ஹைபிரிட் நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கை குறித்த தீர்மான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க சிறந்த கட்டமைப்பு எதுவும் கிடையாது.
இலங்கை உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக போர்க் குற்றச் செயல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது.
இலங்கையின் உள்ளக நீதிமன்றக் கட்டமைப்பு சர்வதேச குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க உசிதமானவையல்ல.
எனவே முன்னர் வலியுறுத்தியதனைப் போன்றே சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறை அமைக்க வேண்டியது அவசியமானது.
குறிப்பாக கலப்பு நீதிமன்ற முறைமை பொருத்தமானதாக அமையும். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருகின்றது.
இந்த நிலைமையில் மாற்றம் கொண்டு வந்து மெய்யான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஹுசைன் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com