அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள்!

channel-4இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அமெரிக்க பிரேரணையின் பிரகாரம் நம்பகரமான மற்றும் பலன்தரக்கூடிய உள்ளக விசாரணையை முன்னெடுக்க முடியாது என்றும் அதற்கான உள்ளக படிமுறை இலங்கையில் இல்லை என்றும் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. உள்நாட்டிலும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என்பன இவ்வாறு உள்ளக விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை அரசாங்கமே வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதானது, எந்த வகையிலும், உள்ளக விசாரணையின் கட்டமைப்புசார் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாது.

இலங்கை அரச கட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு பொறிமுறையும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளாது என்று அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பத்தகுந்த கலப்பு நீதிமன்ற செயன்முறை ஒன்றை ஸ்தாபிப்பதற்குரிய ஏற்பாடுகள், சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பிரேரணையின் செயற்பாட்டு பந்தியின் 4ம் மற்றும் 6ம் பந்திகளில் போதுமான அளவு விதந்துரைக்கப்படவில்லை என கவலை கொள்கின்றோம் எனவும் இந்த அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஜெனிவாவில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இவ்வாறு அமெரிக்க பிரேரணை குறித்தும் உள்ளக விசாரணைக் கட்டமைப்பு தொடர்பாகவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக அரசாங்கம் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றிவிட்டு சாட்சிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளக விசாரணையை நடத்த தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு முழுவதும் அமைக்கப்படுமா? இவ்வாறான விடயங்களுக்கு பதிலளித்து உறுதிப்படுத்திவிட்டு உள்ளக விசாரணையை முன்னெடுத்தால் அது நம்பகரமானதாக அமையும் என கூறலாம். ஆனால் தற்போதைய நிலைமையில் இவ்வாறு நம்பகரமாக உள்ளகப் பொறிமுறை இடம் பெறும் சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ளக விசாரணை நடத்தப்படுமானால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அதில் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டில் ஈடுபடும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியங்களை திரட்ட தயாரா? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தவகையில் உள்ளக விசாரணை தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பாகவும் அதன் பரிந்துரைகள் குறித்தும் பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உள்ளக விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக கூறுகின்ற அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டத்திலும் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும் என்பதுடன் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியதும் அவசியமாகும்.

மேலும் தற்போது ஜெனிவாவில் உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் விளக்கங்களை அளித்துவரும் மன்னார் பெண்கள் அபிவிருத்தி மன்றத்தின் தலைவி செரின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 89,000 விதவை பெண்கள் வாழ்கின்றனர்.

ஆனால், இந்த இரண்டு மாகாணங்களிலும் இரண்டு இலட்சம் இராணுவ வீரர்கள் நிலை கொண்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு வடக்கு, கிழக்கில் நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் அவ்வாறு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றால் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளதால் இராணுவம் வடக்கில் நிலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அத்துடன் ஆயுத குழுக்களும் களையப்பட வேண்டும். அது மட்டுமன்றி வடக்கு, கிழக்குக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும். எனவே புதிய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு இராணுவத்தை வெளியேற்ற வேண்டியது அவசியமாகும் என்றும் மன்னார் பெண்கள் அபிவிருத்தி மன்றத்தின் தலைவி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அமெரிக்கப் பிரேரணை தொடர்பாகவும் உள்ளக விசாரணை குறித்தும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பினர் இதுகுறித்தான தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு மக்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது அவசியமாகும்.

யுத்தம் முடிவடைந்து கடந்த ஆறு வருட காலமாக உள்நாட்டில் நம்பகரமான உள்ளக விசாரணை எதுவும் நடத்தப்படாமை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமை என்பன காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையானது நம்பகரமாகவும் சுயாதீனமாகவும் சர்வதேச நியமங்களை கடைப்பிடிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் உள்ளகப் பொறிமுறையில் பலவீனமான ஏற்பாடுகள் இருந்துவிடக் கூடாது. இது தொடர்பில் சந்தேகம் கொண்டுள்ள மக்களுக்கு தெளிவை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட தரப்பினரின் மிக முக்கியமான பொறுப்பாகும்.

மேலும் அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கப் பிரேரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அதுதொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள தரப்பினருக்கு தெளிவுபடுத்தலை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அதுமட்டுமன்றி உள்ளக பொறிமுறை தொடர்பில் பல்வேறு தரப்புக்களால் எழுப்பப்பட்டுள்ள நியாயமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் பதிலளிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

-http://www.tamilwin.com

TAGS: