ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்து!

genevaஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள்,
வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ,சாள்ஸ் நிர்மலநாதன், மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு எம்.பி. வியாழேந்திரன் ஆகியோர் ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் வடமாகாண சபை உறுப்பினரான எம். சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆர்னோல்ட் உள்ளிட்ட பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கு நடைபெறும் உப குழுக்கூட்டங்கள் வெளிப்புற சந்திப்புக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் சார்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்ற தமிழ் தரப்பு எம்.பி.க்கள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நியாயம் வழங்கப்படவேண்டுமென்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.

போர்க்குற்றம் குறித்து கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்தும் இலங்கை தமிழ் அமைப்புகள்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள்,  போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.

அதில் போர்க்குற்றம் குறித்து வெளிநாட்டு, உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.

ஆனால், இலங்கை அரசோ, உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம் என்று கூறிவிட்டது. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களும் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை.

இந்த நிலையில், போர் குற்றம் குறித்து கலப்பு நீதிமன்ற விசாரணைதான் நடைபெற வேண்டும் என்று இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது.

நான்கு தமிழ் கட்சிகள் மற்றும் பிற சிவில் சமூக குழுக்கள், ஐநா மனித உரிமை கவுன்சில் பரிந்துரை செய்தது போல கலப்பு நீதிமன்ற விசாரணையை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டு விசாரணையால் தங்களின் கவலைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: