamilwin.com